Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

சவுரிராஜப்பெருமாளை வணங்குவோம். ஏற்றத்தை பெறுவோம்.

நிரஞ்சனா  

அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் – 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்  

அது ஒரு காட்டுப்பகுதி. பயமுறுத்தும் விலங்குகள் கூட அமைதியாக சுற்றி திரிந்தது. பறவைகள் கொஞ்சி விளையாடியது. சிங்கத்தின் முதுகில் ஒரு அணில் பயமின்றி ஏறி பயணித்தது. இக்காட்டுப்பகுதியின் அமைதியும் ரம்யமும் தவ முனிவர்களை கவர்ந்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் இதுவே என்று தீர்மானித்தனர். உணவு உறக்கம் ஏதுமின்றி தவத்தில் ஈடுப்பட்டனர். தவம் கடுமையாக இருந்தது. இதனால் முனிவர்களின் உடல் மெலிந்து பிருங்கிமகரிஷியை விட நெற்கதிரை போல  மெலிந்து போனார்கள். ஒருநாள் “உபரிசிரசு” என்ற மன்னர், தன் படைபலத்துடன் இந்த காட்டுப்பகுதிக்கு வந்துக்கொண்டு இருந்தார். வெகுதூரத்தில் இருந்து பயணம் செய்துவந்ததால், அவர்கள் வைத்திருந்த உணவும் தீர்ந்து போனது. பசி வீரர்களை வாட்டியது.

“அருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது  போல, அந்த வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களின் மெலிந்து போன தேகம், நெற்கதிரை போல, வீரர்களுக்கு தோற்றம் அளித்தது. இவை நெற்கதிர்கள்தான் என்று தவறாக தெரிந்துக்கொண்டு, முனிவர்களை வாளால் வெட்டினார்கள். அடுத்த நிமிடமே, இதுநாள்வரையில் அமைதியாக இருந்த அந்த காடு நடுங்கியது. அன்பை மட்டுமே அறிந்திருந்த பறவைகளும், மிருகங்களும் மற்றும் அந்த காட்டில் வாழும் மற்ற ஜீவராசிகளும் ஆக்ரோஷம் கொண்டது. அவை ஒட்டுமொத்தமாக அரசரின் படைகளை தாக்க ஓடி வந்தன. அதேசமயம், பசி மயக்கத்தில் மூடர்களான அரசரின் படை வீரர்களால் தன்னுடைய முனிவர்களுக்கு தீங்கு நேர்ந்ததை போல, இந்த விலங்கினத்திற்கும் தீங்கு நேரும் என்பதை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, பெரும் சினம் கொண்டு ஓர் சிறுவன் உருவத்தில் தோன்றி, அரசர் உபரிசிரசுடனும் படை வீரர்களிடமும் மோதினார். தாங்கள் செய்ய வேண்டியதை நமக்காக ஸ்ரீமகாவிஷ்ணுவே சிறுவன் உருவத்தில் வந்து போர் செய்வதை விலங்கினங்கள் அமைதியாக நின்று பார்த்துக் விட்டு திரும்பி சென்றது.

மன்னரும் வீரர்களும் அந்த சிறுவனிடம் போர் செய்யமுடியாமல் திணறினர். ஏற்கனவே பசி மயக்கத்தில் இருந்த வீரர்கள், அந்த ஒரு சிறுவனிடம் மோதி மேலும் களைப்படைந்தார்கள். இனி தம்மால் இச்சிறுவனை வெல்லமுடியாது என்பதை புரிந்துக் கொண்ட அரசர்,   தாம் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை உச்சரித்து சிறுவன் மீது ஏவினார்.

ஆனால் அந்த மந்திரமோ சிறுவனுடைய பாதத்தில் சரண் அடைந்தது. இதை கண்ட அரசர் உபரிசிரசு, அஷ்டாட்சர மந்திரம் ஸ்ரீமந் நாராயணன் ஒருவருக்கே கட்டுப்படும் என்பதால், நம்மிடம் மோதும் இவன் சிறுவன் அல்ல, ஸ்ரீமகாவிஷ்ணு இவரே என்பதை உணர்ந்து தன்னை மன்னிக்கும் படி அரசரும் அவர்தம் படையினரும், சிறுவனின் பாதம் பணிந்து வேண்டினர்.

சிறுவனாக இருந்த ஸ்ரீமகாவிஷ்ணு, தம் சுயஉருவில் நீலமேகப்பெருமாளாக காட்சி கொடுத்தார். நீலமேகப்பெருமாள் காட்சி தந்த அதே இடத்தில் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று தீர்மானித்து, தேவ சிற்பியான விஸ்வகர்மாவின் ஆலய கட்டட நிர்மான ஆலோசனையோடு பெருமாளுக்கு திருக்கோயில் கட்டினார் அரசர் உபரிசிரசு.    .

ஒரு அர்ச்சகருக்காக நீலமேகப்பெருமாள், சவுரிராஜப் பெருமாளாக மாறிய சம்பவத்தை அறிந்துக் கொள்வோம்.   

இந்த திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், நீலமேகப்பெருமாளுக்கு அணிவித்த மாலையை தன் காதலிக்கு அணிவித்து அழகுபார்த்து வந்தார். ஒருநாள் அரசர், கோயிலுக்கு வருவதாக தகவல் வந்தது. அன்றும் பெருமாளின் கழுத்தில் இருந்த மாலையை தன் காதலின் கழுத்தில் அணிவித்துவிட்டார். அதனால் அரசர் வரப் போகும் இந்த சமயத்தில் பெருமாளின் கழுத்தில் மாலையில்லை. அவசர அவசரமாக வேறு ஒரு புதிய மாலையை வாங்க நினைத்தார். ஆனால் விதி சதி செய்தது. எங்கும் மாலை கிடைக்கவில்லை. என்ன செய்வது.? பெருமாளுக்கு அணிவித்த மாலையை தந்துதான் அரசருக்கு மரியாதை செய்ய வேண்டும். தினமும் பெருமாளுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் மாலை உயரமாக இருக்கும்.

“அதுபோல் ஒரு மாலையை உடனே தயார் செய்வது என்பது கடினம் ஆயிற்றே.” என்று வருத்தப்பட்டார் அர்ச்சகர். “சரி எது நடக்கவேண்டும் என்று விதி இருக்கிறதோ அது நடந்துதான் தீரும். எல்லாம் அந்த பெருமாளின் விளையாட்டு.” என்று தைரியத்துடன்  தன் காதலியின் வீட்டுக்கு விரைது சென்று அங்கிருந்த பெருமாளின் மாலையை எடுத்து வந்து அரசருக்காக கோயிலில் காத்திருந்தார் அர்ச்சகர். அரசர் வந்தார்.

முறைப்படி அரசருக்கு மரியாதையை செய்ய, அர்ச்சகர் தன் கையில் இருந்த மாலையை அரசர் கழுத்தில் அணிவித்தார். இதற்கு முன்பு அந்த மாலை, அர்ச்சகரின் காதலி கழுத்தில் அணிந்து அழகு பார்த்திருந்ததால், அந்த பெண்ணின் கூந்தல் முடி அந்த மாலையில் சிக்கியிருந்தது.

தனக்கு மரியாதை செய்ய அணிவித்த மாலையில் பெண்ணின் தலைமுடியை கண்ட அரசர், கடும் கோபமாக, “என்ன இது. மாலையில் தலைமுடி இருக்கிறது. இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் மலர்மாலையில் ஒரு தலைமுடியும் இருக்கக் கூடாது என்பதற்காகதானே ஆண்கள் மட்டும்தான் மலர்மாலை தயாரிக்க வேண்டும் என்று அரசு கட்டளையாக ஆணையிட்டேன். அப்படி இருக்கும் போது, இதில் தலைமுடி, அதுவும் ஒரு பெண்ணின் இவ்வளவு நீளமான தலைமுடி இருப்பதற்கு யார் காரணம்.” என்று கோபமாக கேட்டார் அர்ச்சகரிடம் அரசர்.

“அரசே மன்னிக்க வேண்டும். கோபப்பட வேண்டாம். பெருமாளின் தலையில் இருந்த முடிதான் இது.” என பொய்யுரைத்தார் அர்ச்சகர். மன்னருக்கு சந்தேகம் ஏற்பட்டது. “என்ன…? பெருமாள் சிலையில் தலைமுடி இருக்கிறதா.? அப்படியானால் பெருமாளின் தலைமுடியை நான் தரிசிக்க வேண்டும்.” என்றார் அரசர்.  

“நிச்சயமாக தரிசிக்கலாம் அரசே. இன்று முழு அலங்காரத்தில் இருக்கிறார். தலைமுடியை பார்ப்பதற்காக மீண்டும் அலங்காரத்தை கலைப்பது பாவம். நீங்கள் நாளை வாருங்கள். அலங்காரத்திற்கு முன்னதாக பெருமாளின் தலைமுடியை காட்டுகிறேன்.” என்றார் அர்ச்சகர்.

“அர்ச்சகரே… இப்போது கூட ஒன்றுமில்லை. நீங்கள் தவறு செய்திருந்தால் உடனே ஒப்புக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு பெருமாள் சிலையில் சிகை இருப்பதாக பொய் சொல்ல வேண்டாம். தவறை ஒப்புக்கொண்டால் நீங்கள் செய்த முதல் தவறு இது என்று மன்னிக்கப்பட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். யோசியுங்கள்.” என்றார் அரசர்.

“மன்னா.. இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது.? இது பெருமாளுடைய தலைமுடிதான். நீங்கள் நாளை வாருங்கள். நான் காட்டுகிறேன்.” என்றார் அரசரிடம் அர்ச்சகர். அரசர் பெருமாளை வணங்கிவிட்டு சென்றுவிட்டார்.

அன்றிரவு, அர்ச்சகருக்கு தூக்கம் வரவில்லை.

“இறைவா நான்  தவறுதான் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. அரசரிடம், அது உன் தலைமுடிதான் என்று அடித்து பேசி விட்டேன். அரசரே முதல் குற்றத்தை மன்னிப்பதாக சொல்கிறார். நீ தெய்வம். இத்தனை காலம் உன் சேவையில் நான் குறை வைக்கவில்லை. பல பெண்களுடன் நான் தொடர்பு வைக்கவில்லை. அவள் ஒருவள்தான் என் காதலி. உன் ஆசியுடன் அவளுடன்தான் என் திருமணம். என் மீது கருணை வைத்து, நீதான் என்னை காப்பாற்ற வேண்டும்.” என்று வேண்டினார் அர்ச்சகர்.

விடிந்தது –

மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். கருவரைக்குள் வந்தார். அரசர். அர்ச்சகர் பெருமாள வேண்டியப்படி பெருமாளின் தலையை மன்னருக்கு காட்டி, அர்ச்சகர் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார். மன்னரின் முகத்தில் ஆனந்தம்- ஆச்சரியம். “ஓம் நமோ நாராயணா.” என்று ஓங்கி குரல் தந்தார். கருவறைக்குள் வெளியே நின்றிருந்த பக்தர்கள், ”கோவிந்தா… கோவிந்தா…” என்று பக்தி பரவசத்தில் கூட்டாக சொன்னார்கள். அந்த திருக்கோயிலே நாராயண நாமத்தில் அதிர்ந்தது.

என்ன நடந்தது என்று புரியாமல் அர்ச்சகர் கண் திறந்து பார்த்தார். தலையில் நீளமான முடியுடன் காட்சி தந்து, பிறகு தன் திருமுடியை மறைத்துக்கொண்டார் பெருமாள்.

“அர்ச்சகரே உன் பக்தியை நான் சோதித்து வி்ட்டேன். என்னை மன்னிக்கவேண்டும்.” என்று கூறினார் அரசர். அன்றிருந்து நீலமேகப்பெருமாள், “சவுரிராஜப் பெருமாள்” என்ற திருநாமம் பெற்று  அழைக்கப்பட்டார்.  இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.

பெருமாள், கருடனை தனக்கு வாகனமாக மாற்றியது ஏன்.? 

கருடன், தன் தாய்க்காக பாற்கடலில் இருந்து அமிர்தத்தை பெற்று வந்துக்கொண்டு இருந்தார். வரும் வழியில், “அசுரர்களால் கூட பெற முடியாத அமிர்தத்தை, நான் எவ்வளவு சுலபமாக பெற்றுவிட்டேன்.” என்று தன்னை தானே பெருமையாக நினைத்து கர்வம் கொண்டார் கருடன்.

அதே கர்வத்தோடு வான் வழியாக வந்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், இந்த ஆலயத்தின் மேல் சென்று கொண்டு இருக்கும் போது, தன் சக்தியிழந்து கடலில் விழுந்தார் கருடன். கர்வத்தால் அழிவுதான் மிஞ்சும் என்பதை உணர்ந்து, பெருமாளை நினைத்து கடுமையாக தவம் செய்தார். இத்தலத்தில் கருடனின் தவத்தை ஏற்ற பெருமாள், கருடனை தன் வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். 

முனையதரையன் பொங்கல் 

குறுநில மன்னர் முனையதரையன். இவர் சிறந்த பெருமாள் பக்தர். உணவு உட்கொள்ளும் முன்னதாக பெருமாளை வணங்கிய பிறகுதான் சாப்பிடுவார். பெருமாளின் சேவைக்காகவே பணத்தை எல்லாம் செலவழித்தார். இதனால்  வறுமையில் வாடினார்.  இவர் தன் தலைமை அரசருக்கு வரி கட்டவில்லை. கோபம் கொண்ட தலைமை அரசர், முனையதரையனை  சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், குறுநில அரசரான முனையதரையனை  விடுவிக்கும்படி உத்தரவிட்டார். இதனால் முனையதரையன் விடுவிக்கப்பட்டார்.

இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தார் அவர் மனைவி. முனையதரையன் பெருமாளை மனதில் நினைத்து, நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் குறுநில மன்னரான முனைதரையனுக்கு தெரிவிக்கப்பட்டது.  முனையதரையன் மானசீகமாக பெருமாளுக்கு படைத்த பொங்கலை. பெருமாள் உண்டதை அறிந்து கொண்டனர் மன்னரும் ஊர்மக்களும். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனால்  இன்றுவரை “முனையதரையன் பொங்கல்” என்றே அழைக்கின்றார்கள்.

கோவிலின் சிறப்பு பரிகாரம்

இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயண காலத்தின் போது, மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதி தேவதைகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்தால் பித்ருக்களின் ஆத்மா சாந்திபெறும். நவகிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோயிலுக்கு வந்து, இந்திரன் பிரதிஷ்டை செய்த நவகிரகங்களை வணங்கினால், நவகிரகதோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம்.  இந்த நவக்கிரகத்தை சுற்றிலும் 12 ராசிகளும் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். சவுரிராஜப் பெருமாளிடம், திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற ஸ்தலம். இந்த ஊரில் நம் பாதம்பட்டாலே வைகுண்டம் கிடைக்கும் என்பதால், இந்த பெருமாள்தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. சொர்க்கமான வாழ்க்கை பெற அருள்மிகு ஸ்ரீசவுரிராஜப்பெருமாளை வணங்குவோம். ஏற்றத்தை பெறுவோம்.♦

 

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Aug 24 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech