ரூ.48 கோடியே 33 லட்சம் செலவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்“
சென்னை, ஜன. 2–
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மருத்துவத் துறையில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி தரமான சுகாதார சேவைகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற சீரிய நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 45 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 682 படுக்கை வசதிகள், 9 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன கருத்தரங்குக் கூடம், அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, எலும்பு முறிவு, இருதயம், சிறுநீரகம், நரம்பியல் போன்ற சிகிச்சை பிரிவுகளுடன் புதிதாகக் கட்டடப்பட்டுள்ள மருத்துவம் மற்றும் அவசர காலப் பிரிவு கட்டடம்;
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு 2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம்; என மொத்தம் 48 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு, குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம், மொத்த கருவளத் திறன் போன்ற சுகாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்கி வருகிறது. குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய் இறப்பு விகிதத்தை மேலும் குறைத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 41 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்கம், மகப்பேறு சிகிக்சைக்கு முன்பு மற்றும் பின்பு கவனிப்பு பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தை உள்நோயாளிகள் தங்கும் பிரிவுகள் உள்ளடக்கிய மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர கவனிப்பு பிரிவு கட்டடங்கள்.
விருதுநகர் மாவட்டம்–சாத்தூர்; மதுரை மாவட்டம்–உசிலம்பட்டி; விழுப்புரம் மாவட்டம்–கள்ளக்குறிச்சி மற்றும் திண்டிவனம்; நாமக்கல் மாவட்டம்–குமாரபாளையம், வேலூர் மற்றும் சேந்தமங்கலம்; கடலூர் மாவட்டம்–காட்டு மன்னார் கோவில் மற்றும் சிதம்பரம்; கோயம்புத்தூர் மாவட்டம்–பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர்; திருவள்ளூர் மாவட்டம்–திருவள்ளூர் மற்றும் திருத்தணி; தஞ்சாவூர் மாவட்டம்–கும்பகோணம்; நாகப்பட்டினம் மாவட்டம்–சீர்காழி.
வேலூர் மாவட்டம்–ஆம்பூர்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் என மொத்தம் 18 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு, ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பிரிவுகள், அறுவை அரங்குடன் கூடிய மகப்பேறு பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, ஆய்வக வசதியுடன் கூடிய மகப்பேறு பிரிவு மற்றும் நுண்கதிர் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, இருதயப் பிரிவு நவீன சமையலகம் போன்ற பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், மருத்துவ வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களையே பெரிதும் நாடுகின்றனர். இவர்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மேம்படுத்தி வருகிறது. இதுவரை 341 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள், கூடுதல் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம்–பரளச்சி; தூத்துக்குடி மாவட்டம்–குளத்தூர்; திருவள்ளூர் மாவட்டம்–பூவிருந்தவல்லி; திண்டுக்கல் மாவட்டம்–குஜிலியம்பாறை; காஞ்சிபுரம் மாவட்டம்–பவூஞ்சூர்; சேலம் மாவட்டம்–மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஆரியபாளையம், கொங்கணாபுரம் மற்றும் பனை மரத்துப்பட்டி மற்றும் திருவண்ணாமலை–மாவட்டம் ஆக்கூர் ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டு அதற்கென 7 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திற்கு 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம்; என மொத்தம், 68 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவத் துறைக்கான கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மொத்தத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் மொத்த மதிப்பு 116 கோடியே 97 லட்சம் ரூபாய் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel