Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

அலைய வைக்கும் சனியை திணற வைத்த விநாயகர்

நிரஞ்சனா

மற்றவர்களை பிடித்து அலைய வைக்கும் சனி, ஒருவரை மட்டும் பிடிக்க முடியாமல் அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா?

சனீஸ்வரரை கலங்கடித்த விநாயகர்

ஒருநாள் கிரக நிலைகளின்படி விநாயகரை சனிபகவான் பிடிக்கவேண்டிய நாள் வந்தது. அதனால் விநாயகரிடம் சென்ற சனிபகவான், “விக்னேஷ்வரா…நாளை தங்களை நான் பிடிக்க வேண்டிய நாள்.” என்று பவ்வியமாக கூறினார்.

“உன்னால் என்னை பிடிக்க முடியாது“ என்றார் விநாயகர்.

“உங்கள் தந்தையையே பாதாள லோகத்தில் அமர வைத்தவன் நான். எவராலும்   என் பிடியில் இருந்து தப்ப முடியாது. ஆகவே நீங்களும் எனக்கு ஒத்துழைப்பு தந்தே ஆக வேண்டும்.” என்று அதிகார தோரணையில் கூறினார் சனிஸ்வர பகவான்.

இனி இவரிடம் பேசினால் வேலைக்கு ஆகாது. இந்த சனிஸ்வரர் பிடியில் இருந்து தப்பித்து விடவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்ட விநாயகர், “அப்படியா..? என் தந்தையையே பிடித்தவரன் நீ என்றால் உனக்கு நானும் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். விதிபடி நாளைதானே என்னை பிடிக்க இருக்கிறாய்.?” எனக் கேட்டார் விநாயகர். “ஆமாம்” என்றார் சனீஸ்வரர்.

நாளை நீ வந்து என்னை பிடிக்க போவதை ஏதோ வேலையில் நான் மறந்துவிட போகிறேன். அதனால், “நாளை வருகிறேன்“ என்று எழுதி வைத்துவிட்டு போ. நானும் ஞாபகத்தில் வைத்திருப்பேன்.” என்றார் விநாயகர்.

“அதுவும் சரிதான் நான் ஒரு சுவடியில் எழுதி தருகிறேன்.” என்றார் சனீஸ்வரர்.

“சுவடி வேண்டாம். அதை நான் எங்காவது வைத்துவிட்டால் என்ன செய்வது.? அதனால்…. நீ என் முதுகில் எழுதிவிடு.” என்றார் விநாயகர்.

சனீஸ்வரரும் விநாயகரின் முதுகில், “நாளை வருகிறேன்.” என்று “சம்மன்” எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்.

மறுநாள் –

சொன்னபடி விநாயகனை பிடிக்க வந்துவிட்டார் சனி பகவான்.

ஒன்றும் தெரியாததை போல, “என்ன விஷயம்?“ எனக் கேட்டார் விநாயகர்.

“உங்களை பிடிக்க வந்திருக்கிறேன்.” என்றார் சனீஸ்வரர்.

“முன்னறிவிப்பின்றி இன்று ஏன் வந்தாய்.?” என்றார் ஆனைமுகன்.

“இன்று வருவதாக நான் உங்கள் முதுகில் எழுதி உள்ளேனே.?” என்றார் சனி பகவான்.

“அப்படியா எழுதினாய்.?” எங்கே படி அதை.” என்று முதுகை காட்டினார் விநாயகர்.

“இதோ, “நாளை வருகிறேன்“ என்று தெளிவாக நான் எழுதி இருக்கிறேனே.” என்றார் சனி பகவான்.

“அதைதான் நானும் கேட்கிறேன். “நாளை வருகிறேன்” என்று எழுதி வைத்துவிட்டு, இன்று ஏன் வந்து நிற்கிறாய்.? போ… நீ எழுதி வைத்தபடி நாளை வா.” என்றார் விநாயகர்.

சனி பகவான் திகைத்துவிட்டார்.

வாக்கு தவறாத சனி பகவான் மறுநாளும் வர, மீண்டும் அவருக்கு தன் முதுகை காட்டினார் விநாயகர். “நாளை வருகிறேன்” என்பதை படித்துவிட்டு அதன் மறுதினம் மட்டுமல்ல, பலமுறை விநாயகரை பிடிக்க வந்து முடியாமல் திரும்பி சென்றார் சனி பகவான்.

இப்படியே விநாயகரை சனி பகவான் பிடிக்க வேண்டிய காலமும் ஓடிவிட்டது. கடைசிவரை விநாயகரை சனி பகவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஏன் இந்த சம்பவம் சொல்கிறேன் என்றால், ஜாதகத்தில் சனிஸ்வரரால் பாதிப்பு இருந்தால், விநாயகரை வணங்கினால் சனிபகவானால் வரும் இன்னல்கள் நீங்கும்.

அதுபோல ஒருசமயம்,

சனிஸ்வர பகவானுக்கு விநாயகர் முதுகை காட்டியதுபோல வேலூர் மாவட்ட மக்களிடம், “ஒரு மாட்டு வண்டி என் மேல் ஏறிவிட்டது“ என்று ஒரு சிறுவன்  ரத்தம் சொட்ட சொட்ட தன் முதுகை காட்டினான். அந்த சம்பவத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

சுயம்புவாக தோன்றிய பதினோரு விநாயகர்

வேலூரில் இருந்து மேற்கே செல்லும் பெங்களூரு சாலையில் இருந்து 1 கி.மீ. தூரம் சென்றால் சேண்பாக்கத்து செல்வ விநாயகரை தரிசிக்கலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர அமைச்சராக இருந்தவர் துக்கோஜி ராவ். தன் பரிவாரங்களுடன் ரதத்தில் வந்துக் கொண்டு இருந்தார்.  அப்போது, ஒரு மேட்டின் மேல் ரதம் ஏற முடியாமல் திணறி ஏறி இறங்கி சென்றது.

அப்போது ஒரு சிறுவன் வேலூர் மக்களிடம், “என் முதுகில் மாட்டு வண்டி ஏறி விட்டது.” என்று ரத்தம் வடிய வந்து நின்றான். அந்த சிறுவனிடம் மக்கள் விசாரிப்பதற்குள் திடீரென மறைந்தான்.

சிறிது நேரத்தில்  துகோஜிராவும் மற்றவர்களும் வந்தார்கள். ஊர் மக்கள் அமைச்சர் துக்கோஜிராவிடம் விஷயத்தை சொன்னவுடன்,  தாங்கள் வந்த பாதையை திரும்பி சென்று பார்த்தபோது  ரதம் ஏறி சென்ற மேட்டில் இருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறிக் கொண்டிருந்தது.

இதை கண்ட அமைச்சர் துக்கோஜிராவ் அதிர்ச்சியடைந்தார். இந்த இடத்துக்குள் ஏதாவது ஒரு உயிர் இருக்கிறதா? என்று பயந்தார். அதனால் தன் காவலர்களை அழைத்து ரத்தம் வெளியேறிக்கெண்டு இருந்த இடத்தை மிக பக்குவமாக தோண்ட சொன்னார்.

அப்போது, உருவம் ஏதும் இல்லாத ஒர் லிங்கவடிவம் சுயம்புவாக தோன்றி இருப்பதை கண்ட காவலர்கள் பூமிக்கு அடியில் இருந்து அதனை எடுத்தார்கள். இதை கண்ட அமைச்சர், “இது என்ன சிவ லிங்கமா? என்று தன் அருகில் இருந்த காவலர்களிடம் கேட்டபோது,. ஒர் அசரிரீ குரல் ஒலித்தது.

“பூமிதாயின் அரவணைப்பில் விநாயகன் பதினோரு வடிவில் இருந்தார். இப்போது உன்னால் வெளிவந்து இருக்கிறார்.” என்று அசரிரீ குரல் கேட்டது.

தமக்கு விநாயகர் லிங்கஉருவத்தில் காட்சிகொடுத்தார் என்று மகிழ்ந்த அமைச்சர் துக்கோஜிராவ் அத்துடன் சிறுவர் உருவத்தில் விநாயகரே வந்தார் என்பதையும் உணர்ந்துக்கொண்டார். அந்த இடத்திலேயே கோவில் கட்டினார். ரதம், சுயம்புவான விநாயகர் சிலைமேல் ஏறி இறங்கியதால், விநாயகர் சிலையில் ரத சக்கரத்தின் வடு இருக்கிறது.

இயற்கை காற்றுடன் வசிக்கும் செல்வ விநாயகர்

செல்வ விநாயகர் இயற்கை காற்றையும் வெளிச்சத்தையும் விரும்புவதால், இவர் இருப்பிடத்திற்கு மேல்கூரை இல்லாமல் இயற்கை காற்றில் தன் சக்தியை வெளிப்படுத்துகிறார்.

பதினோரு விநாயகரின் பெயர்கள்

1-பால விநாயகர், 2-நடன விநாயகர், 3-கற்பக விநாயகர், 4-ஓம்கார விநாயகர், 5-சிந்தாமணி விநாயகர், 6-மயூர விநாயகர், 7-மூஷிக விநாயகர், 8-வல்லப விநாயகர், 9-சித்திபுத்தி விநாயகர், 10-பஞ்சமுக விநாயகர்,11-செல்வவிநாயகர் என்று பதினோரு விநாயகராக பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். இவரை வணங்கினால் நவகிரகதோஷம் நீங்கும். பொதுவாக நவகிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர் விநாயகர்.

செல்வ விநாயகரின் மகிமையை உணர்ந்து சொன்னார் காஞ்சி மகா பெரியவர்

ஒருசமயம் காஞ்சி பெரியவர் வேலூருக்கு வந்தார். அப்போது மடத்தின் யானை, இக்கோயில் அருகே தன் இஷ்டத்திற்கு இடக்கு செய்தது. அந்த யானையை அதன் பாகன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் பாகனின் கட்டுப்பாட்டுக்குள் அது வரவேயில்லை. இதை கண்ட காஞ்சி பெரியவர், செல்வ விநாயகர் கோவிலில் 108 சிதறு தேங்காய் உடைக்கச் சொன்னார். சிதறு தேங்காய் உடைப்பதை பொறுமையாக நின்று பார்த்த பிறகு அமைதியாக திரும்பி சென்றது யானை. விஷமம் செய்த யானை விநாயகரே என்றும்,  காஞ்சி பெரியவரிடம் செல்வ விநாயகர் கோவிலில் உடைத்த  சிதறு தேங்காயை யானை விரும்பி கேட்டு வாங்கியதாக ஒரு தகவலும் உண்டு.

இந்த வேலூர் செல்வ விநாயகர், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறையை தீர்க்கவே பதினோறு உருவத்தில் காட்சி கொடுக்கிறார் செல்வ விநாயகர்.

செல்வ விநாயகரை வணங்கினால் தலைமுறை தலைமுறைக்கு பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.  சனிஸ்வரரால் ஏற்படும் இன்னல்களில் இருந்தும் விடுப்படுவோம்.

முதல் பணியை விநாயகரை வணங்கி தொடங்கினால் மற்ற எல்லா வேலைகளும் வெற்றியாக அமையும். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனை வணங்கி ஆரம்பிக்கும் எல்லா சுப நிகழ்ச்சிகளும் சுபமாகவும், சுலபமாகவும், விரைவாகவும் நடைப்பெறும்.!

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்விபதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104

bhakthiplanet
bhakthiplanet

Posted by on Sep 10 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »