டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும்
டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொதுமேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில், சென்னை மாநகரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால், கேபிள் டி.வி. இணைப்பு எந்த நேரத்திலும் துண்டிக்கப்படும்’ எனக் கூறியுள்ளது.
உரிமம் கேட்டு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவது சட்டவிரோதமாகும். எனவே டிஜிட்டல் உரிமம் கேட்டு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செயல்பாட்டில் தலையிடக்கூடாது என்று மத்திய அரசுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
இடைக்கால உத்தரவாக, கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் பி.வில்சன், வக்கீல் சி.கனகராஜ், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் அட்வகேட்ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, வக் கீல் அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி.தனபாலன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் லைசன்ஸ் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராய் பரிந்துரை செய்துள்ளதால், இதுவரை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் இந்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்றும் நாடு முழுவதும் ஒரே விதமான கொள்கையைத்தான் டிராய் எடுத்துள்ளது என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மத்திய அரசு 2008-ம் ஆண்டு ‘அனலாக்’ லைசன்ஸ் வழங்கியுள்ளது என்றும் இந்த உரிமம் இன்று வரை செயல்பாட்டில் உள்ளது என்றும் டிஜிட்டர் உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 5-7-2012 அன்று விண்ணப்பம் செய்தது என்றும் ஆனால், இதுவரை அந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது
ஆனால், டிஜிட்டல் உரிமம் கேட்டு தமிழக அரசு வழங்கிய விண்ணப்பத்தை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பரிசீலிக்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. மத்திய அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால், பாதிக்கப்படப்போவது பொதுமக்களாகிய நுகர்வோர்தான்.
எனவே இணைப்பு துண்டிக்கப்படும் என்று டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தடை விதிக்கிறேன். அதேநேரம், தமிழக அரசு உரிமம் கேட்டு கொடுத்துள்ள விண்ணப்பத்தை மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறேன். இந்த மனுவுக்கு மத்திய தகவல் தொடர்புதுறை, டிராய் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel