பெண் என்ஜினீயர் கொலை
சென்னை, பிப். 26–
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 13–ந் தேதி மாயமான உமா மகேஸ்வரி 9 நாட்கள் கழித்து சிறுசேரி சிப்காட் வளாகத்திலேயே பிணமாக மீட்கப்பட்டார்.
உள்ளூர் போலீசார் வசம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக சிறுசேரியில் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
உமா மகேஸ்வரியின் மாயமான செல்போன், ஏ.டி.எம்.கார்டு மூலம் கொலையாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். இதில் ஒரு கொலையாளி உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த போது அவனது உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.
அந்த உருவத்தை வைத்து அந்தப் பகுதியில் விசாரித்த போது அவன் அங்கு வேலை பார்க்கும் கட்டிடத் தொழிலாளி என்று தெரியவந்தது. இதனால் உஷாரான போலீசார் கட்டிட தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது உமா மகேஸ்வரி கொலையில் தொடர்புடைய 2 கொலையாளிகள் சிக்கினர்.
இருவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பெயர் ராம் மண்டல், உத்தம் மண்டல்.
அதே பகுதியில் ஒரு நிறுவனத்தில் கட்டிட தொழிலாளர்களாக பணியாற்றி வந்தார்கள். இவர்கள் தங்களுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மேலும் 2 நண்பர்களுடன் சேர்ந்து உமா மகேஸ்வரியை திட்டம் போட்டு கற்பழித்து கொன்றனர்.
கைதான ராம் மண்டலும், உத்தம் மண்டலும் இன்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
உமா மகேஸ்வரி கொலையுண்ட அன்றே மேற்கு வங்காளத்துக்கு மற்ற 2 பேர் ரெயிலில் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க போலீசார் விமானத்தில் பறந்தனர்.
மேற்கு வங்காளத்தில் மால்டா பகுதியில் ரெயிலில் இருந்து இறங்கியதும் சென்னை போலீசார் கொலையாளிகள் 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் உடனடியாக சென்னை கொண்டு வரப்படுகிறார்கள். பிடிபட்ட 2 பேர் பெயர் உஜ்ஜல் மண்டல், இந்திரஜித் மண்டல்.
இவர்கள் பற்றிய மற்ற விவரங்களை இன்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிடுகிறார்கள்.
இதற்கிடையே மேற்கு வங்காள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய சென்னை கட்டிட மேஸ்திரிகள் 2 பேர் இன்று போலீசில் சிக்கினர்.
இவர்களுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லா விட்டாலும் அடைக்கலம் கொடுத்தல், மறைமுகமாக உதவுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:–
உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அன்றிலிருந்து சிறுசேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த பகுதியில் கட்டிட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது.
குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை போலீசார் முழுமையாக சேகரித்தனர். இதில் 2 பேர் மட்டும் (மேற்கு வங்கத்தில் பிடிபட்டவர்கள்) உமா மகேஸ்வரி மாயமான மறுநாளே தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மிகவும் கவனமுடன் தொடர்ந்தனர். மேற்கு வங்காளத்துக்கு தப்பிச் சென்ற 2 பேரின் நெருங்கிய நண்பர்கள் யார்? என்று விசாரித்தனர். அப்போதுதான் ராம் மண்டலும், உத்தம் மண்டலும் சிக்கினர். இவர்கள் 4 பேரும் வெளியில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதன் பிறகும் அவசரப்படாமல் செயல்பட்ட போலீசார், உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டை கொலையாளிகள் நிச்சயம் பயன்படுத்துவார்கள் என்று காத்திருந்தனர்.
இவர்கள் எதிர்பார்த்தது போலவே, கொலையாளிகளில் ஒருவன், உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க வந்த போது கேமராவில் சிக்கினான். இதுவும் போலீசுக்கு கை கொடுத்தது. இதன் பிறகே உமா மகேஸ்வரியின் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலையாளிகளை இறுதி செய்தனர்.
கொலையாளிகள் ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோரை போலீசார் சிப்காட் வளாகத்துக்குள் அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும், உமா மகேஸ்வரியை கொலை செய்தது எப்படி? என்பது பற்றி நடித்துக் காட்டினர். இன்று சிறையில் அடைக்கப்படும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கை துரிதமாக நடத்தி கொலையாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டணை வாங்கி கொடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இக்கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.மகேஸ் குமார் அகர்வால், வடக்கு மண்டல ஐ.ஜி.மஞ்சு நாதா, டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி, சூப்பிரண்டுகள் அன்பு (சி.பி.சி.ஐ.டி.), விஜயகுமார் (காஞ்சீபுரம்) ஆகியோர் கூட்டாக நடத்திய அதிரடி வேட்டையில் கொலையாளிகள் சிக்கியுள்ளனர்.
எப்போதும் இல்லாத வகையில் கொலை வழக்கு விசாரணைக்காக முதன் முதலாக ஆள் இல்லா விமானமும் துப்பு துலக்குவதற்காக பயன்படுத்தபட்டு தடயம் சேகரிக்கப்பட்டது.
உமா மகேஸ்வரியின் வாயை பொத்தி தூக்கிச் சென்று, மிகவும் கொடூரமாக கும்பலாக சேர்த்து கற்பழித்துக் கொன்ற காமூகர்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வாங்கி கொடுக்கும் அளவுக்கு போலீசார் வழக்கு விசாரணையின் போது திறமையுடன் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel