வரும் 21-ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்
புதுடெல்லி, மே.17 – நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி வருகின்ற 21-ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதால் மக்கள் வெறுப்படைந்தனர். இதனால் மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட பாரதிய ஜனதா நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் நடந்த பாரதிய ஆட்சிமன்றக்குழுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் பாரதிய ஜனதா வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட எல்.கே. அத்வானி கோபம் அடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறினார். அதேசமயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். இதனால் பாரதிய ஜனதாவில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆர். எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகிய இந்துமத அமைப்புகளால் பிளவு தவிர்க்கப்பட்டது.
இந்தநிலையில் 16-வது பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு 9 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கின. மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 9 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 6-வது கட்டமாக தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் மட்டும் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 2 தொகுதிகளை தவிர இதர 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. முன்னணியிலேயே வந்து அமோக வெற்றிபெற்றுள்ளது. தேசிய அளவில் பாரதிய ஜனதா அதிக அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் வெற்றிபெற்றாலே போதும். அதற்கும்மேலாக 283 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று தனித்து ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றிபெற்றுள்ளன. சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் இன்றோ அல்லது நாளையோ கூடலாம் என்று தெரிகிறது. கூட்டத்தில் முறைப்படி நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன் பின்னர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி பிரதமராக பதவி ஏற்றுக்கொள்கிறார். மத்தியில் பாரதிய கட்சியினர் மட்டும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்களா? அல்லது கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. பொதுவாக தனித்து ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகள் இடம்பெறுவதில்லை.
வதோதரா, வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட நரேந்திரமோடி இரண்டிலும் அமோக வெற்றிபெற்றுள்ளார். வெற்றி பெற்றவுடன் மோடி ஆமதாபாத்தில் உள்ள தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். நாட்டை வளர்ச்சி பாதையில் மோடி கொண்டு செல்வார் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா வெற்றியை அந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பி பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர் என்று கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel