அமாவாசை நாளில் பூஜை மணி அடிக்கலாமா?
முன்னோர் வழிபாடு என்பது நமது இந்திய கலாசாரத்தின் இன்றியமையாத நெறிமுறை. மாதா-பிதா-குரு-தெய்வம் என்கிற வரிசையில் கண்கண்ட தெய்வங்களாக இருப்பவர்களுக்கே இந்து சமயம் முன்னுரிமை அளிக்கிறது. முன்னோர்களின் ஆசியே மிக முக்கியம் என்பது இந்தியர்களின்-பாரத தேச மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தவர்களுக்கும் அவர்களின் தலைமுறைக்கும்தான் முன்னுரிமை என்பதை மனதில்கொண்டுதான், தெய்வத்தை கூட நம் பெரியவர்கள் கடைசியில் வைத்தார்கள். முன்னோர்களுக்கு நாம் தருகிற முக்கியத்துவத்தைதான் இன்று மேலைநாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக பின்பற்றி வருகிறது என்றால் அது மிகையல்ல.
குலதெய்வ வழிபாடு என்பதே என்ன? நம் பரம்பரையில் பிறந்து, நம்மை போல வாழ்ந்து மறைந்த, இறவா நிலையை அடைந்த ஒர் ஆன்மாவைதான் குலதெய்வம் என்று அழைக்கிறோம். நம் குலத்தை இன்றுவரை காக்கின்ற ஆன்மாவாக இருக்கின்ற எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் பிறந்த ஆணையோ (அ) பெண்ணையோதான் குலதெய்வம் என்று, இந்த பாரத தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென்ற குலதெய்வத்தை வழிபட்டு வருகிறது.
தெய்வ வழிபாட்டை இந்திய மக்கள் ஒரு கண்ணாகவும், குலதெய்வ வழிபாட்டை இன்னொரு கண்ணாகவும் நினைத்து வாழ்கிறார்கள். குடும்பத்தில் நடைபெறுகிற எந்த ஒரு சுபநிகழ்ச்சியாக இருந்தாலும் நாம் முதலில் வணங்குவது கோயிலில் உள்ள தெய்வத்தை அல்ல, ஏதோ ஒரு கிராமத்தில் வீற்றிருக்கும் நம் குலதெய்வத்தைதான்.
*அமாவாசை வழிபாடு*
நமது குலதெய்வம் அற்புத வரலாற்றை கொண்டு இருக்கலாம், ஆச்சரிய வரலாற்றை கொண்டு இருக்கலாம் அல்லது துயரமான வரலாற்றையும் கொண்டு இருக்கலாம். எது எவ்வாறு ஆனாலும் நம் குலதெய்வம் நம் குலத்தை காக்க மட்டும்தான் என்பதே நிஜம். இந்த வகையில்தான் அமாவாசை வழிபாடும் மிக,மிக முக்கியமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். குலதெய்வ வழிபாட்டுக்கு நிகரான ஆற்றலை கொண்டதுதான் அமாவாசை வழிபாடு.
நமது இந்து சமயம் பண்டிகைகளால் நிறைந்தது. ஒரு தொலைகாட்சி நாடகத்தில் மறைந்த நம் ஆச்சி மனோரமா வேடிக்கையாக சொல்வார். “படுத்தால் தீபாவளி, எழுந்தால் பொங்கல்” என்று. அவ்வாறே நமது இந்து சமயமானது பண்டிகைகளுக்கும், கிராம திருவிழாக்களுக்கும் பெரிய முக்கியதுவத்தை தந்து ஏழை-பணக்காரன் என்று எவருக்கும் உற்சாகம் தருகிறது. அவரவர் சக்திக்கு ஏற்ப மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறாக இதில் அமாவாசை வழிபாடு மாதம்தோறும் வரும் ஒரு நிகழ்வாக இருந்தாலும், அதுதான் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக, பக்கபலமாக நிற்கிறது.
நம் குடும்பத்தில் நம்முடன் வாழ்ந்து, நமக்காகவே வாழ்ந்து மறைந்துபோன உறவுகள் இருக்கிறதே, அந்த உறவுகள்தான் உடலால் மறைந்து, உணர்வால் வாழ்ந்து நம்மையும் வாழ வைக்கிறார்கள். ஆன்மாவுக்கு அழிவில்லை என்று நம் இந்து சமயம் உறுதியாக சொல்கிறது. இந்த பூமியில், உடலில் உயிர் இருந்தால்தான் மதிப்பு. நெருப்பில் இட்ட பிறகு இல்லை சிறப்பு. அந்த வகையில் இந்த பூமியில் உடலுக்குதான் மரியாதை. மேல் உலகில் ஆன்மாவுக்குதான் மரியாதை. அதனால் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்த பிறகு புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கப்படுகிறது. அழிவற்ற இந்த ஆன்மாதான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று தன் குடும்பத்தை காண வருகிறது.
ஒவ்வொரு அமாவாசை திதியில் வருகிற ஆன்மாவானது, தன் குடும்பத்தினர் தன்னை நினைத்து வழிபட்டால் மகிழ்கிறது. வழிபாடு இல்லை என்றால் அழுது புலம்புகிறது. அழுது புலம்பியதால் உருவாவதுதான் முன்னோர் சாபம் அல்லது பித்ரு சாபம்.
*முன்னோர் சாபம் என்ன செய்யும்?*
செய்யக்கூடாததெல்லாம் செய்யும். அதனால்தான் அன்பர்களே… பண்டிகைகளை நாம் மறந்தாலும், தெய்வ வழிபாட்டை நாம் மறந்தாலும், அமாவாசை திதியை மறக்கவே கூடாது. நம் குடும்ப முன்னோர்களை மறக்கவே கூடாது என்பதால்தான் அதனை மாதம்தோறும் வழிபடும் விதமாக வைத்தான் இறைவன். இறைவனை ஆண்டுக்கு ஒருமுறை வழிபட்டாலும் பரவாயில்லை. ஆனால் நம் முன்னோர்களை எந்நேரமும் நினைத்து வணங்கி வர வேண்டும். நாம் இன்று பசியின்றி இருக்கிறோம் என்றால், நம் வம்சத்தில் யாரோ சரியாக முன்னோர் வழிபாடு செய்து வருகிறார் என்பதுதான் காரணம்.
பத்து தலைமுறைக்கு பிறகு மீண்டும் நாம் அதே பரம்பரையில் பிறக்கிறோம். நாம் செய்த பாவ-புண்ணியங்களை நாமே அனுபவிக்க மீண்டும், மீண்டும் பிறக்கிறோம். நம் ரத்த உறவுகள் பிறவாநிலையும் அடைந்துவிடலாம். ஒருவேளை மீண்டும் நம் பரம்பரையில் பிறந்தால் நல்லமுறையில் பிறந்து வாழ செய்யப்படும் வழிபாடுதான் அமாவாசை திதி வழிபாடு.
*இந்த அமாவாசை வழிபாடு எப்படி செய்ய வேண்டும்?*
அதற்கு விதிமுறை ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டால், இல்லாமல் இல்லை. ஆனால் அது கடுமையாகவும் இல்லை. அதுதான் நம் இந்து சமயம். நம் சக்திக்கு ஏற்ப வழிபாடு. அதில் முறையான வழிபாடு என்பதை விட அன்பான வழிபாடு என்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. வெறும் சம்பிரதாயத்திற்காக செய்யப்படும் எந்த வழிபாடும் பலன் எதுவும் தருவதில்லை. பக்தியும் அன்பும் கலந்த வழிபாடு சாஸ்திர விதிபடி இல்லையென்றாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதுதான் இந்து சமயத்தில் இறைவனும், நம் முன்னோர்களும் நம் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிபாடாக இருக்கிறது.
*காக்கைக்கு உணவு*
அமாவாசை திதியில் முக்கியமாக பழம் – பூவை விட முக்கியமானது தண்ணீர். தூய்மையான குடி தண்ணீர். கண்டிப்பாக ஒரு டம்ளரில் தண்ணீர் வைக்க வேண்டும். அதன்பிறகு பூ – பழங்கள். படைக்கப்படும் உணவை நமக்கு பிடித்ததாக இருப்பதை விட, அமாவாசை திதியில் நாம் யாரை நினைத்து வழிபடுகிறோமோ அவருக்கு பிடித்தமான உணவை சமைத்து பரிமாற வேண்டும். அன்றைய தினம் ஒருவருக்காவது அன்னதானம் வழங்கலாம். காக்கைக்கு கண்டிப்பாக உணவு வைக்க வேண்டும். அமாவாசை அன்று காலையும், மதியமும் கண்டிப்பாக உணவு வைக்க வேண்டும் காக்கைக்கு.
அன்பர்களே… நாம் காக்கைக்கு உணவு வைக்கும்போது பலர் செய்யும் தவறு என்னவென்றால், நாம் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருக்கும் எச்சில் உணவை காக்கைக்கு போடும் பல குடும்பத்தை பார்த்து வருகிறேன். இது மிகவும் தவறு நண்பர்களே. அமாவாசை திதியில் மட்டுமல்ல எந்த நாளிலும் எச்சில் உணவை காக்கைக்கு வைக்காதீர்கள். காக்கைக்கு முதலில் வைக்கும் உணவானது புதிய உணவாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்தது மீதம் இருந்த உணவு, நாம் சாப்பிட்டு மிச்சம் இருந்த உணவு போன்றவற்றை வைக்கலாம். ஆனால் முதலில் புதிய உணவாகதான் இருக்க வேண்டும். கெட்டுப்போன உணவை காக்கை மட்டுமல்ல எந்த உயிரினத்துக்கும் வைக்கக்கூடாது. சாப்பிடுவது காக்கை அல்ல, நம் குடும்பத்தின் முன்னோர் என்பதை கவனத்தில் எப்போதும் இருக்க வேண்டும். காக்கைக்கு உணவு வைக்கும்போது முடிந்தால் தண்ணீரும் வையுங்கள்.
*அமாவாசையில் பூஜை மணி*
முக்கியமாக –
அமாவாசை பூஜையில் சாமி மணி அடிக்காதீர்கள். பூஜை மணி கடவுள் வழிபாடுக்கு மட்டுமே தவிர, முன்னோர் வழிபாட்டுக்கு அல்ல. பூஜை மணி என்பது மிகவும் விசேஷ சக்தி வாய்ந்தது. பூஜை மணி ஒலிக்கும் இடத்தில் ஆன்மாக்கள் இருக்காது. கடவுள் வழிபாட்டில் பூஜை மணி எழுப்புகிற நோக்கமே என்ன தெரியுமா?. எந்த துஷ்ட சக்தியும் வீட்டுக்குள் இருக்கக் கூடாது என்பதற்காகதான். பேய்-பிசாசு-ஆத்மாக்கள் இவை பூஜை மணி ஒலிக்கின்ற இடத்தில் நிற்பதில்லை. பூஜை மணி இறைவனுக்கானது என்பதால் அவை ஒதுங்கி போய்விடும். பண்டிகைகளில், செவ்வாய்-வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் நாம் கற்பூர தட்டுடன் வரவேற்பறை வரை வந்து தலைவாசல்படிக்கு கற்பூரம் காட்டி பூஜை மணி அடித்து வழிபடுவது எதனால் என்றால், வீட்டுக்குள் இருக்கும் துஷ்ட ஆன்மாக்கள் வீட்டை விட்டு வெளியேற்றத்தான் என்பதை காரணம் தெரியாமல் நல்லது செய்கிறோம்.
அதுவே முன்னோர் வழிபாட்டில் வாசல்வரை வந்து நாம் பூஜை செய்வதில்லை. பூஜை அறையில் மட்டும் அமாவாசை திதி வழிபாடு செய்வோம். அதனால் அமாவாசை பூஜையில் சாமி மணி அடிப்பதை தவிர்ப்பது நல்லது. சாமி மணி அடித்தால், ஆன்மாவை உள்ளடக்கிய உடலுக்கு மகிழ்ச்சியை தரும். ஆனால் உடலற்ற ஆன்மாவுக்கு நம்மை விலகி நிற்க சொல்கிறார்கள் என்கிற எண்ணத்தை தரும். அதனால்தான் முடிந்தளவில் அமாவாசை முன்னோர் வழிபாட்டில் பூஜை மணி அடிப்பதை தவிர்க்கலாம்.
*தேங்காய் உடைக்கலாமா?*
அமாவாசை பூஜையில் முன்னோருக்கு செய்யப்படும் வழிபாட்டில் தேங்காய் உடைத்தால் பரவாயில்லை, உடைக்காமல் விட்டாலும் பரவாயில்லை. ஆனால் தெய்வீக வழிபாடுகளில் தேங்காய் கட்டாயம் உடைத்துதான் பூஜையை செய்ய வேண்டும். முன்னோர் வழிபாட்டில் தேங்காய் கட்டாயம் உடைக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. அது அவரவர் விருப்பமாக விட்டுவிடலாம். எது எப்படி இருந்தாலும், தெய்வீக வழிபாட்டில் தரும் முக்கியத்துவத்தை விட, அமாவாசை வழிபாடுக்கு மிக,மிக கட்டாயமாக முக்கியதுவம் தந்து, கடமைக்காக முன்னோரை வழிபடாமல், உண்மையான அன்புடன் வழிபட்டு உண்மையாக இருந்தால், இறைவனிடம் மன்றாடி நம் பாவங்களை குறைத்து, நம்மை நோய் நொடியின்றி வாழ வைக்க நம் முன்னோர்கள் பாடுபடுவார்கள்.
முன்னோர் வழிபாடும் – அமாவாசை வழிபாடும்- குலதெய்வ வழிபாடும் எந்த காரணத்துக்காகவும் செய்யாமல் விட்டு விடாதீர்கள். நமக்காக வாழ்ந்த அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை, எப்போதும் நம் குலம் காத்து வாழ வைக்கும்.
உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் செத்த பிறகு படையல் போடுவதில்லை என்ன பலன்? என்பதையும் நினைவில்கொண்டு, வாழும் காலத்திலேயே நம் உறவுகளை மகிழ்ச்சியாக வைத்திருப்போம்.
நன்றி !
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2021 bhakthiplanet.com All Rights Reserved