திருமணம், சந்தான, கல்வி தடைகள் நீக்கும் மல்லீகேஸ்வரர்-மண்ணடி
Written by Niranjana
அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீகேஸ்வரர் திருக்கோயில், மண்ணடி- சென்னை
கோவில் உருவான கதை
தொண்டை நாட்டில் மக்கள் தொகை அதிகம் ஆனதால், நாட்டை விரிவாக்கம் செய்ய தீர்மானித்த மன்னர் தொண்டைமான், காடாக இருக்கும் இடங்கள் சிலவற்றை தேர்தெடுத்து அதனை ஒரு ஊராக உருவாக்க கட்டளையிட்டார். அதன்படி மல்லிகை செடிகள் அதிகம் காணப்பட்ட ஒரு இடத்தில் சீரமைக்கும் பணியில் அரசு பணியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அப்போது ஒரு இடத்தை தோண்டும் போது, பூமிக்குள் இருந்து அற்புதமான ஓசை கேட்டது. அந்த ஓசையை கேட்ட காவலர்கள் அந்த இடத்தை பக்குவமாக தோண்டி பார்த்தார்கள். அந்த இடத்தில் பூமிக்குள் அழகான கோவில் ஒன்று புதைந்து இருப்பதை கண்டார்கள்.
பூமிக்குள் கோயில் ஒன்று புதைந்து இருப்பதை கண்ட பணியாளர்கள் உடனே இதை பற்றி அரசருக்கு தகவல் சொன்னார்கள். மண்ணுக்குள் கோவிலா? என்று ஆச்சரியத்துடன் அரசரும் ஊர்மக்களும் வந்து பார்த்தார்கள். அது ஒரு சிவன் கோயில் என தெரிந்தது. அரசர் கோயிலுக்குள் சென்று பார்க்கும் வகையில் பூமி தோண்டப்பட்டது. புதைந்து கிடந்த கோவிலுக்குள் அரசருடன் சென்று பார்த்த பணியாளர்களும் ஊர்மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
ஆம்… எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போ கட்டப்பட்டு பின் பூமியில் முழுவதுமாக புதைந்து போன இந்த சிவன் கோயில் கருவறையில் இருக்கும் இறைவனான சிவலிங்கத்தின் மேல் மல்லிகை மாலை சூடப்பட்டு இருந்தது. அந்த இடம் முழுவதும் மல்லிகை நறுமணம் வீசியது. மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்த சிவன் கோயில் சிவலிங்கத்தின் மேல் மாலையாக அணிவிக்கப்பட்டு இருக்கும் அத்தனை மல்லிகை பூக்களும் வாடாமல் அப்படியே இருந்தது. சிறந்த சிவபக்தரான மன்னர் தொண்டைமான், பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். அன்றிலிருந்து இறைவன் மல்லீஸ்வரர் என்றும் மல்லீகார்ஜுனர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஊரில் மண்ணுக்கு அடியில் சிவாலயம் புதைந்து இருந்து வெளிப்பட்டதால் இந்த ஊருக்கு “மண்ணடி” என்று பெயரும் வந்தது.
தடைபடும் திருமணத்தை நடத்தி வைக்கும் மல்லீகேஸ்வரர்
இங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள்காட்சி தரும் மல்லீஸ்வரரை 45 நாள் மல்லிகை பூ கொடுத்து வணங்கினால் அவர்களின் வாழ்க்கையில் என்றென்றும் ஏறுமுகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இப்படி தினமும் தொடர்ந்து 45நாள் மல்லிகை பூக்களை இறைவன் அருள் இல்லாமல் தர முடியாது. ஏதாவது ஒரு காரணத்தால் இந்த சிவசேவை தடைப்படுகிறது என்கிறார்கள் பக்தர்கள். “…அவனருளாலே அவன்தாள் வணங்கி…” என்றாரே மாணிக்கவாசகர். அது எவ்வளவு பெரிய உண்மையான வாசகம் என்பதை 45நாள் மல்லீகேஸ்வரருக்கு மல்லிகை பூக்கள் தருவதன் மூலமாக நாம் அறிந்துக்கொள்ள இயலும்.
யோக பகவான்
வாழக்கை யோகமாக அமைய, “யோகபகவான்” அருள் வேண்டும். யோக பகவான் அருள் இருந்தால்தான் ஸ்ரீமகாலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
அத்தகைய ஸ்ரீமகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்க செய்ய வெண்டும் என்றாலும், யோக பகவானின் ஆசி கிடைக்க வேண்டும் என்றாலும், சிவபெருமான் நம் மீது கருணை காட்ட வேண்டும். நம் அன்பையும் பக்தியையும் சிவபெருமான் ஏற்றுக்கொண்டால்தான் எண்ணற்ற நன்மைகள் நம் வாழ்வில் நடக்கும். இங்குள்ள அம்மனின் பெயர் ஸ்ரீமரகதாம்பாள். மரகதவல்லி என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு. பெயருக்கேற்ற வடிவில் மரகதபச்சையில் பக்தர்களுக்கு அருள் தருகிறாள் அன்னை. இந்த அம்மனை அன்புடன் வணங்கினால், பக்தர்களின் வாழ்க்கை எப்போதும் செழுமையாகவே இருக்கும்.
கல்வி தடை நீக்கும் சரஸ்வதி
இந்த சிவாலயத்தில் இருக்கும் சரஸ்வதி தேவிக்கு ஏலக்காய் மாலை அணிவித்தால், கல்வி தடை விலகும். கல்வி ஞானம் ஏற்படும். அதனால் பரீட்சை சமயத்தில் இந்த ஆலயத்தில் இருக்கும் சரஸ்வதி தேவிக்கு ஏலக்காய் மாலையை மாணவ-மாணவியரின் அணிவிப்பார்கள். இதனால் கல்வி தாய் சரஸ்வதியின் ஆசி தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிறது என்பது மாணவ-மாணவியரின் நம்பிக்கை.
சிவராத்திரி பூஜை
சிவராத்திரி அன்று இந்த சிவாலயத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் இங்கே பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு தேனும்-மல்லிகை பூக்களும் தந்தால், விசேஷமான பலன்கள் ஏற்படும். இந்த ஆலயத்தில் சிவனும்-சக்தியும், வேம்பு-அரச மரவடிவத்தில் வளர்ந்திருக்கிறார்கள். இந்த ஸ்தல மரத்தை 9 தடவை சுற்றி வந்து வணங்கினால், அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீகேஸ்வரரின் ஆசி கிடைக்கும். இதனால் தடைப்படும் திருமணம் இனிதாக நடைப்பெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சந்தான பாக்கியம் அமையும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved