Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

விபூதி உருவான கதை

நிரஞ்சனா

பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது.

 இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான். ஒருநாள் தர்பைபுல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.

ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன்தான்.

 சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி, பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்…. ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கம் சர்வேஸ்வரன் என்பதை அறிவேன். இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?“ என்று வேண்டினான் பர்னாதன். ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி கொடுத்தார்.

“உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும். உன் நல்தவத்தால் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்டசக்திகள் நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.

விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்தெடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது. கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம்

விபூதியால் என்ன நன்மை? என்று ஸ்ரீ ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார். “பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு, செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும்“ என்று அகத்திய முனிவர் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்தார். ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி. அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.

 “மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு 

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு 

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“

 

 

Posted by on Feb 28 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech