தென்மேற்கும் அதன் குணங்களும் ! பகுதி-2
SIVA`S VAASTHU PLANNERS
ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம்.
அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் கிணறு மற்றும் செப்டிக் டேங்க், சம்பு என்று சொல்லக்கூடிய நீர்த்தேக்கத் தொட்டி போன்றவற்றை தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக, தென்மேற்கு மூலையில் கழிவறை-குளியலறையும் கண்டிப்பாக அமைத்து விடக்கூடாது. காரணம், இந்த தென்மேற்கு மூலையில் கழிவறை, குளியலறை போன்றவற்றை அமைத்து விட்டால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். எத்தகைய பாதிப்புகள்? என்று உங்களில் சிலர் கேட்கலாம்.
குறிப்பாக,
தென் மேற்கு மூலையில் கழிவறை அமைந்துவிட்டால் மிகுந்த சட்ட பிரச்சினைகள், அரசாங்க வழியில் நிறைய பிரச்சனைகள், வீண் வம்பு வழக்கு இன்னும் சொல்லப்போனால் சட்டரீதியாக அது சின்ன தவறாக இருந்தாலும் சிறைக்கு செல்லும் அளவுக்கு மிக கொடுமையான பலன்களை தென்மேற்கு மூலையில் அமைந்திட்ட கழிவறை ஆனது நம்மை சிக்கலில் இழுத்து விடும்.
மேலும் இந்த கழிவறையோடு குளியலறையும் சேர்ந்து தென்மேற்கு மூலையில் அமைந்து விட்டால் தீய பழக்கங்கள், உடல்நலனில் மிகுந்த அதிகமான பாதிப்புகள், குறையாத மருத்துவ செலவுகள், விபரீதமான விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள் போன்ற துன்பகரமான விஷயங்களை தரவல்லது இந்த தென்மேற்கில் அமைந்த கழிவறையுடன் சேர்ந்த குளியலறை அமைப்பாகும்.
அதுபோல், தென்மேற்கு பகுதியில் அமைந்து விட்ட கிணறுஇ ஆழ்துளை கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு நீர்த்தேக்க தொட்டி இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னவென்றால், அது தெற்கை சார்ந்த தென்மேற்காக இருந்தால், ஆண்களுக்கு முன்னேற்றத் தடைகள், திருமண வாழ்க்கையில் அல்லது குடும்ப வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்னைகள், தீர்வே தெரியாத தொல்லைகள், வருமான இழப்பு, மிகுதியான கடன் போன்றவை ஏற்படுத்திவிடும்.
அடுத்து தெற்கை நோக்கிய தென்மேற்கில் இப்படி நீர் நிலைகளான கிணறு, ஆழ்துளை கிணறு, நீர் தேக்கத் தொட்டி போன்றவை இருந்தால் அப்படியே பெண்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்தும். பெண்களின் உடல் நிலையில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள், நோய் நொடிகள் அதிகம் தரும். திருமணமான பெண்களுக்கு மனக்குழப்பங்கள், வீண் பயம் வயிற்றில் பிரச்னை, கணவன்-மனைவி ஒற்றுமையை சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏற்படும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணத்தில் தொடர்ந்து தடை, காதல் பிரச்னை, நிறைவேறாத காதல், நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத ஒரு நிலை இப்படி பல பிரச்னைகள் தரும்.
குறிப்பாக வாசகர்களே… தென்மேற்கில் நீர்நிலைகள் இருந்தால் துஷ்ட சக்திகள் அந்த கட்டடத்திற்குள் அல்லது அந்த வீட்டுக்குள் எளிதில் நுழைந்துவிடும். நண்பர்களையும் எதிரிகளாக்கும். மறைமுக எதிர்ப்புகள், கண் திருஷ்டியால் எளிதில் பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆகவே எக்காரணம் கொண்டும் தென்மேற்கில் எந்த ஒரு நீர்நிலைகளையும் அமைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு பிரபலமான சினிமா விநியோகஸ்தர் என்னை சந்தித்தார். அவர் தனது வீட்டை வந்து பார்த்து வாஸ்து குறை ஏதேனும் இருக்கிறதா? என்று பார்த்துச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த வீடு ஒரு பழைய வீடு. அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கட்டப்பட்டிருந்தாலும் வாஸ்து ரீதியாக வீட்டின் அமைப்பில் சின்ன,சின்ன குறை இருந்தாலும் பெரிய அளவில் எந்த தோஷமும் இல்லை.
பிறகு அந்த வீட்டின் மேற்கு பகுதிக்கு சென்று பார்த்தபோது, தென்மேற்கில் கழிவறையும், குளியலறையும் இருந்தது. அந்த அமைப்பைப் பார்த்த நான், ‘இப்படி தென்மேற்கு மூலையில் கழிவறை இருக்கக் கூடாது’ என்று சொன்னேன். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் சொன்னேன். அப்போது அவர் சொன்னார், ‘ஆமாம் நீங்கள் சொன்னது சரிதான். அந்த விஷயமாகத்தான் உங்களை நான் அழைத்து இருக்கிறேன். நான் தேவையில்லா சிக்கலில் மாட்டி உள்ளேன். அதனால் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசித்ததுண்டு. உடனிருந்தவர்கள் எனக்கு துரோகம் செய்து விட்டார்கள். எனது வியபாரா பார்ட்னர்கள் துரோகம் செய்து விட்டார்கள். அவர்கள் செய்த மோசடியில் என் மீது வழக்கு போடப்பட்டிருக்கின்றது. அந்த வழக்குக்காக நான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் இருக்கிறேன். நான் இந்த பிரச்னையில் இருந்து விடுபட முடியுமா? பண பிரச்னையில் இருந்தும் நான் மீண்டு வர முடியுமா?’’ என்று கேட்டார்.
நான் சொன்னேன் இந்த வீட்டிற்கு வேறு சில இடங்களில் கழிவறையும் குளியலறையும் இருக்கின்றது. அது உங்கள் வீட்டுக்கு போதுமானதாக இருந்தால், இந்த தென்மேற்கு பகுதியில் உள்ள கழிவறையையும், குளியலறையையும் அகற்ற முடியுமா? என்று கேட்டேன்.
அவர் சொன்னார். ‘தாராளமாக அப்படி செய்யலாம். இது விருந்தினர்கள் யாராவது வந்தால் அவர்கள் பயன்படுத்துவதற்காகதான். நீங்கள் சொல்லும் வேறு இடத்தில் கூட இதை மாற்றி கொள்ளலாம். ஆனால் அதற்கு சில நாட்கள் ஆகுமே. அதற்குள் பிரச்னைகள் இன்னும் அதிகமாகிவிடும்’. என்றார் கவலையுடன்.
நான் சொன்னேன், ‘நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் குறித்து தரும் நேரத்தில் இருந்து இந்த கழிவறையும் குளியலறையும் பயன்படுத்தாமல் மூடி வைத்துவிடுங்கள். இதிலேயே ஒரு சில நாட்களில் உங்களுக்கு நிச்சயம் பலன் தெரியும். அதன் பிறகு நிரந்தரமாக மூடுவதற்கு ஏற்பாடு செய்து விடுங்கள்’. என்று சொன்னேன்.
அதன்படியே அவர் செய்தார். நான் குறிப்பிட்ட நாளில் இருந்து, அந்த கழிவறையும் குளியலறையும் அவர் பயன்படுத்தவில்லை. இதன் பலனாக இறைவன் அருளால் பிரச்னைகள் தீர்வதற்கு ஒரு சிலர் உதவி செய்தார்கள். அந்த சமயத்தில் நிரந்தரமாக அந்த கழிவறையும் குளியலறையும் அங்கிருந்து அகற்றி விட்டு வேறு ஒரு சாஸ்திர படியான இடத்தில் அதனை அமைத்துவிட்டார். பிறகு அவர் பிரச்னை படிப்படியாக தீர்ந்தது. கூட்டாளிகள் தங்கள் தவறை உணர்ந்து அவருடன் சமரசம் பேச வந்தார்கள். பிரச்னைகளை தீர்க்க வந்தார்கள். பிரச்னையும் தீர்ந்தது. சட்ட சிக்கலில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். பிறகு அவர் வாஸ்து சாஸ்திரத்தை முழுவதுமாக நம்பி அவர் வீட்டில் இருந்த சின்ன சின்ன குறைகளையும் கூட பெரிய செலவில்லாமல் நிவர்த்தி செய்துக் கொண்டார்.
அதன் பிறகு அவரின் பொருளாதார நிலை உயர்ந்தது. பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி வருகிறார். அவர் வாங்குவது மனையாக இருந்தாலும், கட்டடமாக இருந்தாலும் வாஸ்து குறை இருந்தால் தாமதம் இன்றி உடனடியாக நிவர்த்தி செய்துக் கொள்வார். அதனால் வாசகர்களே தென்மேற்கில் அமைந்த நீர்நிலைகள் எந்த வகையிலாவது பிரச்னைகளை தந்து விடுகிறது என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
வாஸ்து சாஸ்திரத்தில் தென்மேற்கு பகுதியில் நீர் நிலைகளில் மட்டும் கவனமாக இருந்தால் போதாது. கட்டட அமைப்பில் கூட நாம் வாஸ்து அமைப்பை தென்மேற்கு பகுதியில் கவனிக்க வேண்டும்.
காம்பவுண்ட் சுவர்
கட்டடத்தின் காம்பவுண்டில் தென்மேற்கு மூலை வளர்ந்து இருக்கக் கூடாது. மற்ற பகுதிகளை விட தென்மேற்கு மூலை அதிகமாக இருக்கக்கூடாது. குறைவாக இருக்கலாமே தவிர அதிகமாக இருக்கக் கூடாது. இந்த விஷயத்தை காம்பவுண்ட் சுவர் அமைக்கும் போது நாம் கவனிக்க வேண்டும். அப்படி தென்மேற்கு மூலையில் காம்பவுண்ட் சுவர் சற்று நீண்டுதான் அமைக்க வேண்டும் என்கின்ற நிலை வரும்போது, அதற்குரிய வாஸ்து ரீதியான நிவர்த்தி என்ன? இத்தகைய அமைப்பில் அந்த தோஷத்தை எந்த வகையில் சரி செய்யலாம் என்பதை மிக துல்லியமாக கவனிக்க வேண்டும்.
கட்டடத்தில் கூட தென்மேற்கு மூலை அல்லது தென்மேற்கு பகுதி வளர்ந்து அமைக்கக்கூடாது.
அப்படி என்றால் என்ன?
தென்மேற்கு பகுதி வளர்ந்திருப்பது என்பது, மற்ற பகுதிகளை விட தென்மேற்கு மூலையில் பால்கனி போன்றவை அமைக்கும்போது மற்ற பகுதிகளை விட தென்மேற்கு மூலை சற்று அதிகமாக இருக்கும். அல்லது அப்படி அதிகமாக அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அத்தகைய அமைப்பை நாம் தென்மேற்கு தோஷம் என்று அழைக்கின்றோம். மற்ற பகுதிகளை விட எக்காரணம் கொண்டும் தென்மேற்கு மூலை அதிகமாக வளர்ந்து இருக்கவே கூடாது. அது பால்கனியை அல்லது Wardrobe கபோடு வைக்க சற்று கொஞ்சம் வளர்த்திருப்பார்கள். அவ்வகையிலும் அது எவ்வகையிலும் தென்மேற்கு மூலை அதிகமாக வளர்ந்து இருக்கவே கூடாது. அப்படி அமைத்துதான் ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகும்போது, அதற்குரிய எளிய நிவர்த்தி என்ன? என்பதை நாம் கவனித்து செய்துவிட்டால் தோஷமில்லை.
சரி,
தென்மேற்கில் சமையலறை இருக்கலாமா?
தென்மேற்கு மூலை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்? என்ன இருந்தால் சிறப்பாக இருக்கும்?
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Vaasthu Consultation Contact: SIVA`S VAASTHU PLANNERS, Vijay G Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2019 bhakthiplanet.com All Rights Reserved