சொந்த வீடு தருமா செவ்வாய்? Can Mars Bring You Your Own House?

G. Vijay Krishnarau
SIVA`S VAASTHU PLANNERS
காலமெல்லாம் உழைத்தாலும், நமக்கென சிறு ஓட்டு வீடு இருந்தாலும் அந்த நிம்மதியும், ஆனந்தமும் அலாதிதான். என்னதான் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தில் ஒரு பகுதியை வாடகைக்கு என்று ஒதுக்கினாலும், வாடகை வீடு வாடகை வீடுதானே என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. சொந்த வீடெல்லாம் வேண்டாம், EMI-க்கு யார் அழுவது? வாடகை வீடே போதும் என்று நினைப்பவர்களும் உண்டு. EMI-இல் வீடு வாங்கினால் அது எப்படிங்க சொந்த வீடு ஆகும்? EMI முடியும்வரை கடன் கொடுத்த வங்கிதானே வீட்டுக்கு House owner. இப்படியாக ஒவ்வொருவருக்கும் மாறுப்பட்ட சிந்தனைகள் இருந்தாலும் கூட, சொந்த வீடு என்பது தனி ராஜ்ஜியம்தானே. சரி. எல்லோருக்கும் சொந்த வீடு அமைந்துவிடுமா? என்றால், அதுதான் இல்லை.
அதற்கு நமது சுயஜாதகம் ஒத்துழைக்க வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் பூமிக்காரகன் செவ்வாய் சிறப்பு பெற்று இருக்க வேண்டும். செவ்வாய் வழுவிழந்து இருந்தால் பூமி யோகம் இல்லை. சொந்த வீட்டுக்கு அடிப்படை பூமி யோகம் தரும் செவ்வாயின் சிறப்பம்சம்.
செவ்வாய் நமது ஜாதகத்தில் சிறப்பாக இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?
சுலபம்தான். ஜாதகத்தில், லக்கினத்திற்கு 6,8,12-ஆம் இடங்களில் செவ்வாய் இருக்கக் கூடாது. செவ்வாய், கேதுவுடன் இணைந்து இருக்கக் கூடாது. செவ்வாய், கேதுவின் சாரத்தில் இருக்கக் கூடாது. செவ்வாய், அஷ்டமாதிபதி என்கிற 8-ஆம் இடத்தின் சாரமும், தொடர்பும் இருக்கக் கூடாது. செவ்வாய்-சனி சேர்க்கையும் ஒருவிதத்தில் பூமி யோகத்தை தடைப்படுத்தும். செவ்வாய், இராகுவுடன் இணைந்திருந்தால், பூமி (மனை) இருந்தும் அதில் உடனடியாக வீடு கட்டமுடியாத நிலை இருக்கும்.
சரி. செவ்வாய் எப்படிதான் இருக்க வேண்டும்?
செவ்வாய் 6,8,12-இல் இருந்தாலும், 6,8,12-க்குரிய கிரகமாக செவ்வாய் இருக்க வேண்டும். 5,9-இல் செவ்வாய் இருக்க வேண்டும். செவ்வாய் குருவின் பார்வையை பெற்றிருக்க வேண்டும். செவ்வாய்-சனி ஒன்றாக இருந்தாலும், உடனிருக்கும் சனி, லக்கினாதிபதியாகவோ, 5,9-குரியவராகவோ இருக்க வேண்டும் அல்லது, குருவின் பார்வையை பெற்றிருக்க வேண்டும். லக்கினத்திற்கு 5,7,9-இல் குரு அமைந்து, அங்கிருந்து அவர் செவ்வாயை பார்த்தாலும் இன்னும் சிறப்பு. செவ்வாய், லக்கினாதிபதியாக இருந்து, அவருடன் 5-ஆம் அதிபதியோ, 9-ஆம் அதிபதியோ இருந்தால், அந்த ஜாதகர் நல்லதொரு மனைக்கு சொந்தகாரர்.
இராசிக்கட்டத்தில் செவ்வாய் வலுவிழந்து, அம்ச கட்டத்தில் பலம் பெற்று இருந்தால், செவ்வாய் சொந்த வீடு வாங்குவதற்கு துணை செய்வாரா? என்று கேட்டால், ஜென்ம இராசிக்கட்டத்தில் இருக்கும் செவ்வாய்தான் சரியாக வேலை செய்யுமே தவிர, அம்ச கட்டத்தில் இருக்கும் செவ்வாய் பெரும்பாலும் வேலை செய்யாது. திருமண பொருத்தம் பார்க்கும்போது, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்கிறார்களே… அப்படியென்றால் செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு பூமி தோஷம் ஏற்படுமா?. அவர் சொந்த வீடு, மனை வாங்க முடியுமா என்று கேள்வி எழுந்தால், செவ்வாய் தோஷத்திற்கும் வீடு, மனை வாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை. செவ்வாய் தோஷம் என்பது திருமண வாழ்க்கை பார்க்க மட்டும்தான். இதற்கும் வீடு மனைக்கும் சம்மந்தம் இல்லவே இல்லை.
சரி. ஒருவருக்கு செவ்வாய் சிறப்பாக அமைந்து, மனையும் வாங்கிவிட்டார். அப்படியென்றால், அவரால் வீடு கட்ட முடியுமா? என்றால், அதுதான் இல்லை. மனை வாங்குவதற்கு மட்டும்தான் செவ்வாய் செவ்வாய் காரணமே தவிர, அதில் வீடு அல்லது கட்டடம் கட்டுவதற்கு செவ்வாய் உதவ மாட்டார். எனக்கு தெரிந்த பலர் சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தும், அவர்கள் குடியிருப்பது என்னவோ வாடகை வீட்டில்தான். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பாக இருந்தும் வீடு கட்டுவதற்குரிய கிரகம் சுக்கிரன் சரி இல்லை என்றால், மிட்டாய் கடைக்காரன் சர்க்கரை நோயாளி போலதான். கடை முழுக்க மிட்டாய் இருந்தாலும் அவனால் சுவைக்க முடியாததை போல, சுக்கிரனின் துணை இல்லாமல் வீடு கட்ட முடியாது. சுக்கிரன் மட்டும் வலுவாக இருந்தாலும் வீடு கட்ட முடியாது.
செவ்வாயும், சுக்கிரனும் சரியாக அமைய வேண்டும். கடன்பட்ட வீடு, உடனடியாக முழு சொந்தமாக 4-ஆம் இடம் வலுவாக இருக்க வேண்டும். அந்த வீடு தலைமுறைக்கும் உதவ, சனி துணையாக வேண்டும். அந்த வீட்டில் சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடக்க, குருவின் துணை இருக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு கிரகமும் சங்கிலி தொடர்போல சரியாக அமைந்தால், வீடு வாங்கிவிட்டோம் என்ன நிம்மதியும், அந்த வீட்டினால் நிம்மதியும் ஒருவருக்கு நிச்சயம் அமையும்!
For Vastu Consultation Contact: G. Vijay Krishnarau, SIVA`S VAASTHU PLANNERS Phone Number:98406 75946, Chennai, Tamilnadu, India
© 2011-2026 bhakthiplanet.com All Rights Reserved






