உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெயலலிதா துவக்கி வைத்தார்
சென்னை
விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
உலக சதுரங்க போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியை தொடக்கி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:–
சதுரங்கத்துக்கு பொற்காலம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில், இந்தப்போட்டி நடைபெறுவது, சதுரங்கத்துக்கு பொற்காலமாகும். மிகப்பழமையான புத்திகூர்மைக்கான இந்த விளையாட்டின் தாயகமான இந்தியாவில், முதல்முறையாக இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக சதுரங்க வாகையர் (சாம்பியன்ஷிப்) போட்டி, முழுமையாக சென்னையில் நடைபெற உள்ளது. சதுரங்க விளையாட்டில் இந்தியாவுக்கு உள்ள ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த விழா நடைபெறுகிறது.
மனதின் ஜிம்னாம்சியம் என்று அழைக்கப்படும் சதுரங்கம், ஒரு வீராங்கனை என்ற முறையிலும், ஒரு ஆர்வலர் என்ற முறையிலும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான ஆட்டமாகும்.
ரூ.29 கோடி ஒப்புதல்
கடந்த 2011–ல் உலக சதுரங்க கூட்டமைப்பு தலைவர் கிர்சான் இல்யூம்ஷினோவ், என்னை சந்தித்தபோது, உலக சதுரங்க வாகையர் போட்டியை சென்னையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரூ.20 கோடி செலவில் அந்தப்போட்டியை நடத்துவதற்கு நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன், ஆனாலும், அந்த வாகையர் போட்டிக்கான ஏலத்தில், அதிக தொகையை ரஷியா அளித்ததால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
இந்த போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு ஆர்வம் தெரிவித்ததைத்தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில் ஏலம் ஏதுமின்றி இந்தப்போட்டியை சென்னையில் நடத்துவதற்கு உலக சதுரங்க கூட்டமைப்பு சம்மதித்தது. வரலாற்று சிறப்புமிகுந்த இந்த போட்டிக்காக ரூ.29 கோடி நிதியை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்.
போரின் நிழலாட்டம்
சதுரங்கப்போட்டிகளுக்கு 1,500 ஆண்டுகால வரலாறு உள்ளது. கி.பி. 6–ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே இந்தியாவில் சதுரங்க விளையாட்டு தொடங்கியிருப்பதற்கான முன்னுதாரணம் உண்டு. சில நூற்றாண்டுகளில் அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ள மிகச்சிறப்பான சதுரங்க விளையாட்டின் தாயகம் இந்தியா என்பதை நாம் பெருமையுடன் கூறலாம். இந்தியாவின் பாரம்பரிய போர்களில் இரண்டு தரப்பு ராணுவத்தினர் நேருக்கு நேர் மோதுவதை போன்றதுதான் சதுரங்கப்போட்டி.
விளையாட்டுக்கு உகந்த சூழல்
தமிழகத்தில் முதல்–அமைச்சராக நான் பதவி வகித்த மூன்று முறையும், விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை நிலைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கி, ரூ.111 கோடியே 53 லட்சம் அனுமதிக்கப்பட்டது. நல்ல உட்கட்டமைப்புகள், விளையாட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க முக்கிய பங்காற்றுகின்றன.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நான் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறேன்.
தனி பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மைதான வசதிகளை உருவாக்கவும், தற்போதுள்ள வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் ரூ.33 கோடியே 60 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கை சீரமைத்து புதிய வசதிகளை ஏற்படுத்த 4 கோடியே 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. சென்னையில் விளையாட்டுகளுக்கான அதிநவீன பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 10 முதல் 14 வயது வரையிலான 50 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் உள்ளுறை பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் வருங்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் பதக்கங்களைப் பெற வாய்ப்பு ஏற்படும்.
எனது 2–வது ஆட்சிக்காலத்தில் 2004–ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூர் கிராமத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் விளையாட்டு அறிவியல் மையம் உருவாக்கப்பட்டது. அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒருமுறை மானியமாக ரூ.9 கோடியே 98 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.
ரூ.2 கோடி பரிசு
சதுரங்க விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரு சதுரங்கக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த 12 சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு ரூ.74 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், மாநில விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட உள்ள தேசிய வாகையர் போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவை ரூ.65 லட்சத்தில் இருந்து, ரூ.1.30 கோடியாக உயர்த்தியுள்ளேன். தமிழகத்தில் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்தவும், விளையாட்டையும், வீரர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலத்தில் முதல்முறையாக முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் பத்துப்பிரிவுகளில் எனது தலைமையிலான அரசால் நடத்தப்பட்டன. இதற்காக ரூ.8.09 கோடி ஒதுக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுப்போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க பரிசுத்தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு, முன்பு வழங்கப்பட்டு வந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பரிசு, இனி அதற்கு பதிலாக 2 கோடி ரூபாயாக வழங்கப்படும்.
பெருமைபடச்செய்த ஆனந்த்
இந்தியா உருவாக்கிய விளையாட்டு வீரர்களில், தலைசிறந்த வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க விளையாட்டின் அடையாளமாக திகழ்கிறார். 1969–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11–ந்தேதி சென்னையில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்களின் முன்மாதிரியாக, அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வீரராக உயர்ந்துள்ளார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் எளிமையான வீரர் ஆனந்த், நம் அனைவரையும் பெருமை கொள்ள செய்துள்ளார்.
2000–ம் ஆண்டில் நாக்–அவுட் போட்டிகளிலும், 2007–ம் ஆண்டு டோர்ணமென்ட் போட்டிகளிலும், 2008–ம் ஆண்டு கிளாசிக்கல் போட்டிகளிலும் இவர், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். நிலைத்துவம், சாதுர்யம், ஒரே சிந்தனை ஆகியவை இவரின் வசப்பட்டவை.
இளம் வித்வான் கார்ல்சன்
ஆனந்தை எதிர்த்து விளையாடும் நார்வே நாட்டு மேக்னஸ் கார்ல்சன் ஒரு சதுரங்க வித்வான். இளமை வேகத்துடன், முன்னெச்சரிக்கையுடன் விளையாடும் இவரது அபார திறமை, உலகெங்கிலும் உள்ள சதுரங்க ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறு வயதிலேயே சதுரங்க விளையாட்டில், தன்னையே முற்றிலுமாக மூழ்கடித்துக்கொண்ட இவர், 13–ம் வயதில், சர்வதேச கிராண்ட் மாஸ்டராக வெற்றி பெற்றார். வரலாற்றிலேயே 20 வயதில், உலக சதுரங்க கூட்டமைப்பின் தர வரிசைப்பட்டியலில் இடம்பெற்ற மிக இளைய வீரர் இவர்தான்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டியை சென்னையில் நடத்துவதில் பெருமை கொள்கிறோம். சென்னையில் உள்ள அனைவரும், இந்த போட்டிக்காக உச்சக்கட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம். இரண்டு வீரர்களும், அவர்களின் லட்சியத்தை அடைய, கடவுள் அருள்புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet