வங்கக் கடலில் புயல் சின்னம்
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 650 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிலை கொண்டிருப்பதால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. சென்னையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உருவான தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னைக்கு 650 கிலோ மீட்டர் தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு 680 கிலோ மீட்டர் தூரத்திலும் தற்போது அது நிலைகொண்டுள்ளது.
இது வியாழக்கிழமையன்று மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நாகப்பட்டினம் – சென்னை இடையே வெள்ளி இரவு அல்லது சனிக்கிழமை காலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் தாழ்வு மண்டலம் புயலாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
நாளை முதல் கனமழை: இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையோ அல்லது 250 மில்லி மீட்டருக்கும் அதிகமான கன மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கைக் கூண்டு:
சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அருகில் உள்ளது என்பதைக் குறிக்கும் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி துறைமுகங்களிலும் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
தாழ்வு மண்டலம் தீவிரமடையும் பட்சத்தில் துறைமுகங்களில் புயல் அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படும் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னறிவிப்பு: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்யும். மாநிலத்தின் பிற மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet