Friday 18th September 2026

தலைப்புச் செய்தி :

கன்னி மூலை பூஜை அறை ஆபத்தானது? | Is the Kanni Moolai Pooja Room a Vastu Mistake?

G. VIJAY KRISHNARAU
Siva`s Vaasthu Planners

  ஊருக்கு கோயில், வீட்டுக்கு பூஜை அறை. ஆம். பூஜையறை என்பது எந்த ஒரு வீட்டுக்கும் அதிமுக்கியமானது. பூஜை அறைக்கு மத பாகுபாடு இல்லை. எந்த மதத்தினராக இருந்தாலும் பூஜை அறை பொதுவானது. நாம் பூஜை அறை என்கிறோம், சிலர் வழிப்பாட்டு அறை என்கிறார்கள். பெயரில் மாற்றம் இருக்க்கிறது, ஆனால் நோக்கம் ஒன்றுதான்.

சரி. பூஜை அறையை வீட்டில் எந்த இடத்தில் அமைக்க வேண்டும்?

மனையடி சாஸ்திரம் என்று முன்னோரு காலத்தில் அறியப்பட்ட வாஸ்து சாஸ்திரத்தில் பூஜை அறைக்கு என்று தனியாக ஒரு இடத்தை குறிப்பிட்டார்கள். இறைவன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அதனால் பூஜை அறைக்கு எந்த இடத்தை தேர்வு செய்தால் என்ன? என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட இடம்தான் பூஜையறைக்கு நல்லது என அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். கிழக்கும், மேற்கும் பூஜையறைக்கு நல்லது என்று குறித்து வைத்தார்கள். மற்றப்படி சரியான திக்கு என்னவென்று குறிப்பிடவில்லை. பின்னால் வந்த வாஸ்து நூலாசிரியர்கள் வடகிழக்கும், தென்மெற்கும்தான் பூஜை அறைக்கு சிறந்தது என்று இன்றுவரை சொல்லி வருகிறார்கள். வடகிழக்கு மூலையை பூஜையறைக்கு அவர்கள் தேர்வு செய்ததற்கு காரணம், வடகிழக்கு ஈசான்ய மூலை, ஈசனை குறிக்கும் இடம் என்பதால் அவர்கள், வடகிழக்கு மூலையை பூஜையறைக்கு நல்லது என்று கருதி எழுதி வைத்தார்கள்.

அடுத்து வந்த நூலாசிரியர்கள், தென்மேற்குதான் பூஜை அறைக்கு நல்லது என்று கூறினார்கள். இதற்கு அவர்கள் கூறிய காரணம், தென்மேற்கு குடும்பத்தில் பெரியவர்கள் இருக்க வேண்டிய பகுதி அதனால், இறைவன் இங்கு இருந்தால் இல்லத்திற்கு இனிது என்றும், பணம் இருக்க வேண்டிய பகுதி தென்மேற்கு மூலை என்றும் கூறினார்கள். இதில், இன்னொருபடி மேலே போய், தென்மேற்கு மூலை குபேர மூலை என்று கூறிப்பரப்பினார்கள்.

ஒருசில கோயில்களில் கூட தென்மேற்கு மூலையில் குபேரனின் விக்ரகம் (சிலை) அமைத்து இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். உண்மையில், குபேரனுக்கும் தென்மேற்கு பகுதிக்கும் சம்மந்தமே இல்லை. குபேர மூலை என்று ஒன்றே மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரத்தில் இல்லவே இல்லை. “குபேர திசை” என்றுதான் உ்ணடு. அதுவும் வடக்கு திசை ஒன்று மட்டும்தான் குபேர திசை. முறையே, கிழக்கு – இந்திரன், மேற்கு – வருணன், தெற்கு – எமன், வடக்கு – குபேரன். அதுபோல, திக்குகள் அதாவது மூலைகளில், வடகிழக்கு – ஈசான்ய மூலை, தென்கிழக்கு – அக்னி மூலை, வடமேற்கு – வாயு மூலை, தென்மேற்கு – நிருதி அல்லது நைருதி மூலை.

இதில், தென்மேற்குக்கு உரிய நிருதிக்கும், குபேரனுக்கும் சம்மந்தமே இல்லை. சரி, அப்படி என்றால் பூஜை அறைக்கு வடகிழக்கு மூலை நல்லதா? தென்மேற்கு மூலை நல்லதா? என்று கேட்டால், இரண்டுமே நல்லதல்ல. அதிலும் குறிப்பாக தென்மேற்கில் அமைக்கப்படும் பூஜை அறை ஆபத்தானது – மிகவும் கெடுதல் தரக்கூடியது.




என்ன காரணம்?

கட்டடக்கலை சாஸ்திரத்தில் நீருக்கு ஆகாத திசை தென்கிழக்கு. நெருப்புக்கு ஆகாத திசை வடகிழக்கு. இதில் நீருக்கும், நெருப்புக்கும் ஆகாத ஒரே திசை தென்மேற்கு. 

அதுபோலவே, காற்றுக்கும் ஆகாது தென்மேற்கு மூலை.

தென்மேற்கில் மேல்நிலை நீர் தொட்டி (Overhead water tank)

தண்ணீருக்கு ஆகாத பகுதி தென்மேற்கு என்றால், மேல்நிலை தண்ணீர் தொட்டி மட்டும் அமைக்கலாமா அது தவறில்லையா? என்று கேட்டால், தாராளமாக அமைக்கலாம். காரணம், தென்மேற்கில் பள்ளம் இருக்கக் கூடாது. மேடு அல்லது உயரம் இருக்க வேண்டும் என்பதே வாஸ்து விதி.

இதில் வாஸ்து நுட்பம் தெரிந்தவர்களுக்கும் தெரியாத விஷயமாக உள்ளது என்னவென்றால், தென்மேற்கில் பூஜை அறை அமைக்கக் கூடாது என்கிற வாஸ்து விதி தெரியவில்லை.

நீருக்கும், நெருப்புக்கும் ஆகாத பகுதியான தென்மேற்கில் பூஜை அறை வைக்கக் கூடாது. பூஜையறை என்பது, நீரும், நெருப்பும் தினந்தோறும் பயன்பாட்டில் உள்ள அறை.

நெருப்புக்கு பூஜை அறையில் என்ன வேலை?

இங்குதான் தினந்தோறும் தீபங்கள் ஏற்றுகிறோம்.

நீருக்கு பூஜை அறையில் என்ன வேலை?

இங்குதான் பலர் சின்ன, சின்ன தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகம் போன்றவற்றை செய்கிறோம்.

ஆதலால் இந்த அறையில் நீரும், நெருப்பும் தினந்தோறும் வழக்கத்தில் இருப்பதால், நாட்கள் ஆக, ஆக வழிபாட்டுக்குரிய பலனை குறைத்து, கொஞ்சம், கொஞ்சமாக தோஷத்தை உயர்த்தும்.

இதில், என்ன மாதியான பிரச்னைகளை உண்டு பண்ணும் என்று கேட்டால், திடீர் விபத்து, காயங்கள், சிகிச்சைகள், சட்டச் சிக்கல்கள், தேவையற்ற வழக்கில் கைதாவது, அடிகடி கோர்ட்-கேஸ் என்று வழக்குகளில் மாட்டுவது, எளிதில் ஏமாற்றப்படுவது, காதல் விவகாரங்களில் அகப்படுவது மற்றும் ஏமாறுவது போன்றவை நிகழும்.

தெற்கு நோக்கிய தென்மேற்கில் பூஜை அறை இருந்தால், பெண்களுக்கு ஆபத்து தரும். மேற்கு நோக்கிய தென்மேற்கில் பூஜை அறை இருந்தால் ஆண்களுக்கு ஆபத்து தரும்.

சரி, தென்மேற்கில் பூஜையறை அமைத்துவிட்டால், அதில் மாற்றம் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், அதற்கு பரிகாரம் இருக்கிறதா?

பரிகாரம் இருக்கிறது! அதற்காக எப்போதும் பரிகாரம் தேடக் கூடாது. பரிகாரம்தான் இருக்கிறதே என்று தெரிந்தே தென்மேற்கில் பூஜையறை அமைக்கும் தவறை செய்யக்கூடாது.

தெரிந்தே செய்யும் தவறுக்கு பரிகாரம் கைக் கொடுக்காது!

நமசிவாய

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Consultation Mail to: bhakthiplanet@gmail.com

© 2011-2026 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 17 2026. Filed under Headlines, Home Page special, Vaasthu, கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »