Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016!


Sri Durga Devi upasakar,

V.G.Krishnarau.

குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பொது பலன்கள் என்னென்ன?

வாசகர்களுக்கு வணக்கம்.

14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான், கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், நலமோடும் இருப்பார்கள். பொருளாதாரம் பெருகும். நம் நாட்டின் உயர்ந்த வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கும். பல துறைகள் முன்னேற்றம் அடையும். கலை உலகில் உள்ளவர்களுக்கு சற்று சிரமமான நேரம் இது. காரணம் சுக்கிரன், குரு இணைந்து இருப்பது நன்மை இல்லை.

சிம்ம சுக்கிரன் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அறிகுறியாகும். பொதுவாக விவசாயம் பெருகும். தண்ணீர் பஞ்சம் தீரும். லக்கினாதிபதியும், விரயாதிபதியும் இணைந்ததால் பல தலைவர்களுக்கு பிரச்னைகள் தேவையில்லாமல் உருவாகும். 6-ஆம் இடத்தில் உள்ள சனி, லக்கினத்தை பார்வை செய்வதால் அன்னியர்களின் பிரச்னைகள் தீர்க்க வழி வரும். கேது சாரத்தில் குரு வந்திருப்பதால், தங்கத்தின் விலை கூடும். செவ்வாய் வீட்டில் சனி இருக்கின்ற காரணத்தால் இரும்பு விலை சரியும்.

லக்கினத்திற்கு 11-ல் புதன், சூரியன், செவ்வாய், சந்திரன் இணைந்து இருப்பது நன்மையே. “சந்திர மங்கள யோகம்”, புத ஆதித்யாய யோகம்”, போன்றவை இருப்பதால் பல நன்மைகள் நாட்டில் நடந்தாலும், சுக்கிரனை 6-க்குரிய சனி பார்வை செய்வதை கவனிக்க வேண்டும். இதனால் பெண்களுக்கு சற்று சிரமமான நேரமாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் சிம்ம குரு வளமான வாழ்க்கையை எல்லோருக்கு தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன்.

சரி, இப்போது உங்கள் இராசிக்குரிய குரு பெயர்ச்சி பலன்கள் என்ன? என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

– ‘ஸ்ரீதுர்காதேவி உபாசகர்,

V.G.கிருஷ்ணா ராவ்

Meshamமேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 5-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். 5-ஆம் இடத்திலிருந்து உங்கள் ஜென்ம இராசியையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை செய்வதால் உடல்நலனில் இருந்த நோய் நொடிகள் நீங்கும். சொந்த வீடு, வாகனம், சொத்துக்கள் அமையும். சிலர் வீட்டை புதுப்பிக்கவும் செய்வீர்கள். அதேபோல, பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கவும் செய்வீர்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, மேல் படிப்பு தொடர வாய்ப்பு வரும். இத்தனை நாட்கள் சஞ்சலமாக இருந்த மனம், தெளிவு பெறும். உங்கள் இராசிக்கு ஆறாம் இடத்திற்கு 12-இல் குரு வந்திருப்பதால் கடன் பிரச்னை தீரும். ஆனாலும், பிறருக்கு ஜாமீன் தருவதில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். திருமண பாக்கியம் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடக்க யோகமான நேரம். பொதுவாக, “பஞ்சம குரு“ தனவந்தனாக்கக்கூடியது. அஷ்டம சனி திணறடித்து வந்தாலும் இந்த குரு பெயர்ச்சி, சனியின் உக்கிரத்தை சற்று தணிக்கும். கவலையே வேண்டாம். இனி அம்பாள் அனுகிரகத்தால் பொற்காலமே!.

reshabamரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 4-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். சென்ற ஆண்டு பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பனிப் போல நீங்கும். உங்கள் இராசிக்கு 8-ஆம் இடத்தையும், ஜீவனஸ்தானத்தையும், விரயஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால், வழக்கு வெற்றி பெறும். புதிய ஜீவனம் அமையும். உத்தியோக உயர்வு உண்டு. சிலருக்கு ஸ்தல யாத்திரை பயணங்கள் இருக்கும். பொதுவாக, அஷ்டம ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அதே சமயம் சில எதிர்பாரா செலவுகளும் தோன்றும். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கடன் கொடுக்கும் போதும் உஷாராக இருங்கள். வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்தால் தேவையில்லா பிரச்னைகள் வரும். புதிய வாகனம் வாங்கவும், குழந்தை பாக்கியம் அமையவும் குரு பகவான் அருள் புரிவார். 12-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் வீண் விரயங்கள் பெரும் அளவில் குறையும். சனியின் சஞ்சாரத்தால் “கண்ட சனி”யாக இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சியினால் தொல்லைகள் நீங்கும். ஸ்ரீதுர்காதேவி அருளால் யோக காலமே!.

Methunamமிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 3-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். 3-ஆம் இடம் கண்ட ஸ்தானம் என்று சிலர் பயமுறுத்துவர். என்னை பொறுத்தவரையில் குரு பார்வையே சிறந்தது என்பேன். அதன்படி உங்கள் இராசிக்கு சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றை குரு பகவான் பார்வை செய்கிறார். இதன் பலனாக, உங்களின் தொழில்துறைக்குள் கூட்டாளிகள் வந்து அமைவார்கள். ஃபிளாட், மனை, வீடு இப்படி அமர்க்களமாக எதிர்பாராமல் பாக்கியங்களை வாங்குவீர்கள். திருமணம் தள்ளிக்கொண்டே இதுநாள்வரை போனாதா? கவலையில்லை. இந்த குரு பெயர்ச்சியினால் வீட்டில் கெட்டி மேளம்தான். அயல்நாட்டில் வேலை வாய்ப்பும் அமையும். மனைவியால் யோகம் உண்டு. மனைவி வழியில் சில சொத்துக்கள் வரலாம். சகோதர-சகோதரிகளுடன் மனகசப்பு இருந்தாலும் நீங்கள் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். பாகப்பிரிவினையில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். அமைதியாக பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.  சுகஸ்தானத்திற்கு 12-ஆம் இடத்தில் குரு இருப்பதால் சற்று உடல்நலனில் கவனம் தேவை. முருகப்பெருமான் அருளால் அனைத்தும் ஜெயமே – இனி நற்காலமே!.

Katakamகடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 2-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். 6-ஆம் இடமும், அஷ்டமஸ்தானம், ஜீவனஸ்தானம் ஆகியவை குரு பார்வை பெறுவதால், இனி கடன் – ரோகம் நிவர்த்தி ஆகும். வழக்கு தொல்லை, விரோதம் மறையும். தீராத கடன்கள் தீரும். உங்களின் தொழில்துறை முன்னேற்றம் அடையும். தொழிலுக்கு தைரியமாக நல்ல முதலீடு செய்யலாம். தெய்வ தரிசனம் அதிகம் கிடைக்கும். முடிந்தவரையில் ஏழை-எளியோருக்கு தான-தர்மங்களை செய்து வந்தால், 2-ஆம் இட குரு, குலத்தை நன்கு காக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உங்கள் இராசிக்கு 5-ஆம் இடத்திற்கு 10-இல் குரு பகவான் வந்திருப்பதால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வாக்கு பலிதம் உண்டு. அதாவது நீங்கள் சொன்ன சொல் நிறைவேறும். அராசாங்க ஆதரவு, அராசாங்க துறையில் உயர் பதவியில் இருக்கின்றவர்களின் உதவிகள் தேடி வரும். இத்தனை நாட்கள் நல்ல உத்தியோகம் கிடைக்காமல் அலைந்துக் கொண்டு இருந்த உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க வாய்ப்பு வரும். மனைவியின் சொல்படி நடந்தால் பலன் உண்டு. காரணம் உங்கள் இராசிக்கு 2-ஆம் இடத்தில் குருவும், பஞ்சமத்தில் சனியும் யோகம் தரும். இனி சக்தி அருளால் சகலமும் வெற்றியே!

Simamசிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் ஜென்மத்தில் அதாவது, உங்கள் இராசியிலேயே (ஜென்ம குரு-வாக) பெயர்ச்சியாகிறார். ஜென்ம குரு தீங்கு என்றே பலர் சொல்வார்கள். ஆனால் நான் சொல்கிறேன், குரு பகவான் உங்கள் இராசிக்கு பஞ்சமஸ்தானத்தையும்,  சப்தமஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும் பார்வை செய்வதால், நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். ஆகவே இதன்படி குரு பகவான் “ஜென்ம குரு”-வாக அள்ளிக் கொடுக்க போகிறார். பெயர் – புகழ் தந்திடும். இதுநாள்வரையிலான போராட்ட வாழ்க்கை இனி தேரோட்டமான சுக வாழ்க்கைதான். நீங்கள் எண்ணுகிற எண்ணங்கள் கைக்கூடும். உடல்நலனில் இருந்த பிணிகள் நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம், புத்திர பேறு சிலருக்கு அமையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டு. வெளிமாநிலத்தில் சிலருக்கு லாட்டரி யோகமும் அடிக்கும். ஆனால் என்ன ஒரு விஷயம் என்றால் ஜென்ம குருவாக இருப்பதால் எதிலும் நிதானம், பொறுமை தேவைப்படும். குரு பகவான், 7-ஆம் இடத்தை பார்வை செய்தால் சன்னியாசியையும் சம்சாரி ஆக்கிவிடும். இது ஜோதிட விதி. இந்த விதிபடியே பலருக்கும் நடந்துள்ளது. ஸ்ரீகாளிகாம்பாள் அருளால் இனி உங்களுக்கு கற்கண்டு வாழ்க்கையே!.

Kanniகன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 12-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். விரயஸ்தானத்திற்கு வந்திருக்கும் குரு இனி என்ன செய்யுமோ? என்ற அச்சம் வேண்டாம். கேந்திராதிபதி கெட்டால் நல்லதே. உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தையும், ரோகஸ்தானத்தையும், அஷ்டம ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வை செய்வதால், வாட்டி வதைத்த ரோகம் தீரும். வட்டிக்கு வட்டி கட்டும் நிலை இனியில்லை. கடன் தீரும். வழக்கில் நிலவிய இழுப்பறி நீங்கும். இதுநாள்வரை உத்தியோகத்தில் இருந்த சுமையும் சற்று குறையும். மேலதிகாரி உங்கள் மீது அன்பு காட்டுவார். அலைச்சல் தீரும். தாய்-தந்தையின் உதவிகள் கிடைக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. தடைப்பட்ட கல்வி தொடரும். உறவினர் உதவி கிடைக்கும். தூர பயணங்கள் உண்டு. ஆனாலும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் தவிர்த்து அந்த விவகாரங்களை எறிந்து விடுங்கள். சந்தேகத்தை விட்டுவிட்டால் நன்மைகள் உண்டு. வீண் விவாதம் தவிர்க்கவும். உங்கள் இராசிக்கு 7-ஆம் இடத்திற்கு 6-ஆம் இடத்தில் குரு இருப்பதால் கூட்டாளிகள் விஷயத்தில் கவனம் தேவை. ஜாமீன் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பெருமாள் அருளால் அனைத்தும் நலமாக நடக்கும்!.

Thulaதுலா இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். 3-ஆம் இடத்தையும், பஞ்சமஸ்தானத்தையும், சப்தம ஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால், நினைத்தது நடக்கும். பொதுவாக, லாபஸ்தானத்தில் குரு இருப்பதால் பணத்திற்கு பஞ்சமில்லை. நேர்முக தேர்வுகளில் வெற்றிதான். புகழ்-கீர்த்தி ஏற்படும். கல்வி தேர்வுகளில் வெற்றி உண்டு. இழுத்துக்கொண்டிருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும். இதுநாள்வரை தடைப்பட்ட பல விஷயங்கள் நல்லபடி நிறைவேறும். பிள்ளைகளால் மகழ்ச்சியான வாழ்க்கை உண்டு. மனநிம்மதி ஏற்படும். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். மூதாதையர் சொத்து கைக்கு வரும். குடும்ப பகை தீரும். கூட்டாளியால் லாபம் உண்டு. தொழில்துறையில் முன்னேற்றம் உண்டு. கோயில் திருப்பணிகளை செய்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை எதிர்பாராமல் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்கள், அலங்கார பொருட்கள் அத்தனையும் வந்தடையும். ஆனாலும் உங்கள் இராசிக்கு 2-ஆம் இடத்தில் சனி இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாவடக்கம் அவசியம். வம்பு வராதபடி பேசுங்கள். ஸ்ரீதுர்கையின் அனுகிரகத்தால் அருமையான நேரமே!.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 10-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். 10-இல் குரு வந்தால் பதவி நாசம் என்று பலர் சொல்வார்கள். பதவியே இல்லாத சிலருக்கு எப்படி பதவியில் பிரச்னை வரும்?. ஆகவே பதவியில் இல்லாதவர்களும், பதவியில் இருப்பவர்களும் இந்த குரு பெயர்ச்சியை நினைத்து அச்சப்பட வேண்டாம். உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், ரோக ஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால், இவ்விடங்கள் பெரும் பலம் பெறுகிறது. பாதியில் நின்ற கல்வி தொடரும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உண்டு. தடைப்பட்டு வந்த திருமணம் நடக்கும். கண்ணில் காசையே காண முடியவில்லை என்று சொன்னவர்களுக்கு, இனி கை நிறைய பணம்தான். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு இவை அருமையாக அமையும். சுகஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் உடல்நல பிரச்னைகள் விலகும். ரோகத்தில் இருந்து எப்போது மீண்டு வருவது? என புலம்பி வந்தவர்கள் இனி நிம்மதி அடைவார்கள். ஆனால் நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. காரணம், உங்களுக்கு “ஜென்ம சனி”-யும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முருகப் பெருமான் அருளால் துயரம் எல்லாம் தூசுதான்!.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 9-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். பாக்கிய குரு, உங்கள் கஷ்டங்களை அறவே நீக்க போகிறார். உங்கள் ஜென்ம இராசியையும், கீர்த்தி ஸ்தானத்தையும், பஞ்சமஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால், நீங்கள் செய்யும் காரியம் வெற்றி அடையும். உடல்நலனில் நோய்நொடி நீங்கும். கேவலப்படுத்தியவர்களும் உங்களை இனி மரியாதையுடன் பார்ப்பார்கள். தெய்வ அனுகிரகத்தால் வேலை வாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வந்தடையும். இத்தனை நாள் உழைப்பு உங்களுக்கு இனிமேல் பலன் அளிக்கும். தூரத்து நண்பர்களால் பண உதவியும், உங்கள் தொழிலுக்கான உதவிகளையும் பெறுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேற்றுமைகள் நீங்கும். பெரியவர்களை மதித்து நடக்க தொடங்குங்கள். அவர்களின் ஆசி, உங்களை உச்சத்தில் உயர்த்தும். வைராக்கியம் அதிகரித்து அதனால் வீடு, மனை வாங்க வைக்கும். இருப்பினும் உங்கள் இராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி இருப்பதையும் கவனத்தில் கொள்ளவும். கடன் வாங்கினாலும் அதனை திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். விநாயகர் அருளால் செல்வ வளம் பெருகும்!.

Makaramமகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 8-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அஷ்டம குரு ஆட்டிப்படைக்க போகிறார் என அச்சப்பட வேண்டாம். குரு பார்வை செய்கிற இடத்தையும் கூட முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் இராசிக்கு விரயஸ்தானத்தையும், தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால், இனி கடந்த காலத்தை போல விரயங்கள் ஆகாது. விரோதங்களும் வராது. குடும்பஸ்தானத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் பொருளாதாரம் பெருகும். சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். உறவினர்களின் வருகையும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். வெளிநாட்டில் வியபாரம் பெருகும். வெளிநாட்டினரால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடல்நலனுக்காக விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டு தொழிலில் லாபம் உண்டு. நண்பர்களால் பலன் பெறுவீர்கள். காரணம், 11-ஆம் இடத்தில் சனி அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்வை செய்துக் கொண்டிருக்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இனி வேலை கிடைக்கும். கல்வியில் தடை இருந்து வந்தவர்களும் அத்தடை நீங்கி பட்டதாரி ஆவார்கள். 8-ஆம் இடத்தில் அமர்ந்த குரு உங்களுக்கு வாரி வழங்குவார். சமயபுர அம்மன் வழிபாடு செய்து வாருங்கள்!.

Kumbamகும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 7-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவர் உங்கள் இராசிக்கு 3-ஆம் இடம், உங்கள் ஜென்ம இராசி, லாபஸ்தானம் ஆகிய இடங்களை பார்வை செய்வதால், இதுநாள்வரையில் உங்களை மதித்து நடக்காதவர்கள் கூட உங்களை உயர்த்தி பேசுவார்கள். கடந்த காலத்தில் உறவினர்கள் யார்?, நண்பர்கள் யார்?, பணத்தின் மதிப்பு என்ன? என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டிருப்பீர்கள். இப்போது உங்களுக்கு 7-ஆம் இடத்து குருவாக வந்திருக்கிறார். தொட்டது துலங்கும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். சகோதர-சகோதரிகளின் உதவிகள், அரவணைப்பு கிடைக்கும். தூர பயணத்தால் வாபம் உண்டு. கடன்பட்ட சொத்து கைக்கு வரும். குட்டி போட்ட வட்டி இனி ஓடி விடும். கடன் தீரும். மனஉலைச்சல் அகலும். வீண் அலைச்சலும் தீரும். வேலை வாய்ப்பும், திருமணமும் கைக்கூடி வரும். தேவையில்லா செலவினங்களை மட்டும் கட்டுப்படுத்துங்கள். “இனி நமக்கு பிரமாதமான எதிர்காலம் உண்டு“ என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் 3-ஆம் இடத்தை பார்வை செய்யும் குரு பகவான் தருவார். உங்கள் இராசிக்கு 7-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியான குரு பகவான், ஸ்ரீதுர்காதேவியின் அனுகிரகத்தால் இனி இன்பங்களையே அருளுவார்!.

Meenamமீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 6-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். குருவின் பார்வைப்படும் இடங்களாக உங்கள் இராசிக்கு 10-ஆம் இடம், 12-ஆம் இடம் மற்றும் 2-ஆம் இடங்கள் அமைகிறது. பணத்திற்கு பஞ்சமிருக்காது. குடும்ப சிக்கல்கள் தீர்ந்துவிடும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகம் அமையும் யோகம் வந்துள்ளது. தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் உத்தியோகத்தில் சேர வாய்ப்பு உண்டு. சிலருக்கு சொந்த தொழில் அமையும். எதிர்பாரா யோகமும், பதவி உயர்வும் உண்டு. விரயங்கள் இனி குறையும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். மனசஞ்சலம் தீரும். விரோதங்கள் குறையும். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். பல ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வசித்து வந்தவர்களுக்கு இனி குடும்பத்துடன் ஒன்று சேர வழி பிறக்கும். உங்கள் இராசிக்கு 7-ஆம் இடத்திற்கு 12-ஆம் இடத்தில் குரு இருப்பதால் கூட்டாளியிடம் கவனமாக இருக்க வேண்டும். 6-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி வந்திருக்கிற குரு பகவான், தஸ்தானத்தை பார்வை செய்வதால், கை நிறைய பணம் புரளும், கவலை இல்லா வாழ்க்கையும் அமையும். அன்னை அருளால் எப்போதும் ஆனந்தமே!.

அனைவருக்கும் எங்கள் இனிய குரு பெயர்ச்சி நல்வாழ்த்துக்கள்!

Read in ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »