Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

வெளிச்சம் முன்னேற்றம்

விஜய் ஜி கிருஷ்ணாராவ்
Sivas Vaasthu Planners
Vijay G Krishnarau
Contact: 9841164648

வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது.

இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் என்பது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

அதனால்தான் திசைகளை சொல்லும் பொழுது முதலில் சூரியன் உதிக்கும் திசையான கிழக்கிலிருந்து ஆரம்பிக்கின்றோம். வெளிச்சம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நமது முன்னோர்கள் திசையை கொண்டு நமக்கு சொல்லி வைத்தார்கள். சூரியன் உதிக்கும் திசையான கிழக்கே முதலில் சொல்லப்படுகிறது. சூரியன் மறையும் திசையான மேற்கை இரண்டாவதாக சொல்லி, பிறகு வடக்கு, தெற்கு என்று சொல்லி வைத்தார்கள்.

கிழக்கும், மேற்கும் நமது வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு இந்திரனுக்கும், மேற்கு வருணனுக்கும் உரியதாக இருக்கின்றது. இந்த இரண்டும் மிக முக்கியமானதாக இருப்பதற்கு காரணம், வெளிச்சமும், காற்றும், மழையும் இந்த பூமிக்கு அவசிய தேவையாக இருப்பதால்தான், கிழக்கை தேவலோகத்தின் தலைவனான இந்திரனுக்கு உரியது என்றும், மேற்கு திசை ஆள்பவன் வருணன் என்றும் சொன்னார்கள்.

பணம் மற்றும் சில விஷயங்கள் அடுத்ததாக இருந்தாலும் நமக்கு முதலில் தேவையானது ஆரோக்கியமும், நல்ல உடல்நலமும். நல்ல உடல்நலத்தை கிழக்கும், மேற்கும் நமக்கு தருகின்றது. இதில் குறிப்பாக கிழக்கு திசை ஆரோக்கியத்தையும், மிக முக்கியமாக வாழ்க்கையின் மிகப்பெரிய அந்தஸ்தையும் தரும் திசையாக கிழக்கு திசை இருக்கிறது.

வெளிச்சம் இல்லாத வீட்டில் துஷ்ட சக்திகள், தீய விஷயங்கள் அதிகம் நடக்கும். அதனால்தான் நமது முன்னோர்கள், ஒரு வீட்டுக்கு முக்கியமானதாக வெளிச்சம் அவசியம் என்று சொல்லி வைத்தார்கள். அதன் அடிப்படையில்தான் கட்டிடத்திற்குள் அமையும் ஒவ்வொரு அறையும் வெளிச்சம் வருவதற்கு ஏற்ப அமைத்தார்கள். மனையடி சாஸ்திரம் வெளிச்சத்தை பற்றி மிக முக்கியமானதாக சொல்கிறது.

வெளிச்சம்தான் அந்த வீட்டில் வசிப்பவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. ஒரு வீட்டில் வெளிச்சம் இல்லை என்றால் அந்த வீட்டில் பொருளாதார நிலை, ஆரோக்கியம், புகழ் இந்த மூன்றும் சரியாக அமையாது.

அதிலும்கூட வெளிச்சம் எந்தெந்த திசையில் இருந்து, எந்தெந்த பகுதியில் இருந்து ஒரு வீட்டுக்குள் நுழைந்தால் நன்மை என்றும் கணித்து வைத்திருந்தார்கள். வெளிச்சம் என்பது எல்லா திசைகளிலிருந்தும் எல்லாம் பகுதியில் இருந்தும் வீட்டுக்குள் வருவதை விட, குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து, சில பகுதிகளில் இருந்து வீட்டுக்குள் வெளிச்சம் வந்தால் மிகவும் நல்லதாக கருதினார்கள்.

அந்த வகையில், கிழக்கு திசையிலிருந்து வரும் வெளிச்சம் முன்னேற்றத்தை தருவதாக இருக்கும். கிழக்கு திசையிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் அந்த குடும்பத்தில், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தை சமுதாயத்தில் உருவாக்கித் தரும்.

கிழக்கில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் இன்னும் மிக அற்புதமான பலன்களை தரவல்லது. அதிலும்கூட கிழக்கு திசையில், வடகிழக்கிலிருந்து கிழக்கு மையம்வரை கிடைக்கும் வெளிச்சமானது, மிக உயர்ந்த பலன்களை தரவல்லது. அடுத்ததாக, கிழக்கை நோக்கிய அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் இருந்தும் நம் வீட்டுக்குள் வெளிச்சம் வரலாம். இதுவும் நல்ல பலன்களையே தரும். காரணம், பொதுவாகவே எந்த ஒரு வீட்டிலும் தென்கிழக்குப் பகுதியில்தான் சமையலறையை அமைப்பார்கள். அதனால்தான் அந்தப் பகுதியை அக்னி மூலை என்று அழைக்கின்றோம்.




அந்த அக்னி மூலையில் வெளிச்சம் கிடைத்தால் அங்கே சமைக்கப்படும் ஆரோக்கியமான உணவு மேலும் ஆரோக்கியமானதாக மாறுகிறது. நோய் நொடிகளை அண்டவிடாது. உணவு சிறியதாக இருந்தாலும் சூரியனால் கிடைக்கின்ற பலன்கள் நமக்கு மேலும் ஆரோக்கியத்தை கிடைக்கச் செய்கிறது. அதனால்தான் தென்கிழக்கில் சமையல் அறை அமைத்து, தென்கிழக்கில், கிழக்குப் பகுதியில் ஜன்னல்களை வைத்து, அந்த ஜன்னல்கள் வழியாக சூரியனின் கதிர்களை சமையலறைக்குள் வரும்படி செய்து ஆரோக்கியமும், வளமும், முன்னேற்றமும் நமது முன்னோர்கள் பெற்றார்கள்

அதனால் மற்ற பகுதியில் இருந்து, மற்ற திசைகளில் இருந்து நமக்கு கிடைக்கும் வெளிச்சத்தை விட, கிழக்கு திசையில் இருந்து கிடைக்கும் வெளிச்சத்தின் மகத்துவம் மிகப்பெரியது.

நான் வாஸ்து பார்க்க செல்லும் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கிறேன், கிழக்கில் இருந்து வீட்க்குள் வெளிச்சம் வரும் வீடுகளில் வசிப்பவர்கள் புகழ், கீர்த்தியுடன் வாழ்கிறார்கள். அது வடகிழக்காக இருந்தாலும், கிழக்கு மையத்தில் இருந்தாலும், தென்கிழக்கில் இருந்து நமக்கு அந்த வெளிச்சம் கிடைத்தாலும், கிழக்கில் இருந்து கிடைக்கின்ற வெளிச்சம் முன்னேற்றத்தை அந்த வீட்டிற்கு தருகிறது.

வெளிச்சம் குறைவாக வரவேண்டிய திசையும் மனையடி சாஸ்திரம் என்று சொல்லப்படுகின்ற வாஸ்து சாஸ்திரத்தில் இருக்கிறது. எந்த பகுதியில் இருந்து வெளிச்சம் குறைவாக வீட்டுக்குள் கிடைக்க வேண்டும் என்றால், மேற்கு திசையிலிருந்து வரும் சூரிய கதிர்கள் வீட்டுக்குள் குறைவாக இருக்கவேண்டும், அதிகமாக இருக்கக் கூடாது. ஏனென்றால், மேற்கிலிருந்து கிடைக்கும் சூரிய கதிர்கள் அஸ்தமன சூரிய கதிர்கள். அதனால் அவை பலங்களை குறைவாக தருவதால், மேற்கிலிருந்து கிடைக்கும் சூரிய ஒளி மிகக் குறைந்த அளவில் வீட்டுக்குள் படரலாமே தவிர, வீட்டுக்குள் மேற்கு சூரிய ஒளி அதிகம் வருவது அவ்வளவு நல்லதல்ல.

மேற்கில் ஜன்னல்கள் அதிகமிருந்தால், அத்தகைய நிலையில் அஸ்தமன சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வருவதை தவிர்க்க முடியாது. அதனால் அந்த சமயத்தில் திரைச்சீலைகளை வைத்து திரைச்சீலைகளால் ஜன்னல்களை மூடி, குறைந்த அளவு வீட்டுக்குள் அந்த கதிர்கள் வந்தால் போதும், அதிகளவில் வருவதை நாம் தவிர்க்க வேண்டும்.

அதனால், கிழக்கிலிருந்து கிடைக்கும் சூரிய ஒளி, வெளிச்சம் நமக்கு முன்னேற்றத்தை தருவதாக இருக்கின்றது. மேற்கில், வடக்கில், தெற்கில் இருந்தெல்லாம் வீட்டுக்குள் வெளிச்சம் வந்தாலும் நல்லதுதான். வெளிச்சமே இல்லாமல்தான் எந்த வீடும் இருக்கக்கூடாது. ஆகவே வாசகர்களே, ஒரு வீட்டுக்குள் கிடைக்கின்ற வெளிச்சம்தான் அந்த வீட்டுக்கு உயிர் தரும். அதுவே அமோகமான பலன்களையும் தரும். எந்த திசையில் இருந்து வெளிச்சம் கிடைத்தாலும் அவை நமது வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை நிச்சயம் உருவாக்கித் தரும் என்பதே உண்மை.

நன்றி.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 17 2019. Filed under Astrology, Bhakthi planet, Headlines, Home Page special, Vaasthu, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »