Wednesday 1st January 2025

தலைப்புச் செய்தி :

ஸ்ரீ மகாலஷ்மி மகிமை

Written by NiranjanaNIRANJHANA

ஸ்ரீ மகாலஷ்மி அருள் கிடைக்க தேவர்கள் முதல் முனிவர்கள் வரை தவம் இருப்பார்கள். அவ்வளவு ஏன் ஸ்ரீமந் நாராயணனும், செல்வத்தின் அதிபதியான குபேரனும் கூட ஸ்ரீ மகாலஷ்மியின் அருளுக்காக தவம் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஸ்ரீ மகாலஷ்மி, தனக்கு பிடித்தவர்கள் மேல்தான் தன் அருள் பார்வையை செலுத்துகிறார். அப்படி லஷ்மியின் பார்வை பெற்றவர்கள் சிலர்தான். கடும் தவம் இருந்தால்தான் ஈசனும், உமையவளும, பெருமாளும் காட்சி தருவார்கள். ஆனால் மகாலஷ்மியோ, குழந்தை மனம் படைத்தவர் என்கிறார்கள் மகரிஷிகள். லஷ்மி கடாக்ஷம் பெற்றவர்கள், பிறகு தங்கள் மனம் போன போக்கில் தீய வழிகளில் சென்றால்,  அவர்களின் மீது இருந்த கருணை பார்வையை அகற்றி விடுவாள். லஷ்மிதேவிக்கு அலைமகள் என்கிற பெயரும் உண்டு. காரணம் கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் மட்டுமல்ல. அலையை போன்று ஒரு இடத்தில் நிலையாக லஷ்மி கடாக்ஷம் இருக்காது. அப்படி இருக்க வேண்டும் என்றால், ஸ்ரீமகாலஷ்மி வழிப்பாட்டில் நாம் எப்போதும் சரியாக-கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் முனிவர்களும் மகரிஷிகளும்.

லஷ்மி தேவி உருவான கதை

ஸ்ரீமகாலஷ்மி எப்படி உருவானார்.? அவருக்கு எத்தனை பெயர்கள்.? அத்தனை பெயருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவை என்ன? போன்ற விஷயங்களை நாரதர், ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என்கிறது “தேவிபாகவதம்.”

ஸ்ரீமந் நாராயணன் சொல்கிறார்…

“பாற்கடலில் தோன்றியவளே ஸ்ரீமகாலஷ்மி. லஷ்மி என்றால் கருணையோடு பார்ப்பவர் என்று அர்த்தம். இதனால் அவள் “லஷ்மி” என்ற நாமத்தில் வைகுண்டத்தில் இருந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் தந்து கொண்டு இருக்கிறாள். ராஜ்யங்களில் ராஜ்ய லஷ்மியாகவும், நாம் வசிக்கும் வீடுகளையும் “கிருகம்” என்று அழைக்கப்படுவதால், இல்லறவாசிகளுக்கு அருள் தந்திட கிருக லஷ்மியாகவும், எல்லாப் பிராணிகளிடத்தில் சோப லஷ்மியாகவும், புண்ணியவான்களிடத்தில் ப்ரீதி லஷ்மியாகவும், சத்திரியர்களிடத்தில் கீர்த்தி லஷ்மியாகவும், வைசியர்களிடத்தில் வர்த்தக லஷ்மியாகவும், பாவிகளிடத்தில் கல லஷ்மியாகவும்,

வேதாந்திகளிடத்தில் தயா லஷ்மியாகவும் இருக்கிறாள் ஸ்ரீமகாலஷ்மி. இப்படி எல்லா ஜீவராசிகளிடத்திலும் லஷ்மி வாசம் செய்கிறாள். லஷ்மி பாற்கடலில் தோன்றினாள். இவளை நான் சித்திரை, தை, புரட்டாசி மாதத்திலும், செவ்வாய் கிழமைகளிலும் வணங்கி லஷ்மியின் அன்பை பெற்றேன்.

அதற்கு முன் குபேரனிடம் கடன் பெற, சிவபெருமானிடமும் பிரம்மனிடமும் கடன் பத்திரத்தில் சாட்சி கையெழுத்து வாங்கி குபேரனிடம் கடன் பெறும் நிலையில் இருந்தேன். பிரம்மன், புரட்டாசி மாத சுக்கிலாஷ்டமியிலும், தைமாத சங்கராந்தியிலும், மாசி மாதம் சங்கராத்திலும் பூஜித்து நலங்களை பெற்றார்.

இப்படி தெய்வங்களும், முனிவர்களும், மகரிஷிகளும் ஸ்ரீமகாலஷ்மியை பூஜித்து பயன் பெற்றோம்.” என்று நாரத முனிவரிடம் ஸ்ரீமந் நாராயணனன் கூறினார்.

ஸ்ரீமகாஷ்மியை அவமதித்தவன் பட்ட அவதி

சங்கீத வித்தகியான “வித்தியாரத” என்ற பெண், வைகுண்டத்தில் லஷ்மிக்கும் நாராயணனுக்கும் யாழ் வாசித்தாள். அந்த இசையில் மகிழ்ந்த லஷ்மிதேவி, அந்த பெண்ணுக்கு தாம் அணிந்திருந்த மலர் மாலையை பரிசாக கொடுத்தார். லஷ்மிதேவி தனக்கு கௌரவம் தந்ததற்கு இந்த யாழ்தான் காரணம் என்று உணர்ந்து, அந்த யாழ்க்கு லஷ்மிதேவி தந்த மலர்மாலையை போட்டு அலங்கரித்து, அதை பலரும் பார்க்கும் விதமாக பெருமையோடும், மகிழ்ச்சியோடு எடுத்து வந்து கொண்டு இருந்தாள் வித்தியாரத.

இந்த தகவல் அறிந்த துர்வாச மகரிஷி, அந்த வித்தியாரத பெண்ணை வணங்கினார். யாருக்கும் வணங்காதவர் தம்மை பார்த்ததும் வணங்குகிறாரே என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த வித்தியாரத, ஸ்ரீமகாலஷ்மி கொடுத்த மலர் மாலையை யாழில் இருந்து எடுத்து துர்வாச மகரிஷியிடம் கொடுத்தார். அதை அன்புடன் பெற்றுக்கொண்டு வந்துக்கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அப்போது அவர் எதிரில் இந்திரன் தன் யானையான ஐராவதத்தில் ஏறி வந்துக் கொண்டு இருந்தார்.

இந்திரனை கண்ட துர்வாச மகரிஷி, தன் கையில் இருந்த மலர்மாலையை, “இது ஸ்ரீமகாலஷ்மி அணிந்திருந்தது” என்பதை சொல்லி, இந்திரனிடம் தந்தார். ஸ்ரீமகாலஷ்மி அணிந்திருந்த மலர் மாலை என்ற தெரிந்தும், அதனை அலட்சியமாக யானையின் தலை மீது போட்டான் இந்திரன். இந்திரனின் செயலை கண்ட முனிவர் கோபத்தோடு, “உன்னிடம் இருக்கும் லஷ்மிகடாச்சம் போகட்டும்” என்று சபித்து விடுகிறார்.

இதன் பிறகு இந்திரன், பரதேசியாகும் நிலை ஏற்பட்டது. தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வருந்தி குருபகவானிடம் தன் நிலையை சொல்லி வருத்தப்பட்டார்.

“பிரம்மனை நினைத்து தவம் செய்” என்றார் குருபகவான். இந்திரனும் பிரம்மனை நினைத்து தவம் செய்தான். பிரம்மன் இந்திரனின் தவத்தை ஏற்று, “ஸ்ரீலஷ்மிதேவியை நினைத்து தவம் செய். அவள் பார்வை பெற்றால்தான் உன் பாவ நிலை மாறும்.” என்றார். அதன்படி இந்திரனும் கடும் தவம் புரிந்தான். இதன் பயனால் மீண்டும் ஸ்ரீமகாலஷ்மி அருள் பார்வை கிடைத்து, மீண்டும் இந்திர பதவியை பெற்றான்.

குழந்தை பாக்கியம் தரும் சந்தான லஷ்மி

பிருகு முனிவர் விஷ்ணுபகவானை பார்க்க வந்தார். அப்போது விஷ்ணுபகவான் லஷ்மி தேவியிடம் பேசிக்கொண்டு இருந்ததால் பிருகு முனிவர் வந்திருப்பதை கவனிக்கவில்லை. ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் ஸ்ரீநாராயணன் தம்மை அவமானப்படுத்தியதாக நினைத்துவிட்ட பிருகு முனிவர், நேராக விஷ்ணுபகவான் முன் சென்று அவர் மார்பில் எட்டி உதைத்தார்.

இதை கண்ட லஷ்மிதேவி பெரும் சினம் கொண்டாள். ஆனால் விஷ்ணுபகவானோ பிருகு முனிவரின் காலைப் பிடித்து கொண்டு, “என்னை எட்டி உதைத்ததால் உங்கள் கால் வலிக்கிறதா?” என்ற பிருகு முனிவரின் கால்களை பிடித்து தடவி கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காதே லஷ்மிதேவி, கோபத்தோடு வைகுண்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் விஷ்ணுபகவான் மட்டும் கவலையடையவில்லை, பிருகு முனிவரும் வருத்தப்பட்டார். அத்துடன் அவருக்கு இருந்த மனமகிழ்ச்சி போனது போல் ஒரு உணர்வு உண்டானது.

இதனால் ஸ்ரீமகாலஷ்மிதேவியை தன் மகளாக வளர்த்தால், விலகி போன தன் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் திரும்ப கிடைக்கும் என்று உணர்ந்து, சந்தான லஷ்மியை நினைத்து தவமிருந்து ஸ்ரீமகாலஷ்மியை மகளாக பெற்று பாசத்துடன்  வளர்த்தார்.

அதேபோல் சந்தான பாக்கியம் இல்லாமல் வருந்திய நீதிமான் என்ற அரசர், சந்தான லஷ்மியை வணங்கி லஷ்மி தேவியை மகளாக பெற்றார். இப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லஷ்மியை வணங்கினால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தைரிய லஷ்மி இருந்தாலே அஷ்டலஷ்மிகள் வாசம் செய்யும்

மன்னர் போஜ ராஜன், தினமும் ஸ்ரீகஜலஷ்மியை பூஜித்து வந்தார். அவரின் வழிபாடுக்கு மகிழ்ந்த அஷ்டலஷ்மிகளும் காட்சி கொடுத்தார்கள். மன்னர் போஜராஜன் ஸ்ரீகஜலஷ்மியை பார்த்து, “தாயே நீங்கள் என் நாட்டிலேயே எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்.

“அது இயலாது. நான் ஒர் இடதில் மற்ற லஷ்மிகளை விட்டு தனியாக நிலைத்து இருக்கமாட்டேன்.” என்றாள் கஜலஷ்மி.

சற்று யோசித்தார் அரசர். தன் புத்திசாலிதனத்தை கொண்டு, ஒவ்வொரு லஷ்மிக்கும் வெற்றிலை-பாக்கு, மஞ்சள் குங்குமத்தை கொடுத்து கொண்டே வந்தார். அதனை பெற்று கொண்ட ஒவ்வொரு லஷ்மிகளும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக மன்னர் போஜ ராஜன் தைரியலஷ்மியின் காலில் விழுந்து, “தாயே உங்கள் பிள்ளை போல அல்லவா நான். எனக்கு நீங்கள் ஒரு வரத்துடன் சத்தியமும் செய்து தர வேண்டும். செய்வீர்களா?“ என்றார்.

சரி என்ன பெரியதாக கேட்டு விட போகிறான் என்ற தைரியத்தில்,

“தாராளமாக வரம் கேள். தருகிறேன்.” என்றார்

“தாயே நீங்களாவது என்னுடனே நிலைத்திருக்க வேண்டும். இதுதான் நான் கேட்கும் வரம். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். சத்தியத்தை மறவாதீர்கள்.” என்றார்.

“அப்படியே ஆகட்டும்.” என்றாள் தைரியலஷ்மி.

தாம்பூலம் வாங்கி வரவேண்டிய தைரியலஷ்மி,  இன்னும் வராததால் மீண்டும் போஜ ராஜனின் அரண்மனைக்கு திரும்பிய மற்ற லஷ்மிகள், நடந்த விபரத்தை அறிந்து, “என்ன போஜராஜனே உன் புத்திசாலித்தனத்தை எங்களிடமே காட்டிவிட்டாயே.” என்றார்கள். காரணம் தைரிய லஷ்மி எங்கு வாசம் செய்கிறாளோ அங்குதான் மற்ற எல்லா லஷ்மிகளும் வாசம் செய்வார்கள் என்கிற ரகசியத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார் மன்னர் போஜராஜன்.

நவராத்திரி திருநாளில் மட்டுமல்லாமல் எந்த நாளிலும் தைரிய லஷ்மியை வணங்கினால் அஷ்டலஷ்மிகளின் அருளும் ஆசியும் நிச்சயம் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்வார்கள்.

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 1 2014. Filed under Headlines, அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »