மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்றனர்
சபரிமலை,
மண்டல–மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
அய்யப்பன் கோவில்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையை முன்னிட்டு 41 நாட்கள், மகரபூஜையை முன்னிட்டு 20 நாட்கள் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் மண்டல – மகரவிளக்கு விழாவின் தொடக்கமாக நேற்று, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி என்.தாமோதரன் போற்றி குத்துவிளக்கு ஏற்றி நடையை திறந்தார்.
அப்போது கோவில் கருவறையை சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘‘சாமியே சரணம் அய்யப்பா’’ என்று கோஷமிட்டனர்.
சாமி தரிசனம்
முதல் நாள் தரிசனத்தை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி, கறுப்பு மற்றும் நீல நிற ஆடைகள் அணிந்து சபரிமலையில் குவிந்திருந்தனர். முன்னதாக நடை திறப்பையொட்டி, கோவில் வெளிபிரகாரத்தில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு சபரிமலை, மாளிகைப்புறம் கோவில்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மேல்சாந்திகளின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் கோவிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணன் நம்பூதிரிக்கு அபிஷேகம் செய்து, அய்யப்பனின் மூல மந்திரம், தியான மந்திரங்களை சொல்லிக்கொடுத்து கோவிலுக்குள் தந்திரி அழைத்துச் சென்றார். மாளிகைப் புறத்தம்மன் கோவிலுக்கு தேர்வுபெற்ற மனோஜுக்கும் மந்திரம் சொல்லிக்கொடுக்கப்பட்டது.
புதிய மேல்சாந்தி
நேற்று நடைதிறப்புக்கு பிறகு மற்ற பூஜை–வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை வணங்கி சென்றனர். பின்னர் இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மேல்சாந்தி என்.தாமோதரன் போற்றி ஒரு வருடத்திற்கு பின் மலையிறங்கினார்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி குத்துவிளக்கு ஏற்றி, வணங்கி, கோவில் நடையை திறந்துவைக்கிறார். தொடர்ந்து காலை 4.20 முதல் 11 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாராதனை– புஷ்பாபிஷேகம் நடக்கிறது.
போக்குவரத்து வசதி
இரவு 10.50 மணிக்கு நடைபெறும் அத்தாழ பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடையை தினமும் 18 மணி நேரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் போக்குவரத்து வசதிகளை எளிதாக்கும் வகையில் தற்போது 230 புதிய பேருந்துகள் மாநிலத்தின் பல இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பம்பை வழியாக சபரிமலைக்கு வரத்தொடங்கினர். பம்பையில் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet