தனியார் நிறுவனத்தில் மனைவிக்கு வேலை: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு எதிரான குற்றச்சாட்டு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை
மனைவி வேலைக்கு சென்றது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்த குற்றச்சாட்டு குறிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
மனைவிக்கு வேலை
நான் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து, பல்வேறு அரசு பதவிகளை வகித்துள்ளேன். எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 26–5–2008 முதல் 5–8–2008 வரை பதவி வகித்தேன். இதன் பின்னர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்) நிர்வாக இயக்குனராக 6–8–2008 முதல் 3–11–2008 வரை பணியாற்றினேன்.
இந்த நிலையில், என்னுடைய மனைவி சூர்யகலா, டெஸ்சால்வ் என்ற தனியார் நிறுவனத்தில் 2008–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பணி செய்தார். இந்த டெஸ்சால்வ் நிறுவனம், தொழில் முதலீட்டு கழகத்திடம் கடன் பெற்றுள்ளது. இதையடுத்து என் மனைவி பணியில் சேர்ந்தது குறித்து தமிழக அரசுக்கு 13–8–2008 அன்று தகவல் தெரிவித்தேன்.
விசாரணை அதிகாரி நியமனம்
இந்த நிலையில், நான் பதவி வகித்த அரசு அலுவலகத்துடன் (டிக்குடன்) வர்த்தக தொடர்புள்ள தனியார் நிறுவனத்தில் என் மனைவி வேலைக்கு சென்ற விவரத்தை காலதாமதமாக தெரிவித்தது குறித்து என்னிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு நோட்டீசு அனுப்பியது.
இதற்கு நான் விளக்கம் அளித்தேன். இதில் திருப்தியடையாத தலைமை செயலாளர், என் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.சுந்தரதேவனை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.
இந்த அதிகாரி விசாரணை நடத்தி, 30–11–2009 அன்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆதாரம் இல்லை
அந்த அறிக்கையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியபோது, டெஸ்சால்வ் நிறுவனத்துக்கு நான் சாதகமாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும், ஆனால் என் மனைவி டெஸ்சால்வ் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு அரசிடம் முன்அனுமதி பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், அகில இந்திய ஆட்சிப்பணி விதி 4(2)(ஏ)–வின் கீழ் நடவடிக்கை எடுக்க குற்றச்சாட்டு குறிப்பாணையை (சார்ஜ் மெமோவை) தலைமை செயலாளர் 19–1–2009 அன்று எனக்கு எதிராக பிறப்பித்துள்ளார்.
ரத்து செய்யவேண்டும்
நான் நேர்மையாக பணியாற்றியதால், என்னை பழிவாங்குவதற்காக ஆட்சியாளர் இவ்வாறு செயல்படுகின்றனர். எனவே எனக்கு எதிரான குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இந்திய ஆட்சிப்பணி விதி 4(2)(ஏ) என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து அந்த பிரிவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சாதகமாக செயல்படவில்லை
இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஒரு அரசு உயர் அதிகாரி பதவி வகிக்கும், அரசு அலுவலகத்துடன் தொடர்புடைய தனியார் நிறுவனத்தில், அந்த அதிகாரியின் குடும்பத்தினர் பணியில் சேரும்போது, அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று அகில இந்திய ஆட்சிப்பணி 4(2)(ஏ) கூறுகிறது.
மனுதாரர் உமா சங்கரின் மனைவி, டெஸ்சால்வ் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு அரசிடம் முன் அனுமதி பெறவில்லை என்ற ஒரு சிறு குற்றச்சாட்டுதான் அவர் மீது உள்ளது. ஆனால், பணியில் சேர்ந்த பின்னர்தான், இதுகுறித்து அரசுக்கு உமாசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தன் சொந்த திறமையில் அவரது மனைவி வேலைக்கு சேர்ந்துள்ளாரே தவிர, அவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உமா சங்கர் செயல்பட்டார் என்றோ, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றோ எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை.
ஏற்க முடியாது
எனவே, உமா சங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்கிறேன். மேலும், இந்திய ஆட்சிப்பணி விதி 4(2)(ஏ) அரசியல் சட்டத்தில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel