நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
புதுடெல்லி,
பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
பாராளுமன்ற கட்சி கூட்டம்
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மோடி, பிரதமராக தேர்வு
அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.
பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.
ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு
அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.
தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.
நன்றி தெரிவித்தார் மோடி
எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.
இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.
ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு
இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
26–ந் தேதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா எங்கே?
பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.
வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel