Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019


Sri Durga Devi upasakar,

V.G.Krishnarau.

:::குரு பெயர்ச்சி  பலன்கள் :::

அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். வாக்கிய பஞ்சாங்க முறைபடி வரும் 04.10.2018, திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.10.2018 வியாழன் அன்று இரவு 7.49 மணிக்கு துலா இராசியில் இருக்கும் குரு பகவான், விருச்சிக இராசிக்கு செல்கிறார். 

குரு பகவான் மஞ்சள் நிறத்தின் அதிபதி. பொன்-ஆபரணங்களுக்கு அதிபதி. தலைமை பதவியை தருபவர். சாந்த சொரூபி. நாட்டை ஆள செய்பவர். விவேகி. வித்தையில் வல்லவர். பேச்சில் மயக்குபவர். சிம்ம குரலோன். கடலென மக்களை பேச்சாற்றலால் கட்டி வைப்போருக்கு காரணமானவர். இத்தனைக்கும் சொந்தகாரர் பிரகஸ்பதி என்கிற குரு பகவான்.

புஷ்பராக ரத்தினத்தில் மகிழ்பவர். இவருடைய பெயர்ச்சியால் மகிழ்ச்சி அடைபவர்கள் யாரென படித்து பார்ப்போம் வாருங்கள்.

குரு பகவான், அமரும் இடத்தை விட பார்க்கும் இடம் அத்துனை இன்பங்களுக்கும் துணை செய்யும், பலம் சேர்க்கும். அதனால்தான், ‘குரு பார்க்க கோடி புண்ணியம் என்றார்கள்.

சரி, இப்போது யாரெல்லாம் இந்த குரு பெயர்ச்சியில் சாதகமும், பாதகமும் பெறுவர் என பார்ப்போம்.

சரணம் சரணம் குருவே சரணம்!

மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். பல பேர் 8-ல் குரு வந்தால் அதோகதிதான், வராத துன்பம் தேடி வரும் என்று பயம் காட்டுவர். பயமே இல்லை. மேஷ இராசிக்கு குரு, 12-க்குரியவன். அந்த 12-க்குரியவன் 8-ல் வருவது யோகமே தரும் என்று அடித்து கூறுவேன். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்.

ஆம்-

கடந்த ஆண்டை விட நல்ல முன்னேற்றம் வரப்போகிறது. இராசிக்கு 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால் விரையம், அலைச்சல்கள் தவிர்க்கப்படும். தன-தான்யம் சேரும். சுபநிகழ்ச்சி நடைபெறும். திருமணம் நடக்க நல்ல வாய்ப்பு உண்டு. வண்டி-வாகனம் வாங்குவீர்கள். கலைதுறையில் உள்ளவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். என்ன வாழ்க்கையோ இது? என்று சலிப்பு அடைந்த நீங்கள் இனி சந்தோஷமாக இருப்பது நிச்சயம்.  குரு பெயர்ச்சி, பாதகம் இல்லை, சாதகமே.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 60% பலன் தரும்.

ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 7-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 7-ம் இடத்தை சப்தமம் என்று கூறுவார்கள். சப்தஸ்வரங்கள் சரியாக இருந்துவிட்டால் அது தேவகானம்தான். 7-ம் இடத்திற்கு வரும் குரு பகவான், 1-ம் இடம் (அதாவது ஜென்மம்), 3-ம் இடம், 11-ம் இடம் ஆகிய இவ்விடங்களை பார்வை செய்வதால் யோகமோ யோகம்தான். கடல் கடந்து போவீர்கள். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும்.

எதிர்பாரா பண வரவு உண்டு. உடல்நலனில் நொய்,நொடிகள் இருந்தால் பஞ்சுபோல் பறந்துவிடும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். தொட்டது துலங்கும். காரிய சித்தி பெறும். புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. திட்டங்கள் நிறைவேறும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிறர் புகழும்படியான விஷயங்களை செய்வீர்கள்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 80%. பலன் தரும்.

மிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 6-ம் இடம் நல்லதா-கெட்டதா?. இந்த கேள்விக்கு 7,10-க்குரிய குரு கெடுவது நல்லதே எனலாம். அதாவது 6-ம் இடத்திற்கு வருவதால் பாதகம் இல்லை. இதுவரை 5-ம் இடத்தில் இருந்து என்ன கொடுத்தான்? ஒன்றும் இல்லை என்பவர்களுக்கு, இனி இந்த 5-ம் இடம் கொடுக்க வேண்டியதை, 6-ம் இடத்து குரு தந்திடும் பாருங்கள். 2-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடம் ஆகிய இவ்விடங்களை பார்வை செய்வதால், வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி தரும்.

வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள், கலவரங்கள் நீங்கும். எதிர்பாரா சொத்து சேரும். பதவி உயர்வு, வேலை வாய்ப்பு நன்கு அமையும். ஜாமீன் கையெழுத்து மட்டும் யாருக்கும் போட வேண்டாம். நண்பர்களின் உதவி தேடி வரும். தொழில் துவங்குவீர்கள். அரசாங்க வேலைக்கு நல்ல வாய்ப்பு உண்டு. வாகன தொழிலில் லாபம் கிடைக்கும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 65%. பலன் தரும்.

கடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 5-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். பஞ்சமம் அதாவது குறிப்பாக பஞ்சலோகம் என்பார்களே அதனுடைய பலமும், பயனும் சாதாரணமானதல்ல. அதுபோல் பஞ்சமஸ்தானம் எனும் 5-ம் இடம் மிக,மிக பலம் வாய்ந்த இடம். இந்த இடத்தில் வரும் குரு பகவான், 1-ம் இடமான ஜென்மம், 9-ம் இடம் மற்றும் 11-ம் இடங்களை பார்வை செய்வதால், மேன்மக்கள் தொடர்பும், தாய், தந்தையின் ஆசி, பெரிய மகான்களின் ஆசி இவைகளால் பெரிய முன்னேற்றம், பிறர் வியந்து பேசும் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களை பெருமைபடுத்தும் வார்த்தைகளை கேட்பீர்கள். தனவந்தர்களின் நட்பால் எடுத்த காரியம் வெற்றி பெறும். சதி திட்டங்கள் முறியடிக்கப்படும். உங்களை இகழ்ந்து பேசியவர்களே புகழ்ந்து பேசுவதையும் காண்பீர்கள். பாலைவனத்தில் தத்தளித்த நீங்கள் சோலைவனத்தை சொந்தமாக்கிக்கொள்ளும் அருமையான நேரம் இது.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 90%. பலன் தரும்.

சிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 4-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். சிலர் 4-ம் இடம் அவ்வளவு சாதகம் இல்லை என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். திரிகோணதிபதி, கேந்திரத்தில் வந்தால் தராத நல்லவற்றை தந்துவிட்டுதான் போவார். 8,10,12 ஆகிய இவ்விடங்களை குரு பார்வை செய்வதால் உங்களை எள்ளி நகையாடிவர்கள், உங்கள் முன் மண்டியிடுவார்கள். கடன்கள் கரைந்துவிடும். கோர்ட்-வழக்கு வெற்றி தரும்.

நசிந்த தொழில் புத்துயிர் பெரும். புதிய தொழிலும் அமையும். வேலை,வேலை என்று எல்லா வேளையும் தேடி வந்தவர்களுக்கு உத்தியோகம் அமையும். விரையங்கள், அலைச்சல்கள் அகலும். நோய்,நொடிகள் இருந்தால் அகலும். திட்டங்கள் நிறைவேறும். குடும்ப பிரச்னைகள் தீரும். பொன்-பொருள் சேரும். ரியல் எஸ்டேட் துறையில் நல்ல லாபம் அதிகரிக்கும். தெய்வ தரிசனமும் அதிகமாக இருக்கும். ஆக, பெருமையான குரு பெயர்ச்சி.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 75%. பலன் தரும்.

கன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 3-ம் இடம் நல்லதல்ல. பலர் கூறுவது இப்படிதான். ஆனால் நான் கூறுவது, கேந்திராதிபதி கெட்டால் நல்லதே. உங்கள் இராசிக்கு 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடம் ஆகிய இவ்விடங்கள் குருவினால் பார்க்கப்படுகிறது. திருமணம், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர் வருகை இருக்கும். சொத்துக்கள் வந்தடையும். வெளிநாட்டு நண்பர்களின் உதவியும், வியபாரா தொடர்பும் ஏற்படும்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் அமையலாம். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு அகலும். பல கஷ்டங்கள் கரைந்து போகும். கடன்கள் தீர வழி பிறக்கும். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வரும். பலநாட்களாக பிடித்து வாட்டிவந்த நோய் அகன்றுவிடும். முன்னோர்களின் ஆசி, தெய்வ தரிசனம் கிட்டும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 65%. பலன் தரும்.

துலாம் இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 2-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடம் ஆகிய இவ்விடங்களை பார்வை செய்வார் குரு பகவான். ரோக நிவர்த்தி உண்டாகும். உங்களுக்கு எதிரான அவச்சொல் நீங்கும். பெரிய அளவிலான கடன் தீரும். டென்ஷன் குறையும். கோர்ட், கேஸ் இருந்தால் வெற்றி தரும். குழந்தை பேறு உண்டாகும். வாகன வசதி ஏற்படும். பழைய வீடாக இருந்தால் அதனை புதுபிக்கும் பணிகளை தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம் அல்லது வீடு மாற்றம் அமையலாம். தொழில்துறையில் எதிர்பாரா முன்னேற்றம், லாபம் அதிகரிக்கும். குடும்பத்திற்காக அதிகமான உழைப்பு இருக்கும். உங்களின் பேச்சு சாமர்த்தியத்தால் காரிய சித்தி ஏற்படும். உறவினர்களின் வருகை அதிகமாக இருக்கும். கூட்டு தொழில் உருவாகும். லாபமும் அதிகரிக்கும். அரசாங்க உதவிகளை பெறுவீர்கள்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 65%. பலன் தரும்.

விருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 1-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். அதாவது உங்களுக்கு இது ஜென்ம குரு. வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு என்பார்கள். அதை பற்றி கவலை வேண்டாம். குரு அமரும் இடத்தை விட, பார்க்கும் இடம் சிறப்பு பெறும். அந்தவகையில், 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் ஆகிய இவ்விடங்கள் குரு பார்வை பெறுகிறது. திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். குழந்தை பாக்கியத்தில் இருந்த தடை நீங்கி குழந்தை செல்வம் அமையும்.

கணவன்-மனைவி ஒற்றுமையால் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் நிகழும். கஷ்டங்கள் கரைந்துவிடும். வாகன வசதி ஏற்படும். சிலருக்கு மேற்கல்வி, பட்டபடிப்பு அமையும். காரியங்களில் இருந்த தடைகள் அகலும். பயணங்கள் அதிகரிக்கும். ஜென்ம குரு இருப்பதால் பேச்சில் நிதானம் இருக்க வேண்டும். செயலில் அவசரம் கூடாது.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 60%. பலன் தரும்.

தனுசு இராசி அன்பர்களே…  உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. சோதனையே என்று பலர் கூறினாலும், குரு பகவான் அமரும் இடத்தை விட பார்வை செய்யும் இடமே உகந்தது என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடம் ஆகிய இவ்விடங்களை குரு பார்வை செய்வதால் இடமாற்றம் அமைந்தால் அது நல்லதே செய்யும். சிலருக்கு வீடு, மனை அமையும். ரோக நிவர்த்தி உண்டாகும்.

காரிய சித்தியால் கடன்கள் குறையும். விரோதம் மறையும். வழக்கு தொல்லை நீங்கும். பெரியவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிக பணி நீக்கம் போன்ற பிரச்னைகளில் உள்ளவர்கள், மறுபடியும் உத்தியோகத்தில் சேர வாய்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக மங்கள நிகழ்ச்சி நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். பயணங்கள் அதிகரிக்கும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 55%. பலன் தரும்.

மகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். பலன் எப்படி இருக்கும்? கேட்கவே வேண்டாம், லாபத்தை அள்ளி தருவார். 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடம் ஆகிய இவ்விடங்களை பார்வை செய்வார் குரு பகவான். சகோதர, சகோதரி உதவி தேடி வரும். தடைப்பட்ட பல காரியங்கள் கைகூடும்.எதிர்பாரா வெற்றிகள் வந்தடையும். போட்டி இருந்தாலும் அதில் எதிர்பாரா வெற்றி வாகை சூடுவீர்கள். பல நாட்களாக தள்ளி போடப்பட்ட திருமணம் சட்டென்று நடக்கும். பாதியில் நின்ற கட்டட பணிகள் நிறைவடையும்.

கேட்கும் இடத்தில் இருந்து பண உதவிகள் கைக்கு வந்து சேரும். துன்பங்கள் தூர பறந்து போகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கடன் சுமை குறையும். சுற்றுலா பயணம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி தேடி வரும். சிலருக்கு பங்கு வர்த்தகத்தில் (Share Market) லாபம் தரும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 75%. பலன் தரும்.

கும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 10-ல் குரு அவ்வளவு நல்லதல்ல என்று பலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். தன-லாபாதிபதி, 10-ம் இடத்தில் அமர்ந்து 2-ம் இடம், 4-ம் இடம், 6-ம் இடம் ஆகிய இவ்விடங்களை பார்வை செய்வதால் இதைவிட வேறு என்ன வேண்டும். தனஸ்தானத்தை தனாதிபதியே பார்வை செய்வதால் மண்ணும் பொன்னாகும். கரன்சி நோட்டுகள் கையில் விளையாடும்.

மட,மடவென்று வாழ்க்கை தரமும் உயரும். பேச்சில் கம்பீரம் வரும். சொல்லும் சொல் வெற்றி பெறும். வீடு, மனை, வாகனம் அத்தனையும் அமையும். விரோதிகள் அடிபணிவர். வழக்கு வெற்றி பெறும். கஷ்டங்கள் காற்றில் பறக்கும் பஞ்சுபோல் பறந்துவிடும். கடன்கள் படிப்படியாக கரைந்துவிடும். சுயதொழில் அமையும். வெளிநாட்டு பயணம் அதிகரிக்கும். பொதுவாக அருமையான வாழ்க்கை அமையும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 85%. பலன் தரும்.  

மீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 9-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். கேந்திராதிபதி திரிகோணம் ஏறுவது விசேஷம். அதுமட்டுமல்ல, 1-ம் இடம் (ஜென்மம்), 3-ம் இடம், 5-ம் இடம் ஆகிய இவ்விடங்களில் குரு பார்வை படுவதால் புத்துணர்வு பெறும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். நோய், நொடிகள் நீங்கும். சில காரியங்கள் கைகூடும். அவச்சொல் நீங்கும். புத்திர பாக்கியத்தில் தடை இருந்த சிலருக்கு குழந்தை பேறு உண்டாகும்.

எதிர்பாரா பணவரவு அமையும். தொழிலும் பல மடங்கு முன்னேறும். வாகனம், வீடு, மனை வாங்குவீர்கள். இதுவரை 8-ல் இருந்த குருவால், மற்றவர்களின் தவறான ஆலோசனையால், தவறான செயல்களில் ஈடுபட்டு பல இன்னல்களை நீங்கள் அனுபவித்தற்கு பரிகாரமாக இப்போது 9-ம் இடத்தில் வந்துள்ள குரு பகவான், உங்களுக்கு நல்லறிவு தந்து, சிந்தனைகளை உயர்த்தி இனி உங்களுக்கு அருமையாக வாழ்க்கை தரத்தை தந்திடுவார். இது உங்களுக்கு பெருமை சேர்க்கும் குரு பெயர்ச்சி.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு: 85%. பலன் தரும்.

அனைவருக்கும் எனது இனிய குரு பெயர்ச்சி நல்வாழ்த்துக்கள். நன்றி !

*******

ENGLISH Version coming soon

குருவே சரணம்- குருபெயர்ச்சி சிறப்பு கட்டுரை

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© Copyright :

bhakthiplanet.com ©Copyright 2011-2018  All rights reserved. Republication or redistribution of Bhakthiplanet content, like Rasi palan, religious/spiritual articles, astrological notes, vasthu suggestions, etc., including by framing or similar means, is expressly prohibited without the prior written consent of the management of www.bhakthiplanet.com.

© பதிப்புரிமை அறிவிப்பு :

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் இராசி பலன்கள், ஆன்மிக கட்டுரைகள் –ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியிடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியிடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியிடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 3 2018. Filed under Astrology, Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »