Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

சூரியனை வணங்கினால் அரசாங்க ஆதரவு

நிரஞ்சனா

அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போக போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர்.

நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய ஹருதய“த்திற்கு இருக்கிறது என்று கூறினாள் பராசக்தி. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முதலில் நல்லவர்களிடம் சொன்னால்தான் அது முழுமை அடையும் என்ற எண்ணத்தால் பல வருடம் ஆகியும் மந்திரத்தை வெளியிடாமல் பொறுமையாக இருந்தார் அகஸ்திய முனிவர்.

ஸ்ரீ ராமசந்திரர், இராவணனிடம் போர் செய்து கொண்டு இருந்தார். பல அம்புகளை ஏவியும் இராவணனை கொல்ல முடியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தார். இராவணனும் முடிவில்லாத போரினால் மயங்கி விழுந்தார். ஆனாலும் இராவணன் போரை நிறுத்துவதாக இல்லை. இன்னும் எத்தனை மணி நேரமோ, எத்தனை நாட்களோ இப்படி போரை தொடர்வது? என்ற விரக்தியின் எல்லைக்கே போனார் ஸ்ரீராமர். இறைவனாக இருந்தாலும் மனித பிறவி எடுத்தால் விதியை அனுபவித்துதான் தீர வேண்டும். ஆனால் விதியை ஒரளவு மாற்றும் சக்தி முனிவர்களுக்கு இருக்கிறது என்பதால் தன் குருவாக நினைக்கும் அகஸ்தியரை மனதால் பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது போல் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமரின் முன்னே தோன்றி, “ராமா… உலக நன்மைக்காக பராசக்தி ஆதித்ய ஹிருதய மந்திரத்தை எனக்கு உபதேசித்தார். அதை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல நன்மைகளும், விரோதிகளை வீழ்த்தும் சக்தியும் கிடைக்கும்.!“ என்றார் அகஸ்திய முனிவர்.

முனிவர் கூறியது போல் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீ ராமசந்திரர். அதன் பலனாக அதிக சக்தியும், புத்துணர்ச்சியோடும் இராவணனை வீழ்த்தினார். சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தால் வல்லவனுக்கு வல்லவனாகலாம் என்றார் சக்திதேவி.

எப்படி இவ்வளவு மகிமை சூரிய பகவானுக்கு வந்தது?

விஸ்வகர்மா, தன் மகள் சமிக்ஞையை சூரியனுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்கள்தான் மனு, யமதர்மராஜன், யமுனா(நதி). ஒவ்வோரு நாளும் சூரியனின் வெப்பம் அதிகமானது. அதனால் சமிக்ஞை தன் நிழலுக்கு உயிர் கொடுத்து சாயாதேவி என்று பெயரும் வைத்தாள். சாயாதேவி சமிக்ஞை போல இருந்ததால் சூரியனுக்கு சந்தேகம் எழவில்லை. இதனால் சனி, தபதி என இரு பிள்ளைகளை சாயாதேவி பெற்றெடுத்தாள். ஒருநாள் யமன்,  சாயாதேவியை தன் தாய் என்று நினைத்து விளையாட்டாக எட்டி உதைத்தார். இந்த செயல் சாயாதேவிக்கு பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது. அதனால் யமனை சபித்துவிட்டாள். இதை சிறிதும் எதிர்பார்க்காத யமன், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.

“என்னதான் தவறு செய்து இருந்தாலும் தான்பெற்ற பிள்ளையை ராட்சசி கூட சபிக்க மாட்டாள். இவள் என் தாயே இல்லை“ என்று தந்தையிடம் முறையிட்டான் யமன். இதை கேட்ட சூரியபகவான் தன் ஞான திருஷ்டியால் சாயாதேவி தன் மனைவி சமிக்ஞை அல்ல என்பதை தெரிந்துக்கொண்டார். அதனால் மனைவி சமிக்ஞை எங்கே? என்று தேடி போனார்.

சாமிக்ஞை குதிரை உருவத்தில் தியானம் செய்துக்கொண்டு இருந்தாள். இதனால் சூரியனும் குதிரை உருவத்தில் சென்று “நான் செய்த தவறு என்ன? எதற்காக என்னை விட்டு பிரிந்தாய்“ என கேட்டார்.

“சுவாமி…தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் தங்களின் வெப்பத்தைதான் என்னால் தாங்க முடியவில்லை. ஆகவேதான் நான் தங்களை விட்டு பிரிந்து இங்கே தவம் செய்து காலம் கழிக்கிறேன்.!“ என்றாள். அதன் பிறகுதான் மாமனாரான விஸ்வகர்மாவிடம் சென்று தன் பிரச்சனையை சொன்னார் சூரியன். விஸ்வகர்மா தனது சாணைச் சக்கரத்தை கொண்டு சூரியனின் உஷ்ணத்தில் எட்டில் ஒரு பங்கை தேய்து எடுத்து விடுகிறார். அந்த ஒரு பங்கை நான்கு பாகமாக பிரித்து, சிவனுக்கு சூலத்தையும்,  விஷ்ணுவுக்கு சக்கரத்தையும், முருகனுக்கு வேலாயுதத்தையும், குபேரனுக்கு சிபிகை என்ற ஆயுதத்தையும் செய்து கொடுத்தார் விஸ்வகர்மா. சூரியனை வணங்கிணால் நான்கு தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். கண்பார்வை கோளாறு நீங்கும். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். விரோதிகள், இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். சகல நன்மைகளும் ஏற்படும்.

 

Copyright©  www.bhakthiplanet.com   AllRights Reserved

Posted by on Mar 26 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech