ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன? நீதிபதி தீர்ப்பு முழு விவரம்
பெங்களூரு,
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.
919 பக்க தீர்ப்பு
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.
விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-
* மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும், மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை கோர்ட்டுகளை போலவே, மேல்முறையீட்டு கோர்ட்டையும் திருப்திப்படுத்த வேண்டும்.
*விசாரணை கோர்ட்டின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த கோர்ட்டை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு கோர்ட்டின் வேலை. அந்த வகையில், விசாரணை கோர்ட்டுக்கு உள்ள அதே அதிகாரங்கள், மேல்முறையீட்டு கோர்ட்டுக்கும் உள்ளன.
தவறு
*அதன்படி, ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை கோர்ட்டின் முடிவுகள் தவறானவை, ஆதாரங்களுக்கு முரணானவை என்றே சொல்லத் தோன்றுகிறது.
*இந்த வழக்கில், வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை கோர்ட்டு பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.
கடன்
*குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம், கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை கோர்ட்டு செய்துள்ளது.
மேலும், கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக, 20 சதவீத செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20 சதவீத கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும், யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.
திருமண செலவு
*மேலும், (சுதாகரன்) திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை கோர்ட்டு மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளிதான் (ஜெயலலிதா) செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி, திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.
*திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.
*குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த பெரும்பாலான வாதங்களை விசாரணை கோர்ட்டு நிராகரித்துள்ளது. சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்கு சாதகமான முறையில் அரசுத்தரப்பு கேள்விகள் கேட்டுள்ளது.
*குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக இதை கருத வேண்டும். சாட்சிகள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.
குற்றச்சதியா?
*மேலும், முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு விசாரணை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.
*ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் விசாரணை கோர்ட்டு ஆராயவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கித்தான், அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.
*4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.
*ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.
சட்டப்பூர்வ வருமானம்
*ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும், பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.
*எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது. நோக்கம், சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.
*ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது, விசாரணை கோர்ட்டின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.
சொத்து குவிப்பு எவ்வளவு?
*குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.
*மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும். ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.
*குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும்.
*சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே, வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12 சதவீதமே ஆகும்.
அனுமதிக்கத்தக்க சொத்து குவிப்பு
*கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில், சொத்து குவிப்பு வருமானத்தை விட 10 சதவீதம்வரை இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
*சொத்து குவிப்பு வருமானத்தை விட 20 சதவீதம்வரை இருந்தால், அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
விடுதலை
*இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.
*முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.
*ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், ஜெயில் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.
*அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here