Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

பாத்ரும் எப்படி அமைய வேண்டும்? எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை?

bathroom vastuWritten by Vijay Krishnarau Gvijay krishnarao

பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.  

ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம்.

தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும்.

வடகிழக்கு மூலையில் குளியலறையும் அதற்கு அடுத்ததாக கழிவறையும் அமைந்துவிட்டால் வளமான பலன்களை அது தடையின்றித் தரும்.

அதிலும் வடகிழக்கில் வெறும் குளியலறை மட்டுமே அமைந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் ஆண்மகன் நல்ல அந்தஸ்துகளுடன் இருப்பான். குடும்பத்தில் எப்போதும் வறுமை தலை காட்டாது.

கிழக்கு மையத்தில் அமைந்த குளியலறையும் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையைத் தரும். மருத்துவச் செலவுகளைக் குறைக்கும். பொருளாதாரம் ஏற்றத் தாழ்வுகளோடு இருந்தாலும், அவமானத்தை நிச்சயம் தராது. எதையும் சமாளிக்கலாம் என்கிற மன உறுதியையும் அது வழங்கும்.

தெற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் நல்லதே. அந்தக் குடும்பத்தில் பெண்குழந்தைகள் கலை தொடர்பான துறையில் புகழ் பெறுவார்கள். காரணம் தெற்கு, பெண் ஆதிக்க திசை. இன்னும் சிலருக்கு தாங்கள் விரும்பிய குடும்ப வாழ்க்கை அமையவும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண்களுக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் ஏற்படும்.

மேற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் மேலே சொன்னது போன்ற சிறப்பையே தரும். ஆனால் இது ஆண் ஆதிக்க திசை என்பதால் இது ஆண்களுக்குரிய பலன்களைத் தரும். அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு அல்லது திருப்திகரமான சொந்தத் தொழில், அந்தஸ்து போன்றவை அமையும். அந்த வீட்டின் நவீன பொருட்களின் சேர்க்கை இருக்கும்.

குளியல் – கழிவறை அமைப்புக்கு 90% சதவீதம் சிறப்பைத் தரும் பகுதி வடமேற்கு. இதனை வாஸ்து மொழியில் “வாயுமூலை” என்று அழைப்போம். இந்தப் பகுதியில் குளியலறை அமையப் பெற்றால் வீட்டிற்கு வாஸ்து யோகத்தை அதிகப்படுத்துகிறது.

இதனால் தடையற்ற பொருளாதரம், திருப்திகரமான இல்லற வாழ்க்கை, நல்லவர்களின் நட்பு போன்ற பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. பொதுவாக மேற்கு, வருண திசையாக இருப்பதால், மேற்கு மையமும், வடமேற்கும், குளியலறை அமைப்பதற்கு ஏற்ற இடம்.

இங்கே கூடவே கூடாது !

குளியலறை அமையக் கூடவே கூடாத மூன்று இடங்கள் உள்ளன. அதில் ஒன்று  பிரம்ம ஸ்தானம். அதாவது வீட்டின் வயிற்றுப்பாகம். வீட்டின் மையத்தில் குளியலறை அமைப்பது தவறாகும். இதனால் எண்ணற்ற இன்னல்கள் உண்டாகும்.

அதுபோல மற்ற இரு பகுதிகள் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு. இவ்விடங்களில் குளியலறை-கழிவறை அமைந்தால், மருத்துவ செலவுகள், ஆபத்தான அறுவை சிகிச்சைகள், திடீர் விபத்துகள், பெரும் கடன் தொல்லை, பொருள் இழப்பு போன்றவை அதிகம் தரும்.

எப்படி நிவர்த்தி செய்வது?

சரி. சொந்த வீடாக இருந்தால், இது போன்ற சிறு சிறு குறைகளை எப்படியாவது மாற்றி அமைக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? வாஸ்து குற்றத்துடன் இருக்கிற இவற்றுக்கு என்ன செய்யலாம்?

இதற்கு எளிய நிவர்த்தி முறைகள் உண்டு. தங்கள் வீட்டின் குளியலறை தென்கிழக்கில் அமைந்திருந்து, அதை மாற்ற முடியாத பட்சத்தில், வாட்டர் ஹீட்டரை தென்கிழக்கு மூலையில் மேல் சுவரில் பொருத்த வேண்டும். மற்ற பகுதிகளில் குளியலறை கொண்டவர்கள், வாயுமூலை எனப்படும் வடமேற்கு மூலையின் மேல் சுவரில் வாட்டர் ஹீட்டரைப் பொருத்தலாம். ஈசான்ய மூலையில் (வடகிழக்கு) வாட்டர் ஹீட்டரைப் பொருத்தினால் நல்லதல்ல.

தென்மேற்கில் குளியலறை அமைந்தால் மட்டும், அதற்கான நிவர்த்தி முறைகள் பெரிய அளவில் பலன் தருவதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை. ஆனாலும் வாடகைக்கு இருக்கின்ற வரைக்கும், நீங்கள் குளிக்கும் திசையை வைத்து ஓரளவு எளிமையான பரிகாரம் செய்து கொள்ள முடியும்!

எந்த திசை நோக்கி குளிப்பது?

தெற்கு நோக்கி குளிக்கவே கூடாது. நமது உடலுக்கும்- உள்ளத்துக்கும் தீய விளைவுகள் இதனால் உண்டாகும். பெண்களுக்கு முகப்பொலிவு குறையும். திருமணத் தடையையும் ஏற்படுத்தும். ஞாபக சக்தியும் மங்கும்.

மேற்கு நோக்கியும் குளிக்கக் கூடாது. இது சுறுசுறுப்பைக் குறைக்கும். திடகாத்திரம் தராது. எந்தக் காரியத்திலும் தடை ஏற்படும். அரசாங்க வழிகளில் தொல்லைகள் தேடி வரும். வருமானம் தடைப்படும். உடல்நலமும் சீராக இருக்காது. ஆகவே தெற்கு மேற்கு போன்ற திசைகளை நோக்கிக் குளிப்பதைத் கட்டாயமாகத் தவிர்ப்பதே நல்லது.

கிழக்கு நோக்கித்தான் குளிக்க வேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் வெற்றி. கலைகளில் புகழ், அந்தஸ்து, அரசாங்க வழிகளில் உயரிய பதவிகள் கிடைக்கும். வசீகரமான முக அமைப்பு, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்குக் குடும்ப ஒற்றுமை ஏற்படும். நல்ல நினைவாற்றல், ஞாபக சக்தி, லாபகரமான தொழில் முன்னேற்றம் போன்ற பல சிறப்புகளும் கிடைக்கும்.

கழிவறை அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

கழிவறை அமைப்பால் நமக்கு கிடைக்கின்ற வாஸ்து சிறப்பு ஒன்றே ஒன்றுதான். அதுதான் வாழ்க்கைக்கே அதிமுக்கிய தேவையான ஆரோக்யம்.

கிழக்கு நோக்கி கழிவறையை உபயோகிப்பது மிகக் கொடுமையான உடல் நலக்கேடுகளை தந்திடும்.

மேற்கு நோக்கி உபயோகிப்பது அறுவை சிகிச்சைகளும், மர்மமான நோய்களையும் உருவாக்கும்.

எப்போதும் வடக்கு நோக்கியோ, தெற்கு நோக்கியோதான் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும். இதுவே ஆரோக்கியத்திற்கு ஆதாரம்.

தண்ணீர்க் குழாய், ஷவர் வாஷ் போன்றவற்றைக் கிழக்கு – வடக்கு சுவர்களில் மட்டுமே பொருத்த வேண்டும். இதனால் இயற்கையாகவே கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ குளிக்கத் தொடங்குவோம். குளியல் தொட்டியை மேற்குப் பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும்.

புதிய வீட்டில் எப்படி குளிக்க வேண்டும்?

புதிய வீட்டிற்குச் சென்ற பிறகு முதன் முதலாக குளிப்பதாக இருந்தால், முதலில் மூன்று குடம் தண்ணீரை குழாயில் இருந்து பிடித்துக் குளியலறை முழுவதும் ஊற்றி விட வேண்டும். பிறகு ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் பிடித்து கங்கை, யமுனை, காவேரி போன்ற புனித நதிகளைப் பிராத்தனை செய்து கொண்டே குளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதுவரையில் அந்த நீரில் குடியிருந்த துஷ்ட சக்திகள் வெளியேறிவிடும். இந்த விதிமுறை வாடகை வீட்டிற்குக் குடிபோகிறவர்களுக்கும் கூடப் பொருந்தும்.!

Vijay Vaastu Articles in ENGLISH

மேலும் பல வாஸ்து கட்டுரைகள் படிக்க கிளிக் செய்யவும்!

வாஸ்து ஆலோசனைக்கு கிளிக் செய்யவும!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Vastu Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Vaastu Consultation Contact: K.Vijaya Krishnarau,  Phone Number: 98406 75946, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 7 2013. Filed under Headlines, Home Page special, Photo Gallery, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »