மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
சென்னை, நவ.6: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
வண்ணாரப்பேட்டை _ சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்_பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2_வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் திட்டத்தில் முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக 11 ரெயில் நிலையங்களை கடந்து வரும் மெட்ரோ ரெயில், சைதாப்பேட்டை கூவம் ஆற்றிற்கு முன்பு, சுரங்கத்தில் இருந்து பறக்கும் பாதையாக மாறி பயணத்தை தொடங்குகிறது. அதன்பிறகு, சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரை 6 ரெயில் நிலையங்களை பறக்கும் பாதையிலேயே கடக்கிறது.
இதேபோல், 2_வது வழித்தடத்தில், சென்டிரல் முதல் அண்ணாநகர் டவர் வரை சுரங்கப்பாதை வழியாக 8 ரெயில் நிலையங்களை கடக்கும் மெட்ரோ ரெயில், திருமங்கலத்தில் இருந்து பறக்கும் பாதைக்கு வந்துவிடுகிறது.
அதன்பிறகு, கோயம்பேடு வழியாக 8 ரெயில் நிலையங்களை கடந்து பறக்கும் பாதையிலேயே விமான நிலையத்தை சென்றடைகிறது.
இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக பிரேசில் நாட்டிலிருந்து 4 பெட்டிகளுடன் கூடிய நவீன ரக ரெயில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக 800 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை ஓட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டத்தை இன்று (புதன்கிழமை) முதல்_அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கோயம்பேட்டில் உள்ள பணிமனை மற்றும் முனையத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
குறிப்பாக ரெயிலில் தானியங்கி கதவுகள், என்ஜின், சக்கரம் போன்றவை செயல்படுவது குறித்து சோதனை செய்தார். மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள், வெளிநாட்டு ரெயில் நிறுவன பொறியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து சோதனை ஓட்டத்தை தொடங்கிவைப்பதற்காக அமைக்கப்படும் தனி மேடையையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனைத்தும் வெற்றிகரமாக இயங்கியதால் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் திருப்தி ஏற்பட்டது. எனவே இது குறித்து முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். அவை முடிந்தவுடன்புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
2014_ம் ஆண்டு மத்தியில் கோயம்பேடு _ பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் வரை 7 ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பயணிகள் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செயற்கைகோள் உதவி: கோயம்பேடு பணிமனையில் நடைபெறவுள்ள இந்த சோதனை ஓட்டத்தை செயற்கைகோள் உதவியுடன் ஜிபிஎஸ் கூடிய சாதனங்கள் மூலம் கண்காணித்து தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டால் மெட்ரோ ரயிலை உடனடியாக நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கும் முன்பு கோயம்பேடு பணிமனையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet