Tuesday 3rd December 2024

தலைப்புச் செய்தி :

தென்மேற்கில் சமையலறை-பூஜையறை!

தென்மேற்கில் சமையலறை-பூஜையறை

தென்மேற்கும் அதன் குணங்களும் – பகுதி 3

விஜய் ஜி கிருஷ்ணாராவ்

SIVA`S VAASTHU PLANNERS

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

ஒரு கட்டடத்தின் அல்லது மனையில் தென்மேற்கு மூலை (அ) பகுதி வளர்ந்து இருக்கக் கூடாது என்பதை அறிந்தோம். இப்பொழுது நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, தென்மேற்கில் சமையல் அறை இருக்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம்.

**நெருப்பு ஆகாது**

தென்மேற்கு என்பது ஆளுமை மற்றும் எஜமானதன்மையை, அதிகார பதவிகளை தரக்கூடிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டக்கலை சாஸ்திரம் சொல்கிறது. அதனால், தென்மேற்கில் அதற்குரிய அமைப்பை யோகத்தை நமக்கு தரக்கூடியதாக அமைத்திட வேண்டும்.

இதில் –

தென்மேற்கு மூலைக்கு கொஞ்சம் கூட ஆகாத தன்மையாக இருப்பது நெருப்பு.

நெருப்பும் – நெருப்பு தொடர்பான எந்த ஒரு அமைப்பையும் தென்மேற்கு மூலை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி அமைந்துவிட்டால், அந்த கட்டடத்திற்கும் அதில் வசிக்கக் கூடியவர்களையும் பாடாய் படுத்தும். நியாயமாக கிடைக்க வேண்டிய அதிகார யோகத்தை அனுபவிக்க இயலாமல் செய்துவிடும். அதனால் – தென்மேற்கு மூலையில் நெருப்புக்குரிய அம்சங்களாக இருக்கக்கூடிய சமையலறை, பூஜை அறை, தொழில்சாலையாக இருந்தால் இரும்பை உருக்கப் பயன்படுத்தும் இயந்திரங்களையும் பொருத்தவேக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

**என்ன நடக்கும்?**

தென்மேற்கில் சமையல் அறை அல்லது பூஜை அறையை அமைத்துவிட்டால், எந்த மாதிரியான வினைகள் ஏற்படும்?

முதலில் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவியை எளிதில் தராது. அப்படியே தந்தாலும் ஏதாவது சட்டச்சிக்கலை உருவாக்கிவிடும். தெற்கு பெண்களுக்கும், மேற்கு ஆண்களுக்கும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அல்லவா? அதன்படி, தெற்கை சார்ந்த தென்மேற்கில் சமையலறை அமைந்தால், பெண்களுக்கு தோஷத்தை உருவாக்கி விடும். மேற்கில் அமைந்தால் ஆண்களுக்கு தோஷம் என்பதை அறியலாம். வம்பு – வழக்குகளை அதிகமாக தருவதை பல தென்மேற்கு சமையலறையால் அவதிப்படும் கட்டட உரிமையாளர்களை கவனித்து வருகிறேன்.

தென்மேற்கில் சமையலறை இருந்தால் என்னென்ன கெடு பலன்கள் ஏற்படும் என்பதை இன்னும் விரிவாக எழுத விருப்பமில்லை. சுருக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

**இந்த மூன்றும் ஏற்படும்!**

தென்மேற்கில் சமையல் அறை இருந்தால், முதலில் ஆரோக்கியத்தை கெடுக்கும். இரண்டாவது, வம்பு – வழக்குகளை தந்து, சட்டச்சிக்கல்களை உருவாக்கி சிறைச்சாலை வரை கொண்டு செல்லும். மூன்றாவது, மரண பயத்தை காட்டும்.

மேற்கண்ட மூன்றும்தான் தென்மேற்கில் உள்ள சமையல் அறை அநேகமாக பலருக்கு ஏற்படுத்தும் தோஷங்களாகும்.

**பரிகாரம் பாதுகாக்குமா?**

சரி – “தென்மேற்கில் சமையலறைதான் என் வீட்டில் அமைந்து இருக்கிறது. அதற்கு நான் என்ன பரிகாரம் செய்வது? இன்றைய சூழ்நிலையில் என்னால் வீட்டை மாற்றி செல்ல இயலாது. வேறு இடத்தில் சமையல் அறையை அமைக்கவும் முடியாது. இதற்கு பரிகாரம் சொல்லுங்கள்”  என்று கேட்பீர்களேயானால், இதற்கு நான் சொல்வது –

தென்மேற்கில்  அமைந்த சமையல் அறைக்கும் அல்லது தென்மேற்கில் அமைந்த குளியல் – கழிவறை தோஷத்திற்கு ஓரளவுதான் பரிகாரம் பாதுகாக்கும். உங்கள் ஜாதகமும் கை கொடுத்தால், ஓரளவு பலன் தரும் பரிகாரம் கூட வேறு வழியில் எப்படியாவது உங்களை காப்பாற்றி விடும்.

**அந்த ஓரளவு பரிகாரம்தான் என்ன?**

தென்மேற்கு சமையல் அறைக்குள் வடக்கு நோக்கி சமையல் மேடை அமைத்து வடக்கு நோக்கி சமைப்பது. (வடக்கு நோக்கி சமைக்கலாமா ஸார்? என்று கேள்வி எழலாம். தென்மேற்கு சமையலறைக்கு இது தவறில்லை என்பதுதான் என் பதில்). கிழக்கு நோக்கி சமைப்பதாக இருந்தால், இந்த தென்மேற்கு சமையலறைக்குள், தென்கிழக்கில் சமையல் அடுப்பு வைத்து கிழக்கு நோக்கி சமைப்பதும், வடக்கு மத்தியில் ஒரு சிறிய பாத்திரம் கழுவும் சிங்க்கும், வடகிழக்கில் ஒரு பாத்திரம் கழுவும் சிங்க் என இரண்டு சிங்க் அமைக்க வேண்டும். குடும்பமாக வசிப்பவர்கள் தெற்கு நோக்கி சமைப்பதை தவிர்க்கலாம்.

தென்மேற்கு சமையல் அறைக்குள் தென்மேற்கு மூலையில் ஜன்னல் இல்லாமலும், இந்த சமையலறைக்குள் தெற்கு நோக்கிய தென்கிழக்கில், மேற்கு நோக்கிய வடமேற்கில் வசதிக்கு ஏற்ப ஜன்னல் அமைக்க வேண்டும்.

தென்மேற்கு சமையலறைக்குள், பூஜைக்கு என்று தனி அலமாரி வைப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இவை தென்மேற்கு சமையலறை தோஷத்திற்கு ஓரளவு எளிய பரிகாரமாக விளங்கும்.

**என்ன இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்?**

தென்மேற்கு மூலை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்? என்ன இருந்தால் சிறப்பாக இருக்கும்? என்று பார்க்கலாம்.

முதலில் தென்மேற்கு மூலையில் சமையல் அறை, குளியல் – கழிவறை, பூஜை அறை இருப்பதை தவிர்க்க வேண்டும். அத்தகைய அமைப்பு உள்ள வீடுகளில் வாடகைக்கு குடி போகவும் கூடாது. தென்மேற்கு பள்ளமாக இருக்கக் கூடாது. நீண்டும் இருக்கக் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். தென்கிழக்கில் கிணறு அமைக்கக் கூடாது. தென்மேற்கில் மாடிபடி அமைக்கும் போதும் மொத்த கட்டட அமைப்பையும் மிக உன்னிப்பாக சாஸ்திரபடி சரியாக உள்ளதா? என்று முதலில் பார்த்து விடுங்கள்.

**பூமி தோஷம்**

தென்மேற்கில் அதிகளவில் தோஷம் இருந்தாலும், கட்டட அமைப்புக்கு ஏற்ப சரி செய்ய முடியும். எதையும் இடிக்க வேண்டாம் – உடைக்க வேண்டாம்.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன் – கேளுங்கள்.

வாஸ்து சாஸ்திரபடி கட்டடத்தை மாற்றி அமைக்கின்றோம் என்ற பெயரில் எந்த கட்டடத்தையும் அடிகடி அநாவசியமாக இடித்து உடைக்கக் கூடாது. ஒரு கட்டடத்தை இடிக்கும்போது பூமிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதனால் கட்டடத்தை இடித்து உடைத்து திருத்தி அமைப்பதற்கு முன்னதாக சரியாக என்ன செய்ய வேண்டும்? என்பதை அந்த மனை அல்லது கட்டடத்தின் அமைப்புக்கு ஏற்பவும் சாஸ்திர அமைப்பின் படியும் கட்டாயம் கவனிக்க வேண்டும். இல்லை என்றால், பூமி தோஷம் ஏற்படுத்தி விடும்.

**தென்மேற்கில் என்ன இருந்தால் சிறப்பு?**

தென்மேற்கில் கட்டாயம் ஒரு படுக்கை அறை அல்லது அலுவலக அறை இருக்க வேண்டும். தென்மேற்கில் உள்ள படுக்கை அறைக்கு வாரம் ஒருமுறை சாம்பிராணி காட்ட வேண்டும். தென்மேற்கு படுக்கை அறை அல்லது அலுவலக அறை வாசனையாக இருக்க வேண்டும். நறுமணம் இல்லாத தென்மேற்கு அறை பெரிய அளவில் நன்மை தராது.

தென்மேற்கு உயரமாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக வாஸ்து கலை சொல்கிறது. அதனை கடைப்பிடிக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் ஈரபதம் நன்மை தராது என்பதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தென்மேற்கில் பாரமான பொருட்களை வைக்கலாம்.

**கன்னி மூலையா குபேர மூலையா?**

தென்மேற்கு என்பது கன்னி மூலை. குபேர மூலை அல்ல. குபேரனுக்கு திசைதான் உண்டு. திக்கு கிடையாது. குபேரனுக்கு உரிய திசை வடக்கு மட்டுமே. அதனால் தென்மேற்கை கன்னி மூலை என்றே சொல்ல வேண்டும். தென்மேற்கில் கனமான பொருட்களை வைக்கலாம். பயன்படுத்தாத பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூம்மாக தென்மேற்கில் உள்ள அறையை பயன்படுத்த வேண்டாம். தானியங்கள் வைப்பதற்கும் தென்மேற்கில் உள்ள அறை அவ்வளவு உகந்தது அல்ல.

தென்மேற்கு படுக்கை அறையை பெரியவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அது சரிதான் ஆனால் – பொருளாதர ரீதியாக உதவ முடியாத பெரியவர்களாக இருந்தால், தென்மேற்கு அறையை அவர்களுக்கு ஒதுக்குவதை தவிர்த்து, தற்சமயம் அந்த குடும்பத்தை பொருளாதர ரீதியாக காப்பாற்றி நடத்தி செல்லும் நபர் யாரோ அவருக்கு தென்மேற்கு படுக்கை அறையை தரலாம். இதில் வயதில் பெரியவன் – சிறியவன் என்று பார்க்க வேண்டியதில்லை.

**விருந்தினர் அறை – பணியாளர்கள் அறை**

இங்கே மிகமிக முக்கியமாக, தென்மேற்கு அறையை விருந்தினர் அறையாக (Guest Room) அமைக்கவே கூடாது. பணியாளர்கள் தங்கும் அறையாகவும் (Labour quarters or Servant Room) தென்மேற்கு அறையை அமைக்க கூடாது.

தென்மேற்கு பகுதியை கவனமாக பார்த்து அமைத்துவிட்டால், ஜாதக யோகத்துடன் வாஸ்து பலமும் சேர்ந்து, நம் உழைப்புக்கு ஏற்ப பலன் பெற்று, வாழ்க்கையை இறைவன் அருளால் நல்லவிதமாக நிலை நிறுத்தி வெற்றி பெறலாம்.

**நிறைந்தது**




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet 

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 12 2021. Filed under Bhakthi planet, Headlines, Home Page special, Vaasthu, Vaasthu, கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech