அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேச்சு
சென்னை, டிச. 12–
சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் சாதி, மத மோதல்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார்.
இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் பங்கேற்று பேசியதாவது:–
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்து நேற்று நாம் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம். இன்று நாம் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.
எனது தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்கள், புதிய முயற்சிகள் அமல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. எனது அரசின் திட்டங்கள் சாதாரண ஏழை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி பற்றி பார்க்கலாம்.
தேசிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மாநில பொருளாதார வளர்ச்சியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 2012–ல் ஏற்பட்ட கடும் வறட்சி, நமது மாநிலத்தின் வளர்ச்சியை குறிப்பாக வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்களை கடுமையாக பாதித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை சீரமைப்பு செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நமது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் உயர் மட்ட அளவுக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.
மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் நாம் எடுத்து வரும் அயராத நடவடிக்கைகள் காரணமாக 2013–14–ம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்கை எட்டி சாதனை படைக்க முடியும் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் நான் கடை பிடித்து வரும் வளர்ச்சி மாதிரியானது, உட்படுத்தப் பட்ட, ஒருங்கிணைந்த வளர்ச்சியாகும். இதன் மூலம் சமமான மேம்பாட்டை பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருங்கிணைந்த, உட்படுத்தப் பட்ட வளர்ச்சி என்பது முக்கியமானது.
இந்த வளர்ச்சிப் பணியில் யார் ஒருவரும் தங்களை உட்படுத்தாமல் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வது மாநில அரசின் கடமையாகும். அதாவது அரசின் நலத்திட்டங்கள், ஒவ்வொன்றும் சமுதாயத்தில் மிகவும் மோசமான கீழ் நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்கள், மலை வாழ் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், குழந்தைகள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சென்று சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பொறுப்பு உள்ளது.
எனவே அரசின் நலத் திட்டங்கள் ஏழை மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கலெக்டர் என்றதும் மக்கள் மனதில், அரசு செயலை வலுக்கட்டாயமாக செய்பவர் என்ற எண்ணம் தான் உள்ளது. ஆனால் கலெக்டர்கள் என்பவர்கள் அரசின் சார்பாக தரும சிந்தனையுடன், பரந்த உள்ளத்துடன் நற்செயலாற்று பவராக இருக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் என்பவர் நல அதிகாரியாக செயல்பட வேண்டும். இயற்கை பேரழிவு மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருபவராக இருக்க வேண்டும்.
எல்லா மாவட்ட கலெக்டர்களும் இத்தகைய தோற்றத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதையே நான் எதிர்பார்க்கிறேன்.
இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் முக்கிய அம்சங்கள் மீது நீங்கள் அர்த்தமுள்ள, ஆக்கப் பூர்வமான விவாதத்தை மேற்கொள்வீர்கள் என்று கருதுகிறேன்.
எனது தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு எப்படி சென்று சேர்ந்தது என்பதையும் உங்கள் மூலம் தெரிந்து கொள்ள உள்ளேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel