Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

திருக்கழுக்குன்றம் – யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள்

நிரஞ்சனா

மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள்.  

யார் இந்த கழுகுகள்?

பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் சாரூப பதவி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக சாயுச்சிய பதவி வேண்டும் என்று கேட்டுவிட்டார்கள்.

“நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி செய்வீர்கள்.” என்று சிவன் இவர்களுக்கு வரம் தந்தார். இவர்கள்தான் முந்தய யுகங்களில் சண்டன், பிரசண்டன் எனவும், சம்பாதி, சடாயு எனவும், சம்புகுந்தன், மாகுத்தன எனவும் இரண்டு இரண்டு பேராக கழுகுகளாக பிறந்து இறைவனை தொழுது வந்தார்கள். எட்டில் மீதி இரண்டு பேர் இந்த கலியுகத்தில் பூஷா, விதாதா என்ற இரண்டு கழுகுகளாக பிறந்து இன்றுவரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.

சரியாக பகல் பன்னிரெண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் திருக்கழுகுன்றம் வந்து பண்டாரங்கள் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறது என்பதை 03.01.1681 வருடம் டச்சுக்காரர்கள் இந்த அற்புத சம்பவத்தை ஆலயத்தின் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். மலை அடிவாரத்தில் வேதங்கள் நான்கு சிகரங்களாக இருப்பதால் வேதகிரி என்ற பெயர் பெற்ற இடத்தில் வேதகிரி ஈஸ்வரர் ஆலயத்தை இரண்டு வெள்ளை கழுகுகள் வட்டமிட்ட பிறகுதான் உணவே உட்கொள்கிறது. இந்த இரண்டு கழுகுகளும் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மதிய உணவு உண்ண திருக்கழுகுன்றம் வந்து உணவு சாப்பிட்டு, இரவு இராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்கிறது என்று ஸ்தல புராணம் சொல்கிறது. திருமூலச் சித்தரும் போகரும் சீனாவில் இருப்பார்கள் பிறகு சட்டென்று சதுரகிரியில் மக்களோடு மக்களாக நடந்து வருவார்கள் என்று சித்தர் வரலாறு கூறுகிறது. அதுபோல் இன்றுவரை  பௌர்ணமி அன்று, நடு இரவில் பல முனிவர்கள் சிவனை நினைத்து பஜனை செய்து கொண்டே சதுரகிரியை வலம் வருவதையும் அவர்களின் குரல் இனிமையாகவும் உடலை சிலிர்க்க வைப்பதாக இருக்கிறதென்று சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் உணர்கிறார்கள்.

இந்த இரண்டு கழுகர்களும் காசியில் குளியல், திருக்கழுகுன்றத்தில் உணவு ராமேஸ்வரத்தில் நித்திரை என்று இருக்கிறது. வேதகிரி ஈஸ்வரர் ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தை பல்லவ மன்னவன் மகேந்திர வர்மானால் மலையை குடைந்து உருவாக்கினார்.

இந்திரன், தண்ணீராலும், புஷ்பங்களாலும் வேதகிரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்யாமல் இடியாலேயே சிவனுக்கு பூஜை செய்கிறார். ஆனாலும் இன்றுவரை இந்த கோயிலுக்கு இடி-மின்னலால் எந்த பங்கமும் ஏற்படவில்லை. இதை ஒரு பாடலில் நிந்தாஸ்துதியாக சொக்கநாத புலவர் என்பவர் சொல்லி இருக்கிறார்.

வேதகிரிஸ்வரரை வணங்கிய பிறகு மலையை விட்டு இறங்கி வரும் போது பல அற்புத சிற்பங்களை காணலாம். மலையை விட்டு இறங்கி வரும் போது அடிவாரத்தில் சித்தாதிரீ கணபதியை வணங்க வேண்டும். அத்துடன் தாழக்கோயிலுக்குள் செல்ல வேண்டும். அங்குதான் அம்பிகையை தரிசிக்க முடியும். இந்த அன்னை திருபுரசுந்தரி என்னும் பெயரில், கேட்கும் எல்லா வரங்களையும் எந்த பாகுபாடு இல்லாமல் பக்தர்களுக்கு தருகிறாள். அதனால் “பெண்ணின் நல்லாள்” என்று திருஞான சம்பந்தர் இந்த இறைவியை போற்றுகிறார். இந்த ஸ்தலம் அப்பர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்ற பெரிய மாகான்கள் முனிவர்கள் பாதம் பட்ட இடம் என்பதால் இந்த ஸ்தலத்தில் நம் பாதமும் பட்டால் ஜாதக தோஷங்களும், துஷ்டசக்திகளால் உண்டாகும் துன்பங்களும் விலகியோடும். இரண்டு வெள்ளை கழுகரையும், வேதகிரிஸ்வரரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்து பல பாக்கியங்களை தடையின்றி பெற்று வளம் பெறுவோம்.  ♦

 

 © 2011  bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on May 30 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

4 Comments for “திருக்கழுக்குன்றம் – யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள்”

  1. Depika murthy

    aacharyamana information nice article…

  2. pandian alagu

    இரண்டு கழுகுகள் யுகம் யுகமாக வருவது ஆச்சரியம்தான்.

  3. Banumathy

    நான் அந்த கழுகுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் அற்புதம் இப்போதுதான் தெரியும்.

  4. Mageshwari kannan

    niranjana madam your articles r excellent..

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech