Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

உடல் நலமும் – உயிர் நலமும் தரும் மயிலை கபாலீஸ்வரர் கோயில்

நிரஞ்சனா

மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே கற்பகவல்லி அம்பிகையால்தான். அன்னை மயிலாக உருவெடுத்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தாள். அதனால் இந்த பகுதிக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இத்திருக்கோயிலுக்கு  உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உடல்நலம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் நலம் பெறுவார்கள். நம்முடைய எண்ணங்களை வாய் திறந்து ஈசனிடம் சொல்ல வேண்டியதில்லை. மனதில் நினைத்தாலே நிறைவேறும் என்கிறார் சேக்கிழார்.

நாம் நம்முடைய வேண்டுதலை மனதில் நினைத்தப்படி இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே நினைத்தது நிறைவேறும். இதுவே இக்கோயிலின் சிறப்பு. சிவநேசர் என்பவர் சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். இவருக்கு ஒரு அழகான மகள். அவள் பெயர் பூம்பாவை. அவளும் ஒரு சிவபக்தை. பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு மணம் செய்து தந்து சம்பந்தரை தன் மருமகனாக ஆக்க வேண்டும் என்பதே சிவநேசரின் விருப்பம். பூம்பாவை நந்தவனத்தில் பூக்களை பறித்து இறைவனுக்கு மாலையாக சாத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தாள். எப்போதும் போல அன்றும் நந்தவனத்திற்கு சென்றாள். ஆனால் வீடு திரும்பவில்லை. நேரம் போய் கொண்டே இருக்கிறது. பூ பறிக்க சென்ற மகள் வீடு திரும்பாததை அறிந்து பதறினார் தந்தை சிவநேசர். உடனே நந்தவனத்திற்கு சென்று பார்த்தார். அதிர்ச்சி அடைந்து அலறினார். பூம்பாவை பாம்பு தீண்டி இறந்து கிடந்தாள்.

நடந்தது நடந்துவிட்டது. இனி அழுதென்ன லாபம். அழுது அழுது புரண்டாலும் மாண்டவர் வரவா போகிறார் என்று சிவநேசரை சமாதானம் செய்து, நடக்க வேண்டிய காரியங்களை செய்து முடித்தார்கள் ஊர்மக்கள். பூம்பாவையின் மீது மிகுந்த அன்பு கொண்ட சிவநேசர், மகளின் உடலை தகனம் செய்து, அந்த எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்திற்குள் போட்டு பாதுகாத்து வந்தார். மகளே இறந்துவிட்டாள், எலும்பையும் சாம்பலையும் புனித நதியில் கரைக்காமல் இவன் அவளின் எலும்பை பாதுகாத்து என்ன செய்ய போகிறான்?. என்று ஊர் மக்களும் உறவினர்களும் பேசினாலும், அதை பற்றி எதையும் காதில் வாங்காமல் சிவநேசர் தன் சிவதொண்டில் தொடர்ந்தார்.

மயிலை கபாலீஸ்வரனும் அன்னை கற்பகவல்லியும் சிவநேசர் மீது கருனை காட்டினார்கள். திருஞானசம்பந்தரை திருவொற்றியூர் வரவழைத்தார்கள். திருவொற்றியூருக்கு சம்பந்தர் வந்த தகவல் சிவநேசருக்கு தெரிந்தது. திருவொற்றியூருக்கு சென்று சம்பந்தரை பார்த்து வணங்கி, “சுவாமி அருகில்தான் மயிலாப்பூர் இருக்கிறது. தாங்கள் அவசியம் வர வேண்டும்.” என்று அழைத்தார்.

சிவநேசருடன் மயிலை வந்தார் ஞானசம்பந்தர். கபாலீஸ்வரர் கோயிலை வணங்கினார். பிறகு சிவநேசரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் அவரிடமே கேட்க, சிவநேசர் தன் துக்கத்தை மறைக்க முடியாமல் அழுதார். தன் மகள் பூம்பாவையை தங்களுக்கு மனைவியாக கன்னிகாதானம் செய்து தர வளர்த்து வந்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாம்பு தீண்டி இறந்து போனாள். அவள் உடலை தகனம் செய்து சாம்பலையும் எலும்பையும் ஒரு குடத்தில் பாதுகாத்து வருகிறேன்.” என்று கதறியபடி சொன்னார் சிவநேசர்.

திருஞானசம்பந்தர் அந்த குடத்தை எடுத்து வரும்படி சொல்ல, பூம்பாவையின் ஆத்மாவுக்கு சம்பந்தர் சாந்தி தரபோவதாக எண்ணி உடனடியாக குடம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

“மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்…, 

என தொடங்கும் பதிகத்தை பாடினார். பாடலில்? கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பவாய்? தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்? என்று குடத்தில் எலும்பும் சாம்பலாகவும் இருக்கும் பூம்பாவையிடமே கேட்கிறார் திருஞானசம்பந்தர். பதிகத்தின் முடிவில் குடம் வெடித்து பருவ மங்கையாக உடலும் உயிரும் பெற்று வருகிறாள் பூம்பாவை. சிவநேசரும் மற்றவர்களும் தங்கள் கண் முன் நடந்த இந்த தெய்வீக அதிசயத்தை கண்டு திகைத்து நின்றார்கள். கபாலீஸ்வர கோயில் கோபுரத்தை பார்த்து, தலைமீது கைகூப்பி வணங்கி மக்களின் “ஓம் நம சிவாய” என்ற மந்திரம் விண்ணையே அதிர செய்தது.

தன்னுடைய விருப்பத்தின்படி பூம்பாவையை திருஞானசம்பந்தர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டினார் சிவநேசர்.

“முதலில் பூம்பாவைக்கு உயிர் தந்ததால் நீங்கள் அவளுக்கு தந்தை. இரண்டாவது முறையாக அவளுக்கு உயிர் தந்ததால் நான் அவளுக்கு தந்தை”. என்று சொல்லி பூம்பாவைக்கும் சிவநேசருக்கும் ஆசி வழங்கி புறப்பட்டார் திருஞானசம்பந்தர்.

மயிலை கபாலீஸ்வரரை வணங்கினால் உடல்நலமும் –உயிர்நலமும் பெறுவார்கள்.  

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Jun 20 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech