Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

உயர்ந்த அந்தஸ்து தந்தருளும் ஸ்ரீமந் நாராயணன்

நிரஞ்சனா  

உத்தானபாதன் என்ற அரசருக்கு சுநீதி, சுருசி, என பெயருடைய இரு மனைவிகள் இருந்தனர். மன்னருக்கு இரண்டாது மனைவியான சுருசியையும் அவள் மூலமாக பிறந்த மகனான உத்தமனையும்தான் மிகவும் நேசித்தார். முதல் மனைவியான சுநீதியையும் அவள் மூலமாக பிறந்த மகனான துருவன் மீதும் பாசம் இல்லாமல் இருந்தார் அரசர் உத்தானபாதன்.  

ஒருநாள் துருவன் தன் தந்தையை காண அரண்மனைக்கு சென்றான். அங்கு உத்தமன் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதை கண்டு தானும் தந்தையின் மடியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டு தன் தந்தையின் அருகில் சென்றான் துருவன். துருவனை கண்ட சுருசி முகத்தை சுளித்து கொண்டாள். தன் அருகில் இருந்த மனைவியின் முகத்தை கண்டு அவள் மன எண்ணத்தை புரிந்துக் கொண்ட அரசர், மகன் துருவனை தன் மடியில் அமரவிடாமல் தடுத்தார்.

தன் கணவரின் இச்செயலை கண்டு ஏதோ ஒரு நாட்டையே போரில் தன் கணவர் கைபற்றியது போல் மகிழ்சியடைந்தாள். அத்துடன், நான்கு வயது பால் முகம் மாறாத குழந்தையிடம் பேசுகிறோம் என்பதையே மறந்து, ஏதோ எதிரியிடம் விரோதத்தை காட்டுவது போல் குழந்தை துருவனை பார்த்து,

“நீ அரசரின் முதல் மனைவி மூலமாக பிறந்தவனாக இருக்கலாம். ஆனால் உன் தந்தையின் மடியிலும், சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆளும் உரிமையும் அருகதையும் உனக்கு இல்லை. அந்த பாக்கியம் என் மகனான உத்தமனுக்குதான் இருக்கிறது.” என்று கூறி கொண்டே துருவனை பிடித்து தள்ளிவிட்டாள் பாதகி.

என்ன செய்வது? சிங்கத்திற்கு நேரம் சரியில்லை என்றால் நரி கூட நாட்டமையாக சிங்கத்தின் அருகில் வந்து கத்தி ஆட்டம் போடும். அந்த நரியை போலதான் இருந்தாள் சுருசி.

சித்தியின் பேச்சும் செயலும் சிறுவன் துருவனின் மனதில் கவலையை உண்டாக்கியது. அத்துடன் மனதில் கோபமும் ஏற்பட்டு, தன் தாயான சுநீதியிடம் ஓடி சென்று நடந்ததை சொல்லி அழுதான் துருவன்.

திக்கற்றவனுக்கு பெருமாளே துணை

தாய் அவனுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னாள்.

“கவலை வேண்டாம் என் செல்லமே. ஸ்ரீமகாவிஷ்ணுவை மனதார வணங்கு. பெருமாளை வணங்குபவர்களுக்கு பெருமைகள் தேடி வரும். அந்த பரந்தாமன் மனம் வைத்தால் எந்த சதிகாரர்களின் சதியும் பயன் இல்லாமல் ஆகிவிடும். பெருமாள், தன் பக்தர்களுக்கு தரும் பெரும் வாழ்வை எந்த சூழ்ச்சிகாரர்களும் மாற்ற முடியாது. உனக்கு தர வேண்டியதை நிச்சயம் பகவான் கொடுப்பார். எதற்கும் நீ அஞ்சி கலங்காதே துருவா. அத்திரி முனிவரிடம் சென்று, உன் மனக்கவலையை சொல். நிச்சயம் அவர் இதற்கு தீர்வு தருவார்.” என்றாள் தாய் சுநீதி.

துருவனும் தன் தாய் சொல்லை தட்டாமல் அத்தரி முனிவரிடம் சென்று தனக்கு நடந்த கொடுமையை சொல்லி வருந்தினான்.

“கொடுவினைகள் வந்து நெருங்கும் போது சிலர் இப்படிதான் பாதக செயல்கள் செய்வர். வருந்த வேண்டியவள் உன் சித்திதானே தவிர நீ அல்ல. எல்லாம் நம் நன்மைக்கே நடந்தது என எண்ணி அமைதியாக இரு. பெருமாளை நினைத்து தவம் செய். காக்கும் தெய்வமான அவர் உன்னை காத்தருளுவார். நிச்சயம் உன் நிலை மாறும். உன் சித்தி என்ன..? இந்த பூமியே உன் போற்றும் நேரம் வரும்.” என்று சிறுவன் துருவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார் அத்திரி முனிவர்.

துருவனுக்கு யாரும் ஆதரவும் இல்லை. அவனுடைய தாயாரோ எதுவும் அறியாத அப்பாவி. தன் வாழ்க்கையை பாதுகாக்க தெரியாமல் வெகுளியாக இருக்கும் சுநீதி, எப்படி தன் மகனான துருவனுக்கு பாதுகாப்பாக இருக்க போகிறாள்? என்று அரண்மனையில் உள்ள பணியாளர்கள் சுநீதியின் நிலையை அறிந்து பேசினார்கள்.

துருவனுக்கு தந்தையின் பாசம் கிடைக்கவில்லை. மற்றவர்களிடத்திலும் மரியாதை இல்லை. அந்தஸ்து இல்லாதவருக்கு ஏது மரியாதை? இழப்பதற்கு எதுவும் இல்லாதவனிடம் அவனுடைய துணிச்சலே வெற்றியை தரும். இளங்கன்று பயம் அறியாது என்பது போல, தன்னந்தனியாக யமுனை நதி கரைக்கு அருகில் இருந்த ஒரு காட்டு பகுதிக்கு சென்றான் துருவன். ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தான்.

நாட்கள் பறந்தது. தவத்தின் சக்தியால் துருவனின் முகம் தெய்வீக கலையாக ஜொலித்தது. சிறுவன் போல இல்லாமல் அவனுடைய உடல்பலமும் அதிகரித்தது. இதனால் துருவன் நின்று தவம் செய்யும் போது, இடதுகாலை ஊன்றி, வலதுகாலை மடக்கும் போது,  பூமி இடதுபக்கத்தில் தாழ்வதும், வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடக்கும் போது, வலதுபக்கமாக பூமி தாழ்வதுமாக இருந்தது. ஒரே பாதத்தில் கட்டைவிரலால் பூமியில் துருவன் நின்று தவம் செய்த போது பூமியே நடுங்கியது.

என் பக்தர்கள் என் குழந்தைகளை போல…

துருவன் செய்யும் தவத்தை கண்ட ஸ்ரீதேவி, “துருவனுக்கு அருள் புரியுங்கள்“ என்றாள் பெருமாளிடம். “நம் பக்தர்கள் எல்லோரும் நம் குழந்தைகள் போலவே. துருவனின் உடலுக்கும் உயிருக்கும் எந்த தீங்கும் நேராது. நான் அவனை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். துருவனின் புகழ் தேவலோகத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்தவே நான் அமைதியாக இருக்கிறேன். துருவனின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது பார்” என்றார் ஸ்ரீதேவியான மகாலஷ்மியிடம் ஸ்ரீமகாவிஷ்ணு.

துருவனின் தவத்தை அறிந்த இந்திரன், எங்கு தன் பதவிக்கே துருவனால் பங்கம் வந்துவிடுமோ என்ற அஞ்சினார். தேவலோகத்தில் இருக்கும் ரம்பை, ஊர்வசியை அனுப்ப திட்டம் போட்டார்.

இதை கேள்விப்பட்ட நாரதர், “உங்களுக்கு என்ன ஆனது இந்திரனே? துருவன் ஒரு சிறுவன். அவன் அருகில் எந்த அழகு பெண் சென்றாலும், அவன் தன் தாயை பார்ப்பது போலதான் பார்ப்பான். ஒரு குழந்தைக்கு எப்படி உங்களால் பெண்ணாசை தந்து மயக்க முடியும்.? ஏதாவது தவறாக செய்து பெருமாளின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.” என்று எச்சரித்தார் நாரதர்.

நாரதரின் பேச்சு இந்திரனை சிந்திக்க வைத்தது. இருந்தாலும் துருவனின் தாய் உருவத்தில் ஒரு தேவமங்கையை அனுப்பி துருவனின் தவத்தை முடிக்க ஏற்பாடு செய்தார்.

துருவனின் தாய் சுநீதி உருவத்தில் அந்த தேவமங்கை துருவனின் அருகில் சென்று, “என் செல்ல மகனே… கண்ணா… போதும் உன் தவம். வா அரண்மனைக்கு செல்லலாம். நீ இல்லாமல் என்னால் உயிரோட இருக்க முடியாது.” என்று அழுது நாடகம் ஆடினாள். தவத்தில் இருந்த துருவனுக்கு எதுவும் காதில் விழவில்லை.  தேவமங்கையின் முயற்சி தோல்வி அடைந்து திரும்பினாள்.

இந்திரன் விடுவதாக இல்லை. சிங்கம், நரி, மதம்கொண்ட யானை என்று பயங்கர மிருகங்களை துருவனின் அருகில் அனுப்பி பயமுறுத்தினான். ஆனால் எந்த மிருகத்தின் குரலும் துருவனுக்கு அச்சம் ஏற்படுத்தவில்லை. துருவன் பெருமாளின் பாதுகாப்பில் இருந்ததால், வந்த ஆபத்துகள் எல்லாம் பணிபோல் விலகியது.

துருவ நட்சத்திரம்

இனியும் சோதிக்க எண்ணாமல் தாய் உள்ளத்தோடு ஸ்ரீமந் நாராயணன் துருவன் முன் தோன்றினார். “துருவா.. உன் தவத்துக்கு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.” என்றார் பெருமாள்.

“சுவாமி, உங்களை தரிசிக்க வேண்டும். உங்களிடம் வரம் பெற வேண்டும் என்ற ஆவலில்தான் நான் தவம் செய்தேன். என் தந்தையின் மடியில் அமரும் பாக்கியம் எனக்கு நீங்கள் தர வேண்டும்.” என்றான் துருவன்.

இதை கேட்ட விஷ்ணுபகவானுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

உலகத்திற்கே நான் தலைவனாக வர வேண்டும் என்றுதான் தவம் இருந்து வரம் கேட்பார்கள். ஆனால் இந்த சிறுவன் இப்படி கேட்கிறதே என்று புன்னகையுடன், “உன்னை உன் தந்தை மடியில் வைத்து கொஞ்சுவார். எல்லா அந்தஸ்தும் அடைவாயாக. உனக்கு முடிவு இல்லை. பூலோக சுகபாக்கியங்களை அனுபவித்த பிறகும் உன்னை இந்த உலகமே வணங்கும் உயர்ந்த அந்தஸ்தை நான் உனக்க வரமாக அருள்கிறேன். வானத்தில் நீ துருவ நட்சத்திரமாக உலகம் இருக்கும்வரை நிரந்தரமாக இருப்பாய்.

சூரியனை வணங்குவது எவ்வளவு அவசியமானதோ அதுபோல் உன்னையும் மக்கள் வணங்கி நலம் பெறுவார்கள். துருவ நட்சத்திரமான உன்னை அதிகாலையிலும், மாலையிலும் வணங்குபவர்களுக்கு பல புண்ணியங்கள் சேரும். இன்னல்கள் மறையும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். மகாபுண்ணியம் பெற்று வாழ்வார்கள்.”  என்று துருவனுக்கு ஆசி வழங்கினார் பெருமாள் ஸ்ரீமந் நாராயணன்.  

தன் தந்தையின் மடியில் அமர ஆசைப்பட்டு தவம் இருந்த துருவனுக்கு உலகமே வணங்கும்படியான உயர்ந்த அந்தஸ்தையும் வாழ்வையும் தந்து, நாமும் எளிதாக வரம் பெற நன்மை அருளும் துருவ நட்சத்திரத்தை வணங்கும் பாக்கியத்தை தந்தார் ஸ்ரீமந் நாராயணன். “ஓம் நமோ நாராயணாய” என்கிற எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து கொண்டே துருவ நட்சத்திரத்தை வணங்கினால் சிறப்பான பலன்கள் நம்மை நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். என்றும் எப்போதும் உயர்ந்த அந்தஸ்தை பெறுவோம்.

“ஓம் நமோ நாராயணாய

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 29 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech