Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி தரும் வெற்றி

நிரஞ்சனா

முகவரி: அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம்.

எப்போதெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரங்கள் உருவாகும். இதற்கு எடுத்துகாட்டாக பிரத்தியங்கிரா தேவி உருவானார். நல்லவர்கள் செய்யும் நல்லவற்றுக்கு துணை இருந்து, அவர்களை வெற்றியடைய செய்கிறாள். தீயவர்கள் இந்த தேவியை வணங்கினால் அவர்களுக்கு இந்த அம்மன் உதவி செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. நல்ல உள்ளத்தோடு வணங்கினால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதபடி நிழல் போல் தேவி துணை நின்று காப்பாள்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர்தான் பிரத்தியாங்கிர தேவி. ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றினார். தேவி தன் சக்தியால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை தன்னுள் விழுங்கி, ஸ்ரீநரசிம்மரை அமைதிப்படுத்தி, அவரின் உக்கிரத்தை ஸ்ரீபிரத்தியங்கிரா ஏற்று, இன்றுவரை உக்கிரத்தின் உச்சியில் இருக்கிறார். சிவனால் தோன்றியதால் இந்த அம்மனுக்கு “சரபேஸ்வரி என்ற பெயரும் இருக்கிறது.

ஸ்ரீராமரை வீழ்த்த “நிகும்பலா யாகம்” செய்த இந்திரஜித்

இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, இராம-இராவண யுத்தம் நடந்தது. அந்த போரில்  பலரை இழந்தான் இராவணன். இருந்தாலும் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போர் களம் அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது. தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். தன்னுடைய தவறுக்கு பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி அட்டைபோல்  அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். புலி வாலை பிடித்த கதையாகிவிட்டதே என்று நினைத்த இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது. அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரிஜித், “ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தன்” என்று ஞாபகம் வந்தது. அதை வைத்து ஒரு திட்டம் தீட்டினான் இராவணன்.

இந்திரிஜித்திடம் சொன்னான், “நீ ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீபிரத்தியங்கிர தேவிக்கு நிகும்பலா யாகம் நடத்து. இந்த யாகம் செய்த பிறகு யாராலும் உன்னை வீழ்த்த முடியாது” என்றான் இராவணன்

தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான நிகும்பலா யாகம் யாகம் செய்தான் இந்திரஜித்.

ஸ்ரீராமரை எச்சரித்த அனுமார்

இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்தார் ஆஞ்சனேயர். உடனே இராமரிடம் விரைந்து வந்தார்.  “தங்களை வீழ்த்த இந்திரஜித் “நிகும்பலா யாகம்” செய்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான்” என்று அனுமார் ஸ்ரீராமரிடம் எச்சரிக்கை செய்தார். இதை கேட்ட ஸ்ரீராமசந்திரர்,

“கவலை வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணை இருப்பாள். நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்தான். அதனால் அவனுக்கு தேவி துணை இருந்தாள். ஆனால் இன்றோ அவன் தவறான காரியத்துக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற மாட்டான்.“ என்று கூறிய  ஸ்ரீராமர், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார்.

“ஸ்ரீஇராமர்-இந்திரஜித் ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இவர்களில் யாருக்கு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்?” என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தது.

ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள்.

“இந்திரஜித். நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். ஆனால் ஏன் உன் புத்தி இப்படி மாறியது.? தந்தையாக இருந்தாலும் இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா.? நிகும்பலா யாகம் செய்தாலும் உன்னிடம் நியாயம் இல்லை. ஆகவே நான் உனக்கு துணை இருக்கமாட்டேன். இருந்தாலும் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும்” என்று ஆசி வழங்கினாள் தேவி.

அத்துடன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, சீதைக்காக ஸ்ரீராமருக்கு துணையிருந்து வெற்றி பெற செய்தார்.

பாண்டவர்கள்

அதே போல் மகாபாரதத்தில் பாண்டவர்களும் இந்த ஊரில் உள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்கி போருக்கு சென்று வெற்றி பெற்றார்கள்.

இந்திரஜித் யாகம் நடத்திய இடம்

இந்திரஜித் யாகம் நடத்திய இந்த இடம் “அய்யாவாடி” என்கிறது ஸ்தலபுராணம். அதனால்தான் இன்றுவரை அமாவாசைதோறும்  “நிகும்பலா யாகம்” நடக்கிறது. இந்த யாகத்தில் மிளகாய் வத்தலை கூடை கூடையாக கொட்டுகிறார்கள். இருந்தாலும் எந்தவித மிளகாய் நெடியும் வராததை கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். இந்த யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஸ்ரீபிரத்யங்கிராதேவியை வணங்கினால் விரோதிகளின் தொல்லையும், செய்வினை தோஷங்களும், ஜாதக தோஷங்களும் விலகும். வீண் வழக்கு இருந்தாலும் அந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். இந்த ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, உக்கிர சக்தி படைத்தவர் என்பதால், சூரியனை கண்டு இருள் விலகுவது போல், தன் பக்தர்களின் கஷ்டங்கள் என்கிற இருளை விலக்கி அவர்களுக்கு சகல நலங்களை அள்ளித் தருவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.!

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 18 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech