பீகார் மாநிலம் பாட்னாவில் பயங்கரம்: நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 5 பேர் பலி; 83 பேர் படுகாயம்
பாட்னா,
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
பிரமாண்ட பொதுக்கூட்டம்
முதல்–மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. காலையிலேயே மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு ரெயில்கள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் தொண்டர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
நரேந்திர மோடிக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால் பொதுக்கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தொடர் குண்டு வெடிப்பு
என்றாலும் பலத்த பாதுகாப்பையும் மீறி பாட்னா நகரில் நேற்று காலை அடுத்தடுத்து 6 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு குண்டு பாட்னா ரெயில் நிலையத்திலும், மற்ற குண்டுகள் பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதியிலும் வெடித்தன.
இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 5 பேர் பலி ஆனார்கள். மேலும் 83 பேர் காயம் அடைந்தனர்.
ரெயில் நிலையத்தில் ஒருவர் சாவு
இதில் முதல் குண்டு வெடிப்பு, பொதுக்கூட்ட மைதானத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்தில் காலையில் நடந்தது. ரெயில் நிலையத்தின் 10–வது நடைமேடையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையின் கதவு அருகே குண்டு வெடித்தது.
இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு அங்குள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து விட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார்.
இந்த குண்டு வெடிப்பு பற்றிய தகவல் கிடைத்தும், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 2 வெடிகுண்டுகளை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். அந்த குண்டுகளை செயல் இழக்கச் செய்தபோது பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
மைதானத்தில் குண்டு வெடித்தது
இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் பொதுக்கூட்டம் நடைபெற்ற பிரமாண்டமான காந்தி மைதானத்திற்கு வெளியே எல்பின்ஸ்டன் சினிமா தியேட்டர் அருகே அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன. சற்று நேரத்தில் மைதானத்தின் உள் பகுதியில் ஓர் இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது.
இதனால் மைதானத்தில் கூடி இருந்தவர்கள் பீதி அடைந்து சிதறி ஓடினார்கள். பொதுக்கூட்ட மேடைக்கு தலைவர்கள் வரத்தொடங்கிய நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
4 பேர் பலி
இந்த குண்டு வெடிப்புகளில் 4 பேர் பலி ஆனார்கள். குண்டு வெடிப்புகளிலும், பதற்றத்தின் காரணமாக சிதறி ஓடியதால் கீழே விழுந்ததிலும் 83 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் குண்டு வெடித்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பு படையினரும் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் குண்டு வெடித்த இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது வெடித்த 6 குண்டுகளும் சக்திகுறைந்த வெடிகுண்டுகள் என தெரிய வந்தது.
4 பேரை பிடித்து விசாரணை
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பொதுக்கூட்டம் பாதிக்கப்படவில்லை. கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. நரேந்திர மோடியும், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். தொண்டர்களும் பெரும் அளவில் கூடி அவர்கள் பேச்சை கேட்டனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக பாட்னா நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக பாட்னா சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனு மகராஜ் தெரிவித்தார்.
காலை 9.30 மணி முதல் 12.45 மணி வரை இந்த தொடர் குண்டு வெடிப்பு நடந்ததாக பீகார் மாநில டி.ஜி.பி. அபயானந்த் தெரிவித்தார். ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்த நபர் தப்பி ஓட முயன்ற போது மடக்கி பிடிக்கப்பட்டதாகவும், அவரிடம் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், அந்த நபரே வெடிகுண்டை வைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
யார் காரணம்?
குண்டு வெடிப்பில் பலியானவர்களில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அபயானந்த், காந்தி மைதானத்தின் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 குண்டுகளும், காந்தி சிலை மற்றும் இரட்டை கோபுரம் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த தலா 2 குண்டுகளும் கைப்பற்றப்பட்டு செயல் இழக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் வெடிகுண்டுகளில் ‘டைமர்’ பொருத்தப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு யார் காரணமாக இருக்கக்கூடும்? என்று கேட்டதற்கு; விசாரணைக்கு பின்னர்தான் அது தெரியவரும் என்று அபயானந்த் பதில் அளித்தார்.
பதற்றம்
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாட்னாவில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காந்தி மைதானத்தின் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 குண்டுகளும், காந்தி சிலை அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 குண்டுகளும் கைப்பற்றப்பட்டு செயல் இழக்க வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet