சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது ஏன்?- ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கேள்வி
பாட்னா, நவ. 18-
கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்திய சச்சின் தெண்டுல்கர், சமீபத்தில் 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருதினை வழங்காமல் சச்சினுக்கு வழங்குவது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவானந்த திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தயான் சந்த் புறக்கணிக்கப்பட்டதும், சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதும் ஏன்? என்று எனக்குத் தெரியவில்லை. தயான் சந்தின் சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
வாரியங்களோ, மீடியாக்களோ இல்லாத காலகட்டத்தில் இந்திய ஹாக்கி விளையாட்டை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றவர் தயான் சந்த். அவரது ஆட்டத்திறனைப் பார்த்து வியந்த ஜெர்மனியின் பாசிச தலைவர்கள் கூட அவருக்கு பணம், வசதியான-ஆடம்பரமான வாழ்க்கை கொடுக்க முன்வந்தனர். ஆனால், அவற்றையெல்லாம் ஏற்காமல் இந்தியாவிலேயே தயான் சந்த் ஒட்டிக்கொண்டார்.
சச்சின் தெண்டுல்கள் இலவசமாக விளையாடவில்லை. நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியுடன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். பாரத ரத்னா விருது இப்போது தனது முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது. பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டிய தருணம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
திவாரியின் இந்த கருத்துக்கும் கட்சிக்கும் (ஐக்கிய ஜனதா தளம்) எந்த தொடர்பும் இல்லை என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேசமயம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet