தஞ்சை பெரியகோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும்பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது
தஞ்சாவூர்
தஞ்சை பெரியகோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும்பணி சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கியது. 3 நிலைகளில் அமைக்கப்படும் இந்த தேரில் 231 சிற்பங்கள் பொருத்தப்படுகிறது.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும் என சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து புதிய தேர் செய்வதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையால் அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்வதற்கான மரங்கள் சேகரிக்கப்பட்டு தேர்செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தேர் செய்யும்பணி தொடக்கம்
இந்த தேர் செய்யும் பணியின் முதற்கட்டமாக பூதப்பார் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் குடிசை மாற்று வாரிய தலைவரும், பெரியகோவில் சதயவிழாக்குழு தலைவருமான தங்கமுத்து, ரெங்கசாமி எம்.எல்.ஏ., அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் செந்தில்குமார், ஞானசேகரன், குமரேசன், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர் அசோகன், தஞ்சை நகரசபை துணைத்தலைவர் மணிகண்டன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோபால், கவுன்சிலர்கள் சுந்தரவடிவேல், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து முதல் நிலையில் தேர்பொருத்தும் பணியினை ஸ்தபதி அரும்பாவூர் வரதராஜன் மேற்கொண்டார். முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன், துபாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்திரன், பிட்சாணமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி சிறப்பங்களும், நான்கு பகுதியிலும் குதிரை மற்றும் யாளி உருவங்களும் பொருத்தப்பட உள்ளன.
231 சிற்பங்கள்
இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் வரை 16½ ஆடி உயரம் கொண்டது ஆகும். பலகை மட்டம் 12¼ அடி ஆகும். தேவாசன மட்டம் 2¼ அடி ஆகும். சிம்மாசன மட்டம் 2¼ அடி ஆகும். ஓவ்வொரு சக்கரமும் தலா 6½ அடி உயரம் ஆகும். அச்சு நீளம் 14½ அடி ஆகும். இந்த தேருக்கான இரும்பு சக்கரங்கள் மற்றும் இருப்பு அச்சு திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் செய்யப்படுகிறது. இந்த தேரில் 231 சிற்பங்கள் பொருத்தப்படுகின்றன.
160 மணிகளுடன், சிவன் கோவில் ஐதீகம் தொடர்பான சிற்பங்கள்
தேரினை வடிமைக்கும் ஸ்தபதி அரும்பாவூர் வரதராஜன் கூறுகையில், நான் இதுவரைக்கும் 31 தேர்களை செய்துள்ளேன். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள தேர் தான் நான் செய்த தேர்களில் அதிக உயரம் கொண்டது. அந்த தேர் 21½ அடி உயரம் உடையது ஆகும். தஞ்சை பெரியகோவிலுக்கு செய்யப்படும் தேர் 32–வது தேர் ஆகும். இந்த தேர் செய்யும் பணியில் கடந்த 3 மாதமாக 15 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளோம். இன்னும் 5 மாதங்களில் தேர் பணிகள் முடிவடையும். தற்போது தேர் பொருத்தப்படும் பணிகள் தொடங்கி உள்ளது.
3 நிலைகளாக தேர் பொருத்தப்படுகிறது. முதல் நிலையில் 1½ அடி உயரம் கொண்ட 40 சிற்பங்களும், 2–வது நிலையில் 2¼ அடி உயரம் கொண்ட 56 சிற்பங்களும், 3–வது நிலைகளில் 1½ அடி உயரம் உடைய மீதி சிற்பங்களும் என 231 தேர் சிற்பங்கள் (பொம்மை) பொருத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சிவன் கோவில் ஐதீகம் தொடர்பான சிற்பங்கள் ஆகும். தற்போது முதல் நிலைக்கான சிற்பங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இது தவிர தேரின் 4 பகுதிகளில் 160 மணிகள் அமைக்கப்படுகின்றன’’என்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel