இனிய வாழ்வு அமைய துணை நிற்கும் கோட்டை மாரியம்மன்
நிரஞ்சனா
திண்டுக்கல் மாவட்டம் – கோட்டை மாரியம்மன் திருக்கோயில்.
இறைவன் நாம் விரும்புகிற இடத்தில் நிலைத்து இருக்க ஆயிரம் மந்திரங்களை உச்சரித்து வர்ணித்தாலும், இறைவன் தனக்கு விருப்பமான இடத்தைதான் தேடி சென்று அருள்புரிவார். குதிரையை கட்டாயப்படுத்தி தண்ணீர் குடிக்க வைக்க முடியாததை போல், இறைவனையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எளிதானதல்ல. அதுவே இறைவன் விரும்பிவிட்டால், எத்தனை துஷ்டசக்திகள் தடுத்தாலும் அவற்றை வீழ்த்தி கடவுள், தன் பக்தனுக்கு துணை நின்று அருள் செய்ய வந்துவிடுவார்.
ஒரு இடத்தில் தெய்வசக்தி சுயம்புவாக தோன்றுகிறது என்றால் அதற்கு காரணம், தெய்வத்தின் பெரும் உதவி அந்த பகுதியில் வாழ போகிற பக்தர்களுக்கு தேவையாக இருக்கப் போகிறது என்பதே ஆகும். அந்த வகையில் சுயம்புவாக தோன்றியவர்தான் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்.
அம்மனை வெளிப்படுத்திய பசு
பால் வியபாரி ஒருவர் இருந்தார். அவர் வளர்க்கும் பசு மாடுகளை தினமும் சில மணி நேரங்கள் மெய்ச்சலுக்கு விடுவார். அவ்வாறு மெய்ச்சலுக்கு சென்ற ஒரு பசுவின் மடியில் இருந்து தினமும் பால் குறைவாக கிடைப்பதை கண்ட பசுவின் உரிமையாளர் கோபம் அடைந்தார். “யாரோ பசுமாட்டின் பாலை திருடுகிறார்கள். அந்த திருடனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும்.” என்று முடிவு செய்தார். அதனால் ஒருநாள் பசுகளை மெய்ச்சலுக்கு விட்டு, பால் குறைவாக கிடைக்கும் குறிப்பிட்ட அந்த பசுவை பின் தொடர்ந்து கண்காணித்தார்.
தன் கூட்டத்துடன் சென்றுக் கொண்டிருந்த அந்த பசு, திடிரென தன் கூட்டத்தை விட்டு அதுவே தனியாக விலகி, செடி – கொடிகள் நிறைந்த ஒரு பகுதிக்கு சென்று, தாமாகவே அங்கே அது பால் சுரந்தது. இந்த காட்சியை கண்ட அந்த பசுவின் சொந்தக்காரர் விரைந்து பசுமாட்டின் அருகில் வந்து, அந்த மாட்டை அங்கிருந்து துரத்திவிட்டு, அந்த செடி-கொடிகள் நிறைந்த பகுதியை தன் கைகளால் விலக்கி பார்த்தார். அங்கே யாரும் இல்லை. இருந்தாலும் மேலும் சந்தேகம் அடைந்து அந்த இடத்தின் பூமியை தோண்டி பார்த்தார். அப்போது –
ஆயிரம் சூரியன் பிரகாசிப்பது போல் பிரகாசித்தது அந்த இடம். இதனால் பால் பண்ணை வியபாரியின் கண்கள் கூசியது. பயந்து போன அவர் அங்கிருந்து ஒடினார். அந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தன்னைதான் பைத்தியகாரன் என்பார்கள் என்று தயங்கிய பசுவின் உரிமையாளர் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல், எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு வந்து விட்டார்.
மெய்ச்சல் முடிந்து வீடு திரும்பிய அந்த குறிபிட்ட பசு மாடு, தன் எஜமானரை தேடியது. ஆனால் அவரோ பயத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் ஜன்னல் வழியாக அந்த பசுவை பார்த்தார். அந்த பசுவும் ஏதோ சொல்ல வந்தது போல தன் எஜமானரை பார்த்தது
அன்றிரவு – அந்த பசுவின் உரிமையாளர் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் கனவில் அம்மன் தோன்றி, “பயப்படாதே. நான்தான் அந்த இடத்தில இருக்கிறேன். நீ என்னை பூமியில் இருந்து வெளியே எடுத்து வழிபாடு செய்.” என்றார்.
பூமிக்குள் இருப்பது நம் அன்னைதானே என்று தைரியம் வந்தது. உடனே எழுந்து வெளியே வந்து தமது பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் நெருங்கிய நண்பர்களையும் எழுப்பி பகலில் நடந்த விஷயத்தையும் தமது கனவையும் சொன்னார் அந்த பசுவின் உரிமையாளர். அந்த நள்ளிரவில் நண்பர்கள் துணையுடன் ஊர்மக்களும் உடன் வர தீபந்தம் வெளிச்சத்தில் அந்த இடத்தை போய் பார்த்தார்கள். பசுவின் சொந்தக்காரர் சொன்ன இடத்தை தோண்டி பார்த்தபோது அவர் சொன்னப்படி அம்மனின் சிலை பூமிக்குள் இருந்தது.
அதனை பத்திரமாக வெளியே எடுத்தார்கள். அப்போது பகலில் நடந்த அற்புதம் அந்த நள்ளிரவிலும் நடந்தது. ஆம். அந்த நள்ளிரவின் இருள் மறைந்து பகல் போல் சில நொடிகள் பிரகாசித்தது. இதை கண்ட ஊர்மக்கள் இந்த மாரியம்மன் சக்தி வாய்ந்தவள். அதனால்தான் இந்த அம்மன் வெளிப்பட்ட உடன் வானில் இருந்து சூரியனே இந்த நேரத்தில் அம்மனை தரிசிக்க அதிசயமாக தோன்றினான். இது நல்ல சகுனம். என்று கூறி வணங்கினார்கள். சில நாட்களுக்கு பிறகு அம்மனுக்கு ஒரு சிறிய கோயிலை கட்டி வழிபாடு செய்தார்கள்.
மாரியம்மன் – கோட்டை மாரியம்மனாக உருவானாள்
காலங்கள் ஒடியது. சேர நாட்டை கைபற்ற திப்புசுல்தான் தன் படையுடன் வந்துக்கொண்டு இருந்தார். இதை கண்ட சேர நாட்டின் அரசருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. திப்புசுல்தானிடம் இருக்கும் அளவில் அவரிடம் போர்படை இல்லை. இதனால் மிகவும் மனம் வருந்தினார் அரசர். அத்துடன் மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று, “தாயே… பெரும் படையுடன் வரும் திப்புசுல்தானிடம் இருந்து என் கோட்டையை காப்பாற்றி கொடு.” என்று வேண்டி கலங்கி நின்றார். அப்போது அவருக்கு மன தெளிவும், துணிவும் கிடைத்தது. மாரியம்மனின் மீது தன் மனபாரத்தை போட்டுவிட்டு போருக்கு புறப்பட்டார் அரசர்.
போர் கடுமையாக நடந்தது. அரசரே எதிர்பாரதபடி அவரின் படை வீரர்கள் ஆவேசத்துடனும், போர் தந்திரங்களுடனும் எதிரி படைகளை தாக்கினார்கள். திப்புசுல்தான் படை தோல்வியில் திரும்பி ஓடியது.
தம்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய மாரியம்மனுக்கு பெரிய கோயில் எழுப்பினார் அரசர். தன் கோட்டையை காப்பாற்றி தந்த அம்மனுக்கு, “கோட்டை மாரியம்மன்” என்று பெயர் வைத்தார் சேர நாட்டின் மன்னர்.
நாகதோஷத்தை போக்கும் கோட்டை மாரியம்மன்
கோட்டை மாரியம்மன் தன் கையில் பாம்புடன் காட்சி தருகிறார். நாகதோஷம் இருப்பவர்கள் கோட்டை மாரியம்மனின் பெயருக்கு அர்ச்சனை செய்தால் நாகதோஷம் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்கிறது ஸ்தலபுராணம்.
தீராத நோய் தீர கொடிகம்பத்தின் அடியில் மஞ்சளும் – உப்பும் காணிக்கை செலுத்துகிறார்கள் பக்தர்கள். மங்களத்தை தரும் மஞ்சளை காணிக்கை செலுத்தினால் உடல் பிணி நீங்கும்.
உப்பு கரைவது தெரியாமல் போவது போல், வியாதியும் வந்த சுவடு தெரியாமல் போகும். அதனை உணர்த்துகிறது இந்த உப்பு பரிகாரம்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்கிறார் அம்மன். தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை கொடுத்த அம்மனுக்கு இனிப்பான கரும்பில் தொட்டில் கட்டி, அந்த கரும்புதொட்டிலில் குழந்தையை வைத்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபிக்ஷங்கள் ஏற்படும். கோட்டை மாரியம்மனை வாழ்க்கையின் ஒருமுறையாவது தரிசித்தால், நம் இல்லம் என்கிற கோட்டையில் அம்மன் அருள் துணை நிற்கும். என்றென்றும் தம் பக்தர்களாகிய நம்மை காக்கவே காத்திருக்கிறாள் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.