கஷ்டங்களை நீக்கி நன்மைகளை அள்ளி தரும் அன்னை ஸ்ரீரேணுகாதேவி! ஆடி மாத பரிகாரம்.
ஆடி மாதம் வந்தாலே இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆம். இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு உகந்த வேப்பிலையை நம் இல்லத்தின் தலைவாசலில் கட்டி அம்மனை வழிப்படுகிறோம். இதனால் நம் இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி அம்மனின் அருளாசியால் சந்தோஷம் நிலைத்து இருக்கும்.
அம்மைக்கு காரணம் என்ன? இதற்கு சிவபெருமான் சொன்ன மருந்து என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம். அத்துடன், ஆடி மாதத்தில், ஏன் மாவிளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது என்பதை பற்றியும், அத்துடன் அம்மனை வணங்கும் முறையை பற்றியும் தெரிந்துக்கொண்டாலே நம்மை சுற்றியுள்ள பீடைகள் விலகும்.
ரேணுகாதேவி புராணம்
விதர்ப்ப தேசத்து அரசர் ஜராவதன். அவருடைய மகள் ரேணுகாதேவி. தன் மகளுக்கு நல்ல மணாளனைத் தேடிக்கொண்டு இருந்தார் அரசர். அப்போது ஒருநாள், ரேணுகாதேவிக்கு ஒரு அசரீரி குரல் கேட்டது
“ரேணுகாதேவி, நீ குண்டலிபுரத்தை நோக்கி செல். அங்கு ருத்ராவதாரம் கொண்ட ஜமதக்னி முனிவர் ஒருவர் இருப்பார். அவருக்கு பணிவிடை செய்து அவரையே உன் கணவராக ஏற்று கொள்.” என்றது அந்த அசரீரி. அதன்படி ரேணுகாதேவி அந்த முனிவரை கண்டறிந்து, அவருக்கு பணிவிடைகள் செய்து, பிறகு அந்த முனிவரையே திருமணம் செய்துக்கொண்டாள். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர்தான் பரசுராமன் .
அசுரனான கார்த்த வீரியன், ஜமதக்னி முனிவரை தரிசிக்க வந்தான். வந்தவன், முனிவர் வளர்த்து வந்த காரம்பசுவைக் கேட்டான். காரணம், “இந்த பசுவால்தான் முனிவர் செழுமையாக வாழ்கிறார், வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு தருகிறார்” என்பதால் பசுவை அசுரன் தானமாக கேட்டான்.
ஒருவர் நல்ல வசதியாக இருந்தால் அதை பார்க்க சிலருக்கு பொறுக்காது அல்லவா. சாதாரண மனிதர்களுக்கே இந்த குணம் இருந்தால் அசுரனுக்கு இந்த பொறாமை குணம் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.
அசுரன், முனிவரிடம் காரம்பசுவை கேட்க, ஜமதக்னி முனிவரோ பசுவை தர மறுத்தார். இதனால் கோபம் கொண்ட அசுரன், முனிவரை கொன்று அந்த பசுவை இழுத்து சென்றான்.
இதை கண்டு அதிர்ந்த ரேணுகாதேவி, தன் கணவரோடு உடன்கட்டை ஏற தீயில் குதித்தாள்.
வேப்பிலையை ஆடையாக அணிந்தாள்
ஆனால் விதிப்படி ரேணுகாதேவியின் ஆயுள் முடியவில்லை. இதனால் திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. அதனால் எரிந்துக்கொண்டிருந்த தீ அனைந்தது. ஆனாலும் ஆடை தீயில் கருகி போனது. ரேணுகாதேவியின் உடலும் தீயில் வெந்தது. உடல் முழுவதும் தீ கொப்பளங்கள். துடிதுடித்து போனாள்.
“வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இப்படி அல்லல்படும் நிலை ஆகிவிட்டதே. எந்த ஜன்மத்தில் செய்த பாவம் இது?” என்று கலங்கி, உடல் தீயில் வெந்த வேதனையில் துடித்தாள். அத்துடன், உடுத்த ஆடை கூட இல்லையே என்று வருந்தி, யார் கண்ணிலும் படாமல் காட்டில் மறைந்து இருந்தாள்.
அந்த காட்டில் வேப்பமரங்கள் இருந்தது. அந்த வேப்பிலைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, கால் போன போக்கில் நடந்தாள். பசியால் துவண்டாள்.
பல நாட்கள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசி மயக்கத்தில் ஒரு சேரியை அடைந்தாள் ரேணுகாதேவி. அங்கு இருந்த ஒரு பெண்மணியை பார்த்து, “சாப்பிட ஏதாவது கொடுங்கள், பசி உயிர் போகிறது”. என்றாள்.
வேப்பிலையே ஆடையாக அணிந்திருக்கும் ரேணுகாதேவியை பார்த்த சேரிமக்கள் தேவிக்கு உணவு தர பயந்தார்கள்.
“இந்த பெண்ணை பார்த்தால், உயர் குலத்தில் பிறந்தவள்போல் முக லட்சணமாக இருக்கிறாள். நாம் இந்த பெண்ணுக்கு சாப்பிட உணவை தந்தால் நமக்கோ அல்லது அந்த பெண்ணுக்கோ ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ” என்று பயந்தார்கள்.
அந்த சமயம், அந்த சேரியில் வசிக்கும் ஒரு பெரியவர், “பசி என்று வந்தவருக்கு உணவு தராமல் அனுப்புவது பெரிய பாவம். அதனால் இந்த பெண்ணுக்கு தயங்காமல் பச்சரிசி மாவு, வெல்லம் இளநீர், பானகம் கொடுங்கள்.” என்றார்.
சேரி மக்களும் அவ்வாறே உணவு தந்தனர். அந்த உணவை விரும்பி சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டாள் ரேணுகாதேவி.
சேரி மக்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட பிறகு, “இனி எங்கே செல்வது? என்று தெரியாமல் புறப்பட்டாள். அடுத்தாக, சலவை தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு வந்தாள். இங்கு இருந்த சலவை தொழிலாளி ஒருவரின் மனைவி, ரேணுகாதேவிக்கு சேலை கொடுத்தாள்.
அந்த சேலையை உடுத்திக்கொண்டு சடலமாக இருக்கும் தன் கணவர் இருக்கும் இடத்திற்கே திரும்பி வந்தாள். தன் மகனான பரசுராமனிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினாள் ரேணுகாதேவி.
இதை கேட்ட பரசுராமன் கோபமாக, “கார்த்த வீரியனைக் கொன்று, அவனோடு 21 தலைமுறையிலுள்ள ஷத்திரியர்களையும் பூண்டோடு அழிப்பேன்.” என்று விண்ணுலகம் அதிரும்படி சபதம் செய்தான் பரசுராமன்.
இதை கேட்ட தேவர்களும் – அசுரர்களும் பயந்தார்கள். பரசுராமனின் சபதம் விபரீதமாக முடியும் என அஞ்சிய அவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டர்கள்.
ரேணுகாதேவிக்கு சிவபெருமான் கொடுத்த வரம்?
சிவபெருமான், ஜமதக்னி முனிவரை உயிர் பெற செய்தார். அத்துடன் ரேணுகாதேவியை பார்த்து, “நீ சக்திதேவியின் அம்சம். உன்னை வணங்கும் பக்தர்களை காப்பாற்று. நீ அனுபவித்த தீகொப்பளங்கள் அம்மைக் கொப்பளங்களாகும். இதற்கு மருந்து நீ அணிந்த வேப்பிலைதான் இனி அம்மை கொப்பளங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருந்து.
உன் பசியை போக்கிய வெல்லம், பச்சரிசிமாவு, இளநீர்தான் இனி உனக்கு நிவேதனமாகும். இதை யார் உனக்கு படைத்து வணங்குகிறார்களோ, அவர்களின் துன்பங்கள் நீங்கும். நீயே முத்துமாரியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பாய். உன் உடல் உன் கணவரோடு சொர்கத்திற்கு செல்லும். ஆனால் உன் தலை உன் பக்தர்களை காக்க சக்திதேவியின் பாதத்தின் கீழே இருக்கும்.” என்று சிவபெருமான், முத்துமாரியம்மன் என்கிற ரேணுகாதேவிக்கு வரம் தந்தார்.
பீடை விலகும் பரிகாரம் என்ன?
ஆடி மாதம் ரேணுகாதேவி என்ற முத்துமாரியம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்.
ஒருவேலை, உங்கள் வீட்டின் அருகில் முத்துமாரியம்மன் ஆலயம் இல்லை என்றால், சில அம்மன் ஆலயங்களில், அம்மன் பாதத்தின் கீழே ரேணுகாதேவியின் முகம் இருக்கும். அந்த அம்மனின் முகத்தை பார்த்து வணங்கி, அந்த அம்மன் மீது அணிவித்த வேப்பிலையை சிறிது வாங்கி பிரசாதமாக சாப்பிடுங்கள். அத்துடன் உங்கள் இல்லத்தில் இருக்கும் அம்மன் படத்தில் வைத்து வணங்குங்கள். தீராத கஷ்டங்களும் தீரும். உடல் பிணி நீங்கும்.
உங்கள் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது ஆலயத்திலோ வெல்லம், பச்சரிசிமாவு இந்த இரண்டையும் கலந்து மாவிளக்கு செய்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.
ஆடி மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலே வருடம் முழுவதும் நோய்நொடிகள் அண்டாமல் காப்பாள் முத்துமாரியம்மன். எடுக்கும் முயற்சி வெற்றி பெறவும், திருமண தடை நீங்கவும், சுபகாரியம் நடக்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் அருள் செய்வாள் முத்து மாரியம்மன்!.
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2016 bhakthiplanet.com All Rights Reserved