தமிழக பட்ஜெட் வரும் 13-ஆம் தேதி தாக்கல்
வரும் நிதியாண்டுக்கான (2014-15) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பிப்ரவரி 13- ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக, தமிழக சட்டப் பேரவையை அன்றைய தினம் காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியுள்ளார்.
இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்காவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை வரும் 13- ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் மீது விவாதம் நடைபெறும்.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, பிப்ரவரி 14- ஆம் தேதியில் இருந்து, 3 நாள்கள் விடுமுறை விடப்படும் எனவும், பிப்ரவரி 17- ஆம் தேதியில் இருந்து 5 நாள்கள் (பிப். 21 வரை) பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற வாய்ப்பிருப்பதாக சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்: நடப்பு நிதியாண்டில் (2013-14) பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதிக்கான ஒப்புதலை பேரவையில் பெறுவதற்கான துணை நிதிநிலை அறிக்கை வரும் 20-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில், ஆண்டு முழுவதும் ஒவ்வொரு துறையிலும் அரசின் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெற போதிய கால அவகாசம் இல்லை. இதனால், வரும் நிதியாண்டுக்கான (2014-15) முதல் காலாண்டுக்கு அரசின் செலவுகளுக்குத் தேவைப்படும் நிதியைப் பெற பேரவையின் அனுமதி கோரப்படும். இதற்காக தனியாக ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.
துறை வாரியாக செலவினங்கள்: இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதற்காக, துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான பேரவை கூட்டத் தொடர் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் என்று பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிதிநிலை அறிக்கையில் மக்களைக் கவரும் வகையிலான புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
வரிகள் இல்லாத சலுகை பட்ஜெட்: கடந்த ஆண்டைப் போன்றே புதிய வரிகள் இல்லாத, சலுகை பட்ஜெட்டாகவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வணிகவரிகள் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel