Friday 26th April 2024

தலைப்புச் செய்தி :

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், காலமானார்!

Director K Balachanderதிரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அர்ஜூன், மனோரமா, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைபிரபலங்களும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். சில மாதங்களுக்கு முன், பாலசந்தரின் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத்திணறல், வயோதிக பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென, சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிக்கலான நிலையை அடைந்தார். டாக்டர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, நேற்று இரவு காலமானார். இவருக்கு, மனைவி ராஜம், மகள் புஷ்பா கந்தசாமி, மகன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர். பாலசந்தர் இறந்தது அறிந்து, இயக்குனர், நடிகர்கள், சினிமா பிரபலங்களும் மருத்துவமனையில் கூடினர். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இன்று மாலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பாலசந்தர் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கே.பாலசந்தர் புரட்சிகரமான கருத்துகளை திரைப்படங்களில் துணிந்து கூறியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பட உலகிற்கு அறிமுகம் செய்தவர். கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் புகழின் சிகரத்தை அடைவதற்கு வழி வகுத்தவர். மாறுபட்ட திரைப்படங்களை வழங்கி ‘‘இயக்குனர் சிகரம்’’ என்ற பட்டத்தை பெற்றவர்.

தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடியில் கிராம முன்சீப்பாக இருந்த கைலாசம் அய்யர்-காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 9-7-1930-ல் பாலசந்தர் பிறந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நாடகங்கள் நடத்துவதில் நாட்டம் கொண்டிருந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘பி.எஸ்.சி.’ பட்டம் பெற்றார்.

1950-ல் சென்னையில் ‘அக்கவுண்டன்ட் ஜெனரல்’ அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வேலை பார்க்கும்போது அவர் கதை-வசனம் எழுதி இயக்கிய ‘மெழுகுவர்த்தி’, ‘மேஜர் சந்திரகாந்த்’ முதலான நாடகங்கள் புகழ் பெற்றன.

ஒருமுறை ‘மெழுகுவர்த்தி’ நாடகத்திற்கு தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., பாலசந்தரின் திறமையை பாராட்டினார். அதைத்தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பான ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது. தொடர்ந்து, ‘சர்வர் சுந்தரம்’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ‘நீலவானம்’ ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதினார்.

அடுத்து, மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, தாமரை நெஞ்சம், பூவா தலையா ஆகிய படங்களை இயக்கினார். 1969-ல் அவர் டைரக்ட் செய்த ‘‘இருகோடுகள்’’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர், சிவாஜி கணேசன் நடித்த ‘‘எதிரொலி’’ படத்தை இயக்கினார். பிறகு காவியத்தலைவி, புன்னகை, வெள்ளிவிழா அரங்கேற்றம் உள்பட பல படங்களை டைரக்ட் செய்தார்.

1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். இதேபோல், குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை ‘‘மூன்று முடிச்சு’’ மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ‘‘களத்தூர் கண்ணம்மா’’வில் அறிமுகமாகி பல படங்களில் சிறுவனாக நடித்து வந்த கமல்ஹாசன், வாலிப வயதை அடைந்ததும், ‘‘அரங்கேற்றம்’’, ‘அவள் ஒரு தொடர்கதை’’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்கள் அளித்து அவரை கதாநாயகனாக உயர வழி வகுத்தார்.

தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்தார். ரெயில் சினேகம், கையளவு மனசு போன்ற தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

டைரக்டர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த ‘‘ரெட்டைசுழி’’ படத்தில் நடித்து இருக்கிறார்.

பாலசந்தரின் ‘‘இருகோடுகள்’’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய படங்கள் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றன. ‘சிந்து பைரவி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘எதிர்நீச்சல்’, ‘அக்னிசாட்சி’, ‘தாமரை நெஞ்சம்’, ‘மரோசரித்ரா’, முதலான படங்கள் மாநில அரசு விருது, பிலிம்பேர் பரிசு முதலிய விருதுகளை வென்றுள்ளன.

பால்கே விருது

1974-ல் தமிழக அரசின் ‘‘கலைமாமணி’’ விருதை பெற்ற இவருக்கு, 1987-ல் மத்திய அரசு ‘‘பத்மஸ்ரீ’’ விருதை வழங்கியது. 2011-ல் பாலசந்தருக்கு சினிமா உலகின் உயரிய விருதான ‘‘தாதா சாகேப் பால்கே’’ விருது வழங்கப்பட்டது.

பாலசந்தர், ஏ.ஜி.எஸ்.ஆபிஸ் குமாஸ்தாவாகப் பணியாற்றிய போதே 31-5-1956-ல் திருமணம் நடந்து விட்டது. மனைவி பெயர் ராஜம். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், பிரசன்னா என்ற 2 மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கைலாஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

Posted by on Dec 24 2014. Filed under சினிமா, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech