Sunday 17th November 2024

தலைப்புச் செய்தி :

குரு பார்வை

நிரஞ்சனா

கும்பகோணம் மன்னர்குடி நெடுஞ்சாலையில் 17கி.மீ தூரத்தில் உள்ளது ஆலங்குடி குருபகவான் ஆலயம். ஈசன் ஆபத்சகாயராகவும், அம்பிகை ஏலவார்குழலியாக இங்கே  காட்சி தருகிறார்கள்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அமுதோடு ஆலமாகிய நஞ்சு வந்தது. அதை ஈசன் இன்முகத்துடன் பருகி உலகத்தையே காத்தார். அதனாலேயே ஆபத்சகாயர் என்றும் ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் ஆலங்குடி என்ற பெயர் வந்தது. காளமேகப் புலவர் பாடிய ஓரு பாடல் –

“ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை 

ஆலங்குடியான் என்று ஆர்சொன்னார்-ஆலம்

குடியானே யாகில் குவலய த்தோரெல்லாம்

மடியாரோ மண்மீதினிலே.”

இங்கு இருக்கும் ஈசனே தட்சணாமூர்த்தியாக காட்சி தந்து அருள்கிறார் என்கிறது புராணம்.

குரு பகவானை பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.

அதில் ஒன்று இது –

ஒரு சிறந்த ஜோதிடர். அவர் தன் மகளின் ஜாதகத்தை கணித்தார். மகள் ஜாதகப்படி யார் அவளை திருமணம் செய்கிறார்களோ அந்த மணமகன் மறுநாளே இறந்துவிடுவான் என்று தான் பெற்ற மகளாக இருந்தாலும் தன் மகளை திருமணம் செய்ய முன் வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விடுவார் அந்த தந்தை.

பெண்ணின் தகப்பனாரே இப்படி கூறினால் யார் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வருவார்கள்.? இதனாலேயே அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கவில்லை. ஒருநாள், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை பார்த்து பிடித்துபோய் தங்கள் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தனர்.

வழக்கமாக எல்லோரிடம் சொல்வதை போல பெண்ணின் தந்தையான ஜோதிடர், இந்த மாப்பிள்ளை வீட்டாரிடமும் தன் மகளின் ஜாதக இரகசியத்தை சொன்னார். இதை கேட்ட பிறகு, தெரிந்தே நெருப்பில் விழுவதா என்று அதிர்ந்த மாப்பிள்ளை வீட்டார், அய்யா சாமீ… உங்கள் சகவாசமே வேண்டாம் என்று எழுந்துக் கொண்டனர். ஆனால் மாப்பிள்ளைக்கு அந்த பெண்ணை பிடித்துவிட்டது. தன் பெற்றோரை சமாதானப்படுத்தினான். திருமணம் செய்தால் இவளைதான் மணப்பேன் என்ற பிடிவாதம் பிடித்து அந்த பெண்ணையே திருமணம் செய்தான்.

மறுநாள் மாப்பிள்ளை இறப்பது நிச்சயம் என்ற முடிவுடன் மனதை தைரியப்படுத்திக் கொண்டார் ஜோதிடர். அந்த அளவில் ஜோதிடத்தில் வல்லவர் அவர். அதனால் எந்த நேரத்திலும் தன் மகள் அறையின் கதவை திறந்து கதறி கொண்டே வருவாள் என்று நினைத்து கொண்டே தூங்காமல் அறையின் கதவையே பார்த்து கொண்டே இருந்தார்.

ஆனால் மறுநாள் தன் மகள் மகிழ்ச்சியான முகத்துடன் கதவை திறந்து கொண்டு வந்ததை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் தந்தை. “ஜாதகம் பொய்யா… அல்லது நான் தவறாக கணித்து விட்டேனா..?“ என்று சந்தேகம் அடைந்து, தான் வணங்கும் விஷ்ணு பகவானை வேண்டி தன் சந்தேகத்தை கேட்டார்.

“நீ சராசரி மனிதன் அல்ல. நீ குரு பகவான். உன் மகளும் மருமகனும் தங்கிய அறை இருக்கும் திசையை கவலையுடன் பார்த்து கொண்டே இருந்ததால், உன் பார்வையின் சக்தியால் உன் மகளின் மாங்கல்யம் பலம் பெற்றது. குருவாகிய உன் பார்வைபட்டால் போதும் அதுவே கோடி புண்ணியம். மூங்கில் மரத்தின் அருகில் நெல்லை போட்டால் மூங்கில் மரம் பட்டுப்போகும். ஆனால் உன் பார்வைபட்டால் தோஷமான மாங்கல்ய பலம் கொண்டவர்களும் மங்கலகரமாக வாழ்வார்கள்“ என்றார் விஷ்ணுபகவான்.

இப்படி குருவின் ஆசி இருந்தால்தான் மாங்கல்ய பலம் மட்டுமல்ல திருமண பாக்கியமும் ஏற்படும்.  

சிக்மண்ட் பிராய்ட் என்ற மனோதத்தவ அறிஞர் தன் திருமணத்திற்காக பல இடங்களில் பெண் தேடினார். எந்த பெண்ணும் அமையவில்லை. இவருக்கு பிடித்தால் அந்த பெண்ணுக்கு இவரை பிடிக்காது இது போலவே பல வரன்களில் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. தனக்கு பெண் பார்த்து பார்த்து சிக்மண்ட் பிராய்டுக்கு சலித்ததோ இல்லையோ அவருக்கு பெண் பார்க்கும் தரகருக்கு சலித்துவிட்டது. இப்படியே பல வருடங்களாக பெண் பார்த்து கொண்டே இருந்தார் சிக்மண்ட் பிராய்ட் .

ஒருநாள் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு வந்த தரகர், சிக்மண்டிடம், “இவள்தான் நான் உங்களுக்கு பார்த்திருக்கின்ற பெண்“ என்றார். அந்த பெண்னை பார்த்த சிக்மண்ட், தரகர் மீது கோபம் கொண்டார். தரகரை தனியாக அழைத்துச் சென்று,

“என்ன தரகரே… அந்த பெண்ணை பார்க்கவே பிடிக்கவில்லை. கறுப்பாக இருக்கிறாள். சரி கருப்பாக இருந்தாலாவது பரவாயில்லை. மேல் பல் வரிசைகள் எல்லாம் வாய்க்கு வெளியே எட்டி பார்க்கிறது. அவளால் வாயை மூடவே முடியவில்லை. பார்வையும் அவளுக்கு சரியில்லை. அவள் உன்னை பார்க்கிறாளா என்னை பார்க்கிறாளா?. சரி அதை கூட பொறுத்துக்கொள்ளலாம்.

சாக்கடையில் இருந்து எழுந்து வந்தாளா..? அருகில் நிற்கவே முடியவில்லை. அவள் மீது ஓரே நாற்றம்.“ இப்படியாக தரகர் அழைத்து வந்த பெண்ணை பற்றி பல குறைகளை அடுக்கிக் கொண்டே இருந்தார் அறிஞர் சிக்மண்ட. அனைத்தையும் பொறுமையாக கேட்ட தரகர், “அட இதுதானா விஷயம். அதை அவள் எதிரிலேயே சொல்லி இருக்கலாம். ஏன் என்றால் அவளுக்கு காதும் கேட்காது.“ என்றார்.

என்ன செய்வது? அறிஞராக இருந்தாலும் குருபார்வை இருந்தால்தான் திருணம் யோகம் அமையும்.

ஒருவருக்கு திருமண பேச்சை எடுத்தாலே குருபிராப்தம் வந்ததா? என்று பெரியோர்கள் கேட்பார்கள். குரு பிராப்தம் இருப்பவர்களுக்குதான் விரைவில் திருமணம் நடக்கும். மாங்கல்ய பலம் கிடைக்கும். செல்வம் தேடி வரும். கல்வியில் சிறந்து விளங்குவர். அதனால்தான் குருவின் ஆசி ஆயுள் முழுவதும் கிடைக்க வேண்டும் என்பதால், மஞ்சள் கயிற்றில் மஞ்சள் அல்லது இயற்கையாக மஞ்சள் நிறம் கொண்ட தங்கத்தை மாங்கல்யமாக செய்து அணிகிறார்கள்.  

ஆலங்குடிக்கு குருபெயர்ச்சி அன்று செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் குருபகவான் கோயிலுக்கு சென்று குருவுக்கு முழுக்கடலை மாலை அணிவித்து வணங்கலாம். இதனால் குருதோஷம் நீங்கும்.

திருமணம் தடைப்படுபவர்கள் ஏதாவது ஒருநாள் உங்களுக்கு சௌகர்யப்படும் நாளாக தேர்வு செய்து அந்தநாள் வியாழ கிழமையாக வருவதாக பார்த்து ஆலங்குடிக்கு சென்று குருபகவானை வணங்கினால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

குரு ஆசி கிடைக்க புஷ்பராக ரத்தினத்தை அணியலாம் மஞ்சள் நிறம் அமைந்த ஆடைகளை வியாழ கிழமை அணிந்தால் குரு தோஷம் நீங்கும். குருபெயர்ச்சியன்று மஞ்சள் வாங்கினால் மங்கலகரமாக சுபிட்சமான வருடமாக இந்த வருடம் முழுவதும் அமையும். மஞ்சள் நிறத்தில் உடை அணிந்தாலும் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறு மஞ்சள் நிறம் கலந்து இருந்தாலும் யோகம் ஏற்படும்.

எப்படி சிகப்பு நிறத்தை கண்டால் துஷ்டசக்திகள் விலகுகிறது. விஞ்ஞான மருத்துவமும் அதிக நேரம் சிகப்பு வண்ணத்தை நோயாளியின் உடலில் பாய்ச்சி ரத்த ஓட்டம் சீராக செல்ல பயன்படுத்துகிறார்கள். அதுபோல் மஞ்சள் நிறத்திற்கும் வேறு பல நல்ல சக்திகள் இருக்கிறது. எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை முறியடித்து மங்கலகரமான  வாழ்க்கையை கொடுக்கும் சக்தி குருபகவானுக்கு இருக்கிறது.   

©  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 6 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

4 Comments for “குரு பார்வை”

  1. kavitha balu

    good article for guru peyarchi

  2. s.r.prema

    குரு பெயர்ச்சிக்கு ஏற்ற கட்டுரை…

  3. anathraman

    Your writings r very gud niranjana…

  4. Latha murugan

    பயன் உள்ள நல்ல தகவல். எல்லோருக்கும் குருவின் அருள் கிடைக்கட்டும்.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech