உலக செஸ் போட்டியில் கார்ல்செனை எதிர்கொள்ள தயார் ஆனந்த் பேட்டி
சென்னை,
உலக செஸ்போட்டியில் கார்ல்செனின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனக்கு உதவியாக இருக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
ஆனந்த் பேட்டி
நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்குகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளிகளை எட்டுகிறார்களோ? அவர்களுக்கு மகுடம் சூடப்படும். 1972–ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பாப்பி பிஷர்–போரிஸ் ஸ்பாஸ்கி இடையிலான போட்டிக்கு நிகராக ஆனந்த்–கார்ல்சென் இடையிலான மோதல் உலகம் முழுவதும் செஸ் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் 43 வயதான ஆனந்தும், 22 வயதான கார்ல்செனும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ‘சொந்த ஊரில் விளையாட இருப்பது பெருமையும், சந்தோஷமும் அளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
பின்னணியில் இருப்பவர்கள்
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக சிறப்பாக தயாராகி உள்ளேன். இதற்காக சில மாதங்களாக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டேன். இந்த போட்டிக்கு தயார் நிலையில் இருக்கிறேன். வெற்றியுடன் முடிக்கும் வகையில் தாக்குதல் பாணி ஆட்டத்திற்கும் தயாராக உள்ளேன். ஆனால் முதலில் ஆட்டம் எப்படி நகர்கிறது என்பதை பார்க்க வேண்டும்.’ என்றார்.
இது போன்ற பெரிய போட்டிகளுக்கு ஒரு வீரர் தனியாக தயாராவதில்லை. அவர்களுக்கு என்று ஒரு அணியை உருவாக்கிக் கொள்வார்கள். அதில் பல முன்னணி வீரர்களை சேர்த்து கொண்டு அவர்களுடன் பல வகைகளில் முட்டி மோதி தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்வார்கள். அந்த வீரர்களும் அவருக்கு தங்களுக்கு தெரிந்த பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார்கள். எதிரணி வீரரின் பலம், பலவீனம் என்ன, அதற்கு ஏற்ப எந்த மாதிரியான ஆட்ட முறையை கையாள்வது, காய் நகர்த்தலில் புதுப்புது யுக்திகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் போட்டிக்கு தயாராகும் இந்த முறையில் இடம் பெற்றிருக்கும்.
இப்படி ஆனந்த் தனது அணியில் யார் யாரை சேர்த்து பயிற்சியில் ஈடுபட்டார் என்று நிருபர்கள் கேட்ட போது, அவர் தனது கூட்டணியின் பெயரை வெளியிட்டார்., இந்தியாவின் சசிகிரண், சண்டிபன் சந்தா, போலந்தின் ரோடோஸ்லாவ் வோஜ்தஸ்செக், ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் பீட்டர் லிகோ ஆகியோர் தனது பயிற்சிக்கு துணை நிற்பதாக குறிப்பிட்டார்.
இதில் பீட்டர் லிகோ, ஆனந்த்துடன் சில போட்டித்தொடர்களில் நேருக்கு நேர் விளையாடி கடும் சவால் அளித்தவர். போட்டி சமநிலையில் இருந்து ஜெயிப்பது யார்? என்று கணிக்க முடியாத சூழல் வரும் போது, அதை தனக்கு சாதகமாக திருப்புவதில் பீட்டர் லிகோ கெட்டிக்காரர். அவர் நிச்சயம் ஆனந்துக்கு பக்கபலமாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.
கார்ல்சென் மறுப்பு
பொதுவாக போட்டிக்கு முன்பாக தங்களது பயிற்சி உதவியாளர்களின் விவரங்களை எந்த வீரரும் பகிரங்கமாக சொல்வதில்லை. ஆனால் ஆனந்த் வெளிப்படையாக கூறியது ஆச்சரியப்படுத்தியது.
பேட்டியின் போது உடன் இருந்த மார்க்னஸ் கார்ல்செனிடம் உங்களது அணியில் யார்–யார் உள்ளனர் என்று கேட்ட போது, அந்த ரகசியத்தை வெளியிட முடியாது என்று கூறி மறுத்து விட்டார். ஆனந்த் தனது பயிற்சி அணியினரின் பெயரை வெளிப்படையாக சொன்னதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் நான் அந்த ரகசியத்தை கூறமாட்டேன். உலக போட்டிக்காக இங்கு அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுவரை அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.
தனது உதவியாளர்கள் பட்டியலை கார்ல்சென் வெளியிட மறுத்தது குறித்து ஆனந்திடம் கேட்ட போது, ‘உண்மையில் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஒரு கேள்விக்கு என்னால் நேர்மையாக பதில் சொல்ல முடியும். ஆனால் சொன்ன விஷயம் முழுவதும் உண்மையா இல்லையா? என்பது உங்களுக்கு ஒரு போதும் தெரியாது. கார்ல்செனுக்கும் அது பொருந்தும். இது தொடர்பான எல்லா உண்மைகளையும் பற்றி அவர் நம்ப மாட்டார்’ என்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet