இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாதம்: வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்ட அறிவிப்பு
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுத்து விட்டது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த 39 வயது தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவயானிக்கு அவமரியாதை
வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்தும் போலீசார் அவமரியாதை செய்தனர்.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி பதிலடி நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகள் பறிக்கப்பட்டன. மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்தியா சார்பில் வற்புறுத்தப்பட்டது.
மன்னிப்பு கேட்க மறுப்பு
ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துவரும் அமெரிக்க அரசு, இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கவும், தேவயானி மீதான வழக்கை வாபஸ்பெறவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த தகவலை நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மேரி ஹர்ப் வெளியிட்டார்.
அப்போது அவர், ‘‘தூதர் தேவயானி மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. எனவே எந்த வகையிலும் அவற்றை வாபஸ் பெற முடியாது. அத்துடன் உண்மையில் இது சட்ட அமலாக்கம் தொடர்பான பிரச்சினையாகும்’’ என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இருந்து தேவயானி தண்டனையின்றி விடுவிக்கப்படுவாரா? என்று கேட்டதற்கு, ‘‘இல்லை’’ என்று அவர் பதில் அளித்தார். தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மேரி ஹர்ப் கூறியதாவது:–
சல்மான் குர்ஷித்துடன்…
‘‘சம்பந்தப்பட்டவர்கள் புகாரை வாபஸ் பெற்றால், பெண் தூதர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுமா? என்றும் எனக்குத் தெரியாது. இதுபோன்ற புகார்களை நாங்கள் மிகக் கடுமையானதாக கருதுகிறோம். மேலும் அவர் மீது வழக்கு தொடருவதா, இல்லையா? என்பது நாங்கள் எடுக்க வேண்டிய முடிவு அல்ல.
இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் கூறியிருப்பது போல் அவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. சல்மான் குர்ஷித்தை தொடர்பு கொள்ள விரும்பியதாக ஜான் கெர்ரி கூறியதாக சில ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகி இருப்பதாகக் கருதுகிறேன். ஆண்டு இறுதி விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருக்கும் அவர், விடுமுறை முடிந்துதான் வாஷிங்டன் திரும்புவார்.
கூடுதல் அந்தஸ்தால் பாதுகாப்பு?
தேவயானியை ஐ.நா.சபையின் இந்திய நிரந்தர தூதரக பிரதிநிதியாக நியமித்து இருப்பது குறித்து இந்திய அரசிடம் இருந்து முறைப்படி தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை. இந்த கூடுதல் அந்தஸ்து மூலம் கிடைக்கும் விசேஷ பாதுகாப்பு முன்தேதியிட்டு அமலுக்கு வராது. பொதுவாக கூறுவதானால் தேவயானிக்கு கூடுதல் அந்தஸ்து வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமை, எந்த தேதியில் அந்தஸ்து மாற்றம் வழங்கப்பட்டதோ அன்றைய தேதியில் இருந்துதான் அமலுக்கு வரும்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் தொடர் கடிதங்கள் மற்றும் தகவல்களை அமெரிக்கா பொருட்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இந்த வழக்கின் சட்டபூர்வ தன்மை காரணமாக இதற்கு மேல் இதில் விரிவாக எதுவும் என்னால் கூற முடியாது. இந்த விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பது எங்களுக்கு தெரியும். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து இருப்பதுடன் மேற்கொண்டு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை குறித்தும் தகவல் தெரிவித்து வந்துள்ளோம்.
விசா வழங்கியது நியாயம்தான்
தேவயானியின் வேலைக்கார பெண் சங்கீதா ரிச்சர்டின் குடும்பத்தினருக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா அரசு எடுத்த முடிவு நியாயம்தான். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுடன் அவருடைய குடும்பத்தினர் ஒன்று சேருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு கட்டமாக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் அவருடைய குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து நாங்கள் அறிவோம். ஆனால், அதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது. என்றாலும் இதுபோன்ற செயலை கடுமையானதாக கருதுகிறோம்’’.
இவ்வாறு மேரி ஹர்ப் கூறினார். மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர், சங்கீதா ரிச்சர்டின் மாமனார் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வருவது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel