ஆப்செட் சுவர் பலன்கள் | Offset Wall Vastu
THE SIVA`S VAASTHU PLANNERS
அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டடக்கலை சாஸ்திரத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளை நாம் கட்டுரைகளாக படித்தும், காணொளியாக பார்த்தும் வருகிறோம். மனையடி சாஸ்திரம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு நடைமுறையில் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கும் இந்த கலை, நமது வாழ்க்கையின் ஏற்ற- இறக்கங்களுக்கு காரணமாக அமைந்து வந்து கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறிய கடையை ஆரம்பித்து, அதிலே பல லட்சம் வருமானம் ஈட்டி, பெரிய வணிக வளாகமாக வளர்ந்த பின்னர், அதிலேயே நிலையாக நின்று ஜெயித்தவர்கள் பலர்.
சிலருக்கு சின்ன கடையில் வியாபாரம் செய்து, உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு வந்த பின்னர், பெரிய கட்டிடத்தில் தங்களது வியாபாரத்தை தொடங்கிய பின்னர், வருமானமின்றி தவிப்பவர்களையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலைக்கு காரணம் என்ன?
வாஸ்து சாஸ்திரத்தை பொறுத்தவரையில் இங்கே ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த கட்டடக்கலை சாஸ்திரமானது அனைத்து விதமான கட்டடங்களுக்கும் பொதுவான பலனை தருவதில்லை.
வீட்டுக்கு வாஸ்து பார்த்து கட்டி, அந்த அறிவைக்கொண்டு வர்த்தக நிறுவன கட்டடத்தை வடிவமைத்து எழுப்புவது எந்த விதத்திலும் பலன் தராது. வாஸ்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரையில் குடியிருக்கும் வீட்டுக்கு ஒரு கட்டட சாஸ்திர விதியும், வர்த்தக கட்டிடத்திற்கு அதற்குரிய கட்டட சாஸ்திர அமைப்பும் உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வர்த்தக கட்டடங்களுக்கு வாஸ்து சாஸ்திர அமைப்பு வேறு விதமாக இருக்கிறது.
இந்த பதிவானது கட்டடங்களின் சுவர் அமைப்பை சார்ந்த சாஸ்திர பலனைப் பற்றி கூறுவதாக இருக்கும். ஆம். கட்டடக்கலை சாஸ்திரத்தில் அறைகளுக்கும் கதவுகளுக்கும் மட்டும் வாஸ்து விதி இருக்கவில்லை, சுவர்களுக்கும் அதற்குரிய விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவர் அமைப்பு என்பது மிக முக்கியமாக, துல்லியமாக கவனித்து அமைக்க வேண்டியதாக இருக்கிறது. சுவற்றில் வாஸ்து குறை இருந்தால், எவராக இருந்தாலும் முன்னேற முடியாது. தரையின் அகலம் – நீளம் பார்ப்பதை போன்றே, சுவற்றின் உயரம் பார்க்கப்பட வேண்டும். சுவரின் உயரம் கட்டட சாஸ்திர விதிகளுக்குள் இல்லை என்றால் கோட்டை சுவரும் குட்டிச்சுவர்தான்.
அதனால் சுவற்றின் உயரத்திற்கும் முக்கியத்துவம் தந்தாக வேண்டும். சாஸ்திரப்படி சராசரியாக சுவரின் உயரம் 3 அடியில் இருந்து தொடங்க வேண்டும். சுவற்றின் உயரமும் கிட்டத்தட்ட அறைகளின் அளவுக்கு உள்ள பலனை ஏறக்குறைய கொண்டதாகவே இருக்கிறது.
பொதுவாக 6, 8, 10, 11 அடி வரையில் காம்பௌண்ட் சுவர் வைக்கலாம். பெருநகரங்களில் ஆறு முதல் எட்டு அடியே போதுமானதாக இருக்கும்.
வாஸ்துசாஸ்திரம் என்று சொல்லப்படுகிற மனையடி சாஸ்திரப்படி இல்லாத வீடு, அழகாக இருந்தால் மட்டும் வாழ்கிறவர்களுக்கு அமைதியைத் தராது.
சப்பை மூக்குக்கு மூக்குத்தி, யானை காலுக்கு கொலுசு
என்ற வங்காள பழமொழி போல், வாஸ்து விதிக்கு எதிரான கட்டடமும் அப்படிதான் இருக்கும். வாழ்க்கைக்கு அழகாக இருக்காது.
பொதுவாக சின்னதாக தடுப்பு சுவர் இருந்தால், அதாவது ஒரு முழம் அகலம் இருந்தால், இரண்டு முழம் உயரத்திற்கு சுவர் இருக்க வேண்டும். சுவரின் உயரமானது, எட்டு ஜான் உயரம் ஒன்பது ஜான் உயரம், 10 ஜான் உயரம் என்றெல்லாம் அன்றைய காலத்தில் பார்த்து கட்டுவார்கள்.
சுவர் உயரம்
சின்ன சுவர் ஒரு முழம் அகலம் இருந்தால், இரண்டு முழம் உயரத்திற்கு சுவர் வைக்க வேண்டும். எட்டு சாண் உயரம், 9 சாண் உயரம், 10 சாண் உயர சுவர், அதற்குரியவர்கள் யார்? பலன் என்ன? என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
சுவர் வைக்கும்போது விழுந்துவிட்டால் எப்பொழுதும் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு பயம் தரும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும். சுவர் வைக்கும்போது வெளிப்புறம் விழுந்துவிட்டால், சண்டை சச்சரவு அந்த குடும்பத்தில் நீடிக்கும். உட்புறம் விழுந்தால், அந்த வீட்டு உரிமையாளருக்கு ஆகாது.
இதற்கு பரிகாரம், சுவர் விழுந்த அந்த நாளை தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல நாளில் பூஜை செய்து சுவர் கட்டும் வேலையை தொடங்க வேண்டும்.
ஆப்செட் சுவர்
ஆப்செட் சுவர் அல்லது Corner Wall என்பது சுவரின் மூலையில் உள்ள பில்லர் மற்றும் Ceiling wall எனப்படும் மேல் சுவரில் தென்படும் Beam wall அமைப்பை குறிப்பதாக அமைகிறது. எந்த ஒரு கட்டடத்தையும் வலுவாக தாங்கி நிற்பது Beam மற்றும் பில்லர் அமைப்புகள்தான் என்பது நாம் அறிந்ததே. இந்த பில்லர் அல்லது பீம், சில கட்டடங்களில் நமது பார்வைக்கு தெரியாதபடி சுவர் வடிவமைத்து இருப்பார்கள். சில கட்டடங்களில் அவை பார்வையில் படும்விதமாக அமைந்திருக்கும்.
இந்த பில்லர், சுவர் ஓரமாக ஒரு மூலையில் அமையும்போது அதனை ஆப்செட் சுவர் (Offset Wall) என்று அழைப்பார்கள். (பார்க்க படம்).
இந்த ஆப்செட் சுவரானது தென்மேற்கிலோ அல்லது வடமேற்கிலோ நம் பார்வையில் படும்படி அமைந்துவிட்டால், எந்த வித பெரிய வாஸ்து தோஷம் கிடையாது. அதுவே, வடகிழக்கிலோ, தென்கிழக்கிலோ ஆப்செட் சுவர் நம் பார்வைக்கு தெரியும்படி அமைத்துவிட்டால் கட்டட தோஷம் ஏற்பட்டு விடும். அதிலும் குறிப்பாக ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் ஆப்செட் சுவர் தென்பட்டால் மிகுந்த தோஷத்தை அந்த கட்டடத்திற்கு ஏற்படுத்தி விடுகிறது.
என் வாஸ்து அனுபவத்தில் இந்த தோஷத்தால், அத்தகைய கட்டடத்தில் வசிப்பவர்களும், அதன் உரிமையாளர்களும் படும் துயரத்தை பார்த்திருக்கிறேன். ஒரு கட்டடத்தை என்னதான் சிறந்தமுறையில் வாஸ்து டிசைன் செய்து கட்டி இருந்தாலும், வடகிழக்கில் தென்படும் ஆப்செட் சுவர், அந்த கட்டடத்தின் ஒட்டுமொத்த வாஸ்து சிறப்பையும் கொஞ்சம், கொஞ்சமாக இழக்கச் செய்கிறது.
ஆப்செட் சுவர் வாஸ்து (OFFSET WALL VASTU) பற்றி இதுவரை எந்த ஒரு நூலிலும், இணையதள பதிவுகளிலும், பத்திரிக்கை கட்டுரைகளும், தகவலும் வந்ததில்லை. இதுதான் முதல்முறையாக ஆப்செட் சுவர் பற்றி வரும் கட்டுரையாகும்.
நான் வாஸ்து ஆலோசனைக்காக செல்லும் ஒவ்வொரு கட்டடத்திற்கும் இந்த ஆப்செட் சுவர் அமைப்பு எவ்வாறு உள்ளது?, அது நம் கண்களுக்கு தென்படும்படி அமைந்துள்ளதா? என்று பார்த்து விடுவது வழக்கம்.
நண்பர்களே… ஒன்றை மட்டும் மிக கவனமாக நினைவில் வைத்திருங்கள். எந்த ஒரு கட்டடத்திற்கும் NORTH EAST OFFSET WALL அதாவது வடகிழக்கு மூலையில் தென்படும் ஆப்செட் சுவர் மிக பெரிய வாஸ்து தோஷத்தை தந்திடும். இதை தெளிவாக கவனித்து கட்டடத்திற்கு வாஸ்து டிசைன் செய்யுங்கள்.
ஒரு தொழிலதிபரின் அழைப்பின் பேரில் என் தந்தையும் நானும் மும்பை சென்றிருந்தோம். மும்பை தொழில் அதிபர் தன் நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். ஆரோக்கியம் பாதித்திருந்த நிலையில் இருந்தார். அவரும் சில சின்ன வியபாரங்களை செய்துக் கொண்டிருப்பவர். இந்நிலையில் அவர் மும்பை நரிமன் பாய்ன்ட் பகுதியில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த அலுவலகத்திற்கு வந்த பிறகு வியபாரமும், உடல்நலமும் பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாகிவிட்டடிருந்தார். அத்தகைய சூழ்நிலையில்தான் நாங்கள் அவரை சந்தித்தோம்.
அவரின் படுக்கை அறை அமைப்பில் சின்ன மாற்றம் சொன்னேன். மாற்றம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய பரிகாரமுறையும் செய்யப்பட்டது. பிறகு அவரின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்கள். அவரின் வீட்டை பற்றி இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். இவர் குடியிருக்கும் வீடு, பல ஆண்டுகளாக கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேலான வீடு.
அந்த வீடு பெரிய தோஷம் கொண்டது என்று சொல்வதற்கில்லை. காரணம், அந்த வீட்டில்தான் பல நன்மைகளும், சுபநிகழ்ச்சிகளும் நடந்திருக்கிறது. அப்படியென்றால் சமீபத்தில் சென்ற புதிய அலுவலகத்தில்தான் வாஸ்து தோஷம் இருக்கும் என்று யூகித்து இருந்தேன். அவரின் அலுவலகத்திற்கு அழைத்து சென்று காண்பித்தார்கள்.
என்னுடைய யூகம் சரிதான். வடகிழக்கு மூலையில் ஆப்செட் சுவர் அமைந்து மிக பெரிய தோஷத்தை உண்டாக்கி இருந்தது. அந்த குறையை சுட்டிக்காட்டி நான் எடுத்து சொல்ல, அந்த தோஷத்தை உரியமுறையில் சரி செய்த பின்னர், படிப்படியாக உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் பெற்று, வியபாரமும் விருத்தி அடைந்து இன்று மகிழ்ச்சியாக இறைவன் அருளால் உள்ளார். சமீபத்தில் கூட தன் குடும்பத்தினருடன் சென்னை வந்து எங்களை சந்தித்து விருந்து சாப்பிட்டு சென்றார்.
இவர் மட்டுமல்ல, இவரை போல பலரும் இந்த ஆப்செட் சுவர் தோஷத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் பரிகாரம் கண்டு மீண்டு இருக்கிறார்கள்.
எனக்கு ஆரம்ப காலங்களில், இந்த NORTH EAST CORNER OFFSET WALL, தோஷம் தரும் என்று மட்டும் தெரியும் ஆனால், இது பல மடங்கு தொல்லைகளை அடுக்கடுக்காக தரும் என்பதை நானே தாமதமாகதான் புரிந்துக் கொண்டேன்.
அதனால், இப்போதெல்லாம் Vastu Design-னில் இந்த ஆப்செட் சுவர் விஷயத்தில் மிக கவனமாக இருந்து, கட்டடம் எழும்போது ஒவ்வொரு நிலையிலும் அதை பற்றி என்னிடம் ஆலோசனை பெற்று கட்டடம் கட்டி வரும் அன்பர்களுக்கு சொல்லி வருகிறேன்.
இதில் வீடு, அலுவலகம் என்று எந்த கட்டடமாக இருந்தாலும், வடகிழக்கு-தென்கிழக்கு மூலையில் OFFSET WALL அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அமைத்துதான் தீர வேண்டும் என்றால், அது நம் பார்வையில் படாதபடி BUILDING DESIGN -னை அமைத்துக் கொள்ளுங்கள். நான் வணங்கும் சிவ பெருமான் அருளால் அனைவருக்கும் நன்மையே நடக்கும். நல்வாழ்த்துக்கள்.
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2022 bhakthiplanet.com All Rights Reserved