திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழா
முருகப்பெருமானின் 2–வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 3–ந் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
அன்றுமுதல் தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி – தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
போருக்கு புறப்பட்டார்
விழாவின் 6–ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி–தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 3.30 மணிக்கு கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர் மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய மாலை 4.35 மணிக்கு கடற்கரைக்கு புறப்பட்டார்.
சூரசம்ஹாரம்
முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகன் (தாரகாசூரன் என்ற கஜமுகன்) தனது பரிவார படைகளுடன், முருக பெருமானை 3 முறை வலம் இடமாக முன்னும், பின்னும் சுற்றி வந்து நேர் எதிரே நின்றார். மாலை 5.20 மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசூரன், அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் நின்று போருக்கு தயாரானான். அவனையும் முருக பெருமான் தன் வேலால் வதம் செய்தார்.
சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன், எப்படியும் முருகபெருமானை வென்று விட வேண்டும் என்று கோபம் கொண்டான். தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போருக்கு வந்தான். சூரபத்மனை, முருகக் கடவுள் வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. கடற்கரையில் கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்கள் விண்ணை பிளந்தன. இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.
சாயாபிஷேகம்
போரில் சூரபத்மனை வென்ற சுவாமி ஜெயந்திநாதர், வெற்றிக்களிப்பில் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சினம் தணிந்த முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி–தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதிவலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு சாயாபிஷேகம் (அங்கு இருந்த கண்ணாடியில் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடந்தது. பக்தர்களுக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.
லட்சக்கணக்கான பக்தர்கள்
சூரசம்ஹாரம் முடிந்து பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியை கூட்ட நெரிசல் இல்லாமல் பார்க்க பெரிய டிஜிட்டல் திரை கோவில் வளாகத்தில் 2 இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டு இருந்தது.
அமைச்சர்
வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.சொக்கலிங்கம், இந்து சமய அறநிலையதுறை ஆணையர் தனபால், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிபதிகள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம், திருச்செந்தூர் நீதிபதிகள் நம்பிராஜன், விவேகானந்தன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா, உதவி கலெக்டர்கள் நாகஜோதி(தூத்துக்குடி), தமிழ்ராஜன்(திருச்செந்தூர்), திருச்செந்தூர் தாசில்தார் ப.நல்லசிவன், இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கூத்தன், ராம்கோ சிமெண்ட் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா, தமிழ்நாடு பிராமணசங்க மாநில துணை தலைவர் ஹரிஹரமுத்து, திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ்பாபு, யூனியன் தலைவர்கள் ஹேமலதா (திருச்செந்தூர்), க.விஜயகுமார்(ஆழ்வார்திருநகரி), சுரேஷ் ராம ஆதித்தன், தொழில் அதிபர்கள் மலேசியா டத்தோ எஸ்.தவராஜா, தங்கராஜ்நாடார், மூர்த்தி, சீனிபண்ணையார், வி.சங்கரசுப்பிரமணியன், ராஜா, ரமணி, ஜி.அருள், பொறியாளர் கி.நாராயணன், கி.வெங்கடேசன், மகேந்திரன், கேண்டீன் ராஜேஸ், சீதாராம் ராஜா உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) இரா.ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் ப.ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை தலைமையில் 1200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
திருக்கல்யாணம்
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5 மணி அளவில் தெய்வானை அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தொடர்ந்து அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, தெப்பகுள தெரு சந்திப்பில் நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமான்– தெய்வானை அம்பாளுக்கு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி வைதீக முறைப்படி நடைபெறுகிறது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet