எட்டுக்குடி முருகனை வணங்கினால் உடல் உபாதைகள் நீங்கும்: இன்பமான வாழ்க்கையும் எட்டிபிடிப்போம்.
Written by Niranjana
முகவரி: அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி- நாகப்பட்டினம் மாவட்டம்.
கோவில் உருவான கதை
நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும். அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி. அப்போது அந்த பக்கமாக வந்த அந்நாட்டுஅரசன் சிற்பி தயாரித்துக் கொண்டிருக்கும் முருகனின் சிலையில் உயிர் ஓட்டம் இருப்பதை உணர்ந்து அதிசயித்தார். இந்த சிற்பி இப்படி ஒரு உயிர் ஓட்டம் உள்ள சிலையை வேறு எங்கும் இது மாதிரி சிலையை உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில அந்த சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி விட்டார்.
மனம் தளராமல் சிற்பி செதுக்கப்பட்ட கற்சிலை மயில் பறந்தது
இனி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்ற முடிவு செய்த சிற்பி, அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். சோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, “ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார்.
அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார். அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.
இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று, “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார்.
இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். அரசர் வந்த சமயம் அந்த சிற்பி, மயில் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார். மன்னரை கண்டதும் கற்சிலை மயில் பறக்க ஆரம்பித்தது.
இதை கண்ட அரசர், தன் அருகில் இருந்த காவலர்களிடம் “மயிலை எட்டிப்பிடியுங்கள்“ என்றார். ஆனால் அந்த கற்சிலை மயில் காவலர்களுக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டியது. இதனால் சினம் அடைந்த காவலர்கள் கோபமாக அந்த கற்சிலை மயிலை பிடிக்க முயற்சித்ததால் அந்த கற்சிலை மயிலில் கால் சிறியதாக உடைந்தது.
பிறகு தாமாகவே அந்த கற்சிலைமயில் முருகன் சிலை அருகே வந்து அமர்ந்தது.
முருகன் காட்சி தரும் அழகு
எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கேற்ப முருகப் பெருமான் தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
பரிகாரம்
இந்த எட்டுக்குடி முருகப் பெருமானை தரிசித்து அவருக்கு வாசனை மலர்களை தருபவர் வாழ்வில் வறுமை நீங்கும். சந்தனம் தந்தால் உடல் உபாதைகள் நீங்கும். விபூதி காணிக்கை விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும். முருகனுக்கு வஸ்திரம் வழங்கினால், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பார்கள். முருகனுக்கு அபிஷேகம் செய்தால் துன்பம் இல்லா வாழ்வு அமையும்
எட்டுக்குடி முருகனை வணங்கி இன்பமான வாழ்க்கையை எட்டிபிடிப்போம்.
“கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகாரா
வேலனுக்கு அரோகரா”
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved