தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் : தை அமாவாசை சிறப்பு கட்டுரை!
Written by Niranjana
27.01.2017 அன்று தை அமாவாசை
தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும்
கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற அவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும்.
அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம்.
இவ்வாறு, இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால் பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படி ஆகும்.
அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார்.
ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன் தோன்றி, “முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்.” என்றார்.
இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள்
அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.
அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. தை அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.
அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்.
கோடி புண்ணியம் தரும் எள் தானம்
எள், ஸ்ரீவிஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து உருவானது. அதனால், எள் தானம் செய்தால் பல புண்ணியங்கள் கிட்டும். அதனால்தான், பித்ருக்களுக்கு பிண்டம் கொடுக்கும்போது எள்ளையும் கலந்தே தருகிறோம். தர்பைப் புல் ஆதியில் ஆகாயத்தில் உருவானது என்கிறது கருட புராணம்.
அதனால், பல தேவர்களின் அருளாசியும், தெய்வங்களின் அருளாசியும் தர்பைக்கு இருக்கிறது. ரேடியோ அலைகளை பெற ஆண்டனா உதவுவதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது.
இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள் நீங்கும்.
பூஜை முறைகள்
கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து, பித்ருக்களின் படங்கள் இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
தோஷத்தையும் சாபத்தையும், அதனால் ஏற்படும் சுப தடைகளை நீக்கி நன்மைகளை அள்ளி தர பித்ருக்கள் காத்திருக்கிறார்கள். அதனால் பித்ருக்களுக்கு மரியாதை தந்து, அவர்களின் பசியை போக்க தை அமாவாசை அன்று பிண்டம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.
மறவாதீர்கள். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.
விசேஷமான தை அமாவாசையில், பித்ருக்களின் பசியை போக்கி அவர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று சுபிக்ஷங்களை தடையின்றி பெறுவோம்.!
2017 Numerology Predictions Click Here
SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here
Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2017 bhakthiplanet.com All Rights Reserved