சென்னையில் உலக செஸ் போட்டி: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்
உலக செஸ் சாம்பியன் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது.
5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுகிறார்கள்.
இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டி நடத்துகிறது. இந்தப் போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்தார்.
தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை சேர்க்கக்கூடிய உலக செஸ் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (7–ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இந்தப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சான் இல்யும் ஷினோவ் தலைமை உரையாற்றுகிறார். பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வீரமணி வரவேற்று பேசுகிறார். தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் வெங்கட்ராம ராஜா நன்றி கூறுகிறார்.
தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் ராஜாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது. பாரம்பரிய கலையான வீணை கச்சேரியும், நார்வே நாட்டு கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
வீணை காயத்திரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. கார்ல் செனின் நாடான நார்வே நாட்டு இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
ஆனந்த்–கார்ல் சென் மோதும் உலக செஸ் போட்டி 12 சுற்றுகளை கொண்டது. இருவரும் சமநிலை வகித்தால் 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும். 11, 14, 17, 20, 23, 25, 27 ஆகிய தேதிகள் ஓய்வு நாட்களாகும்.
ஆனந்துக்கும், கார்ல் சென்னுக்கும் வயது இடைவெளி 21 ஆகும். ஆனந்துக்கு 43 வயதாகிறது. கார்ல் சென்னுக்கு 22 வயதாகிறது. இருவரும் இதுவரை 62 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் ஆனந்த் 15 ஆட்டங்களில் (வெள்ளை நிற காய்கள் 7, கறுப்பு நிற காய்கள் 8) வெற்றி பெற்றுள்ளார். கார்ல் சென் 11 ஆட்டங்களில் வெற்றி (வெள்ளை 7, கறுப்பு 4) பெற்றுள்ளார். 36 ஆட்டம் சமனில் முடிந்தது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet