குழந்தை செல்வம் தரும் இருக்கன்குடி மாரியம்மன்
நிரஞ்சனா
விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து கிழக்கே 8 கி.மீ., தூரத்தில் உள்ளது அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் .
ஊர் ஒற்றுமையாக இருந்தால் அங்கே குடியிருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோல நதிகள் இணைந்தால் அனைத்து ஊர்மக்களுடன் தெய்வமும் மகிழ்ச்சி அடையும். இரு நதிகளுக்கு இடையே இருக்கன்குடி அம்மன் இருக்கிறார். முதலில் அந்த இரு நதிகள் எது? அவை இணைந்த கதை என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு, அங்கே அம்மன் தோன்றிய வரலாறையும் அறிந்துக் கொள்வோம்.
இரு நதிகள்
விதி வசத்தால் பாண்டவர்கள், காடு – மலை என்று சுற்றி திரிந்து வாழும் நிலையில் இருந்தார்கள். இப்படி பல காடுகளில் சுற்றி வந்த போது, ஒரு மலையடிவாரத்தில் தங்கி ஒய்வு எடுத்தார்கள். களைப்பு தீர குளிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் அங்கே நீர் நிலைகளை தேடி சுற்றி சுற்றி பார்த்தார் அர்ஜுனன். ஆனால் அவர் கண்களுக்கு எட்டும் தூரம்வரை நீர் நிலைகள் இருப்பதற்கான சுவடே காணப்படவில்லை. இதனால் அர்ஜுனன், கங்கைதேவியை நினைத்து வணங்கி ஒரு அம்பால் பூமியை பிளந்தார். இதனால் அந்த இடத்தில் பீறிட்டு கிளம்பிய தண்ணீர் நதியாக உருவெடுத்தது. அந்த நதியில் பாண்டவர்கள் அனைவரும் நீராடினார்கள். அர்ஜுனனால் நதி உருவானதால் “அர்ஜுன ஆறு” என்று பெயர் பெற்றது.
வைப்பாறு
சம்புகன் என்ற வேடனால் அயோத்தியில் வாழ்ந்த ஒருவன் இறந்தான். இதை கேள்விபட்ட ஸ்ரீராமர், வேடன் சம்புகனை கொன்றார். வேடனால் இறந்தவனை தன் சக்தியால் உயிர்பித்தார் ஸ்ரீராமர்.
இறந்தவனுக்கு மீண்டும் உயிர் தந்தாலும், வேடன் சம்புகனை கொன்றதால் ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்திதோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட சிவமலையில் இருக்கும் சிவபெருமானை நினைத்து, வணங்கி தவம் செய்து பாப விமோசனம் பெற்றார் ஸ்ரீஇராமர்.
தோஷங்கள் நீங்கியதால் பல சிவாலயங்களுக்கு சென்று தரிசித்து மீண்டும் அயோத்திக்கு திரும்பி செல்ல முடிவு செய்து பயணத்தை தொடர்ந்தார். வரும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை பக்கமாக வந்து சேர்ந்தபோது மாலை பொழுது ஆனதால், நீராடி, சிவவழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீராமர், தண்ணீரை தேடினார். ஆனால் அந்த மலைபகுதியில் எங்கும் தண்ணீர் இல்லை.
அப்போது அங்கு இருந்த ஒருவர் ஸ்ரீஇராமரிடம், “இராம.., அகத்திய முனிவர் புண்ணிய நதிகளை ஒன்று திரட்டி ஒரு குடத்தில் அடைத்து வைத்து, இந்த இடத்தில் புதைத்து வைத்திருக்கிறார். அகத்திய மாமுனிவர், காரணம் இல்லாமல் இதை செய்து இருக்கமாட்டார். நீங்கள் இந்த பகுதிக்கு வருவீர்கள் என்பதை அகத்தியர் அறிந்தே அப்படி வைத்துள்ளார்.” என்றார்.
இதனால் ஸ்ரீராமர், தன் அம்பால் புண்ணிய நதிகள் நிறைந்த குடம் புதைந்திருந்த இடத்தை தோண்டி அந்த குடத்தை உடைத்தார். இதனால் அந்த குடத்தில் அதுவரையில் சிறைப்பட்டு கிடந்த நதிகள் மகிழ்ச்சியாக வெளியே பாய்ந்தது. அகத்திய முனிவர் புதைத்து வைத்துவிட்டு சென்ற புண்ணிய நதிகளின் பெயர்தான் வைப்பாறு என இன்று அழைக்கபடுகிறது.
இந்த வைப்பாறு, பல ஊர்களை சுற்றி வந்து அர்ஜுன நதியோடு இணைகிறது.
தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ஜுனன் ஆறு. இந்த இரு ஆறுகளும் கங்கை நதிக்கு இணையாக இருப்பதால் இந்த இடத்தில் அம்பாள் வீற்றிருக்க விரும்பினாள்.
சித்தர்
சதுரகிரி மலையில் சிவயோக ஞான சித்தர் என்பவர் அம்மனை நினைத்து கடும் தவம் இருந்தார். இப்படி பல வருடங்கள் தவம் இருந்ததால் இவருடைய தவத்தை ஏற்ற அம்பாள், அசரிரீ குரலில், “அர்ஜுன ஆறு மற்றும் வைப்பாறு இருக்கும் மேட்டுபகுதிக்கு வா.” அழைத்தாள். சித்தரும் அம்மனின் கட்டளை ஏற்று அவ்விடத்திற்கு சென்று அம்மனை தரிசிக்க ஆவலாக தவம் மேற்கொண்டார்.
அம்மன் சொன்னப்படி சித்தருக்கு காட்சி கொடுத்தார். தாம் தரிசித்த அம்மனின் உருவத்தை மற்றவர்களும் கண்டு தரிசித்து அவர்களுடைய வினைகள் யாவும் நீங்கி வளமோடு நலமோடும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இடத்தில் அம்மனை சிலையாக வடித்தார். சித்தர் வடித்த சிலையிலேயே அம்பாள் ஐக்கியமானாள். காலங்கள் ஓடியது. அந்த சிலை மண்ணில் புதைந்தது.
இருக்கன்குடி அம்மன்
பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடம் காடாக மாறியது. அந்த காட்டின் ஒரு பகுதியில் தங்களின் மாடுகளை மேய விடுவார்கள் அருகில் இருந்த ஊர் மக்கள். அந்த காட்டு பகுதிக்கு வரட்டி விற்கும் பெண் ஒருவள் தினதோறும் வந்து மாடுகளின் சாணத்தை சேகரித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். ஒருசமயம், சாணத்தை எடுத்து கூடையில் போட்டு அந்த சாணக் கூடையை தூக்க முயன்றாள் அப்பெண்.
ஆனால் அவளால் சாணக் கூடையை தூக்க இயலவில்லை. அதிகமாக சாணத்தை போட்டுவிட்டமோ என்று கருதிய அவள், கூடையில் இருந்த சாணத்தை பாதியை எடுத்து வெளியே போட்டாள். ஆனாலும் இந்த தடவையும் கூடையை தூக்க முடியாதபடி கனமாகவே இருந்தது.
“என்னடா இது ஆச்சரியமாக இருக்கிறதே” என்று நினைத்து, கூடையில் நிரப்பிய சாணத்தை அங்கேயே வரட்டியாக தட்டினாள். அவை பத்து வரட்டியாக கூட வரவில்லை. ஆனால் கூடையில் சாணத்தை நிரப்பினாலோ, பல கிலோ இரும்பு இருப்பதுபோல கனமாக இருக்கிறதே என்று நினைத்து பார்த்து பயந்துபோய் காட்டை விட்டு அவசரமாக வெளியேறி வந்து ஊர் மக்களிடம் விஷயத்தை சொன்னாள்.
இதை கேட்ட ஊர் பெரியவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். இந்த பெண் சொல்வது உண்மையா? என்பதை அறிய, ஊர்மக்கள் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு காட்டு பகுதிக்கு வந்தார்கள். அவள் சொன்னப்படி சாணம் நிரப்பிய கூடை ஒன்று அங்கிருந்தது. அந்த சாணக் கூடையை தூக்கி பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்… பலர் தூக்க முயற்சித்தும் தூக்க முடியவில்லை.
எப்படி அனுமனின் வாலை தூக்க முடியாமல் பீமன் துவண்டுபோனானோ அதுபோல, அந்த ஊர் மக்களும் துவண்டு போனார்கள். அப்போது திடீரென அந்த பெண்ணின் உடலில் அம்மன் வந்து பேசினாள்.
“நான் இந்த இடத்தில் பூமிக்குள் இருக்கிறேன். எனக்கு இந்த இடத்திலேயே கோயில் கட்டுங்கள்.” என்றாள். இதை கேட்ட ஊர்மக்களும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தபோது அம்பாள், சிலையாக இருப்பதை கண்டார்கள். சிலை கிடைத்த இடத்திலேயே ஒரு ஆலயத்தை எழுப்பி பிரதிஷ்டை செய்தார்கள்.
இந்த அம்மனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எண்ணியபோது ஸ்ரீராமரால் வெளிப்பட்ட வைப்பாறும், அர்ஜுனன் உருவாக்கிய அர்ஜுனன் ஆறும் கங்கை நதிக்கு இணையான புண்ணியம் நிறைந்து இருப்பதாலும், இந்த இரு ஆறுகளுக்கிடையே அம்மன் தோன்றியதால், இந்த அம்மனுக்கு இரு+கங்கை+குடி= இருகங்கைகுடி என்று பெயர் வைத்தார்கள்.
பிறகு மக்கள் இருகங்கைகுடியை, இருக்கன்குடி என்று அழைக்க தொடங்கி அதுவே அவ்வூர் பெயரானது.
குழந்தை பாக்கியம்
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இருக்கன்குடி அம்மனிடம், குழந்தை பிறந்தால் கரும்பு தொட்டில் கட்டுவதாக வேண்டினால், அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் அமைகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்து நேர்த்திகடனை சொன்னதுபோல் செய்து விடுகிறார்கள்.
கரும்புதொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து சன்னதியை வலம்வந்து தங்களுடைய நேர்த்திகடனை நிறைவேற்றுகிறார்கள்.
இந்த அம்மன், சதுரகிரி சிவயோக ஞான சித்தரால் வடிவமைக்கப்பட்டவர். சிவயோகியால் உருவானதாலும், அம்மன் சிவஅம்சமாக இருப்பதாலும், இந்த அம்மன் சன்னதி எதிரே நந்தி பகவான் இருக்கிறார்.
இருக்கன்குடி அம்மனை வணங்கினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் குறையும். குழந்தை பாக்கியம் கிட்டும். வளமை பெருகும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserve