Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஜாதகத்தை வைத்து வணங்கினால் தோஷம் நீக்கும் அச்சிறுபாக்கம் விநாயகர்

நிரஞ்சனா

சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் சென்னையிலிருந்து 94 கி.மீ தொலைவில் இருக்கிறது அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில்

அச்சிறுபாக்கம்  என்கிற இந்த ஊரின் பெயருக்கு காரணம் இருக்கிறது. அத்துடன் தடைபடும் காரியத்தை தடையில்லாமல் நடக்க அருள் புரியும் தெய்வம் குடியிருக்கும் சிறந்த பரிகார ஸ்தலம் இதுதான். அவற்றை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக இக்கட்டுரையின் நாயகனான அச்சுமுறி விநாயகரின் விளையாட்டை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மூன்று பறக்கும் கோட்டைகள்

தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி  இவர்கள் அசுர சகோதரர்கள். அசுரர்கள் என்றாலே அவர்கள் தேவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடியவர்கள்தானே?. இந்த அசுரர்களும் அந்த வேலையைதான் செய்தார்கள். மூவரும் மூன்று பறக்கும் கோட்டைகளை உருவாக்கி கொண்டார்கள். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான் என்பார்களே, அதுபோல பறக்கும் கோட்டையை வைத்துக்கொண்டு இவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. சாதாரணமாகவே தேவர்களை துரத்தி துரத்தி அடிப்பவர்கள், இப்போது பறக்கும் கோட்டையின் உதவியால் பறந்து பறந்து தேவர்களை ரணகளமாக்கினார்கள் இந்த அசுரர்கள்.

இதனால் அலறி அடித்துக்கொண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தார்கள் தேவர்கள். அசுரர்களின் அட்காசத்திற்கு முடிவுகட்ட எண்ணி ஈசன், ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் இதை பற்றி ஆலோசித்து யுத்தம் செய்து வீழ்த்துவதுதான் ஒரே வழி என தீர்மானித்து, போருக்கு தயாரானார்.

சூரியனையும் சந்திரனையும் தேர் சக்கரங்களாக மாற்றி, நான்கு வேதங்களை குதிரையாக்கி, பிரம்ம தேவர், அந்த தேருக்கு சாரதியாக இருந்தார். மேருமலையை வில்லாக்கி அந்த வில்லுக்கு வாசுகியை நாணாக்கி, ஸ்ரீமந் நாராயணனை அம்பாக்கி போருக்கு புறப்பட்டார் சிவபெருமான்.

தேர் புறப்பட்ட சில விநாடிகளில் அதன் அச்சு முறிந்தது. அதனை சரி செய்ய எவ்வளவோ முயன்றார்கள் தேவர்கள். ஆனால் முடியவில்லை.

இது என்ன அபசகுனம்? என திடுக்கிட்டார்கள் தேவர்கள்.

ஆனால், போரில் வெற்றிக்கு தேவையான ஏதோ முக்கியமான ஒன்றை மறந்துவிட்டு புறப்படுகிறோம் என்பதை உணர்த்துவதற்கு இது சுபசகுனம்தான் என்பதை புரிந்துக்கொண்டார் ஈசன்.

“விநாயகன். அவசரத்தில் அவனை மறந்தோம். உறுதியான பிரமாண்ட தேரும், எதிரியை தாக்கும் வில்லும்-அம்பும், களத்தில் நின்று போராட வீரர்களும், படையை வழி நடத்த தலைவனும் இருந்தால் மட்டும் போதுமா? வெற்றியை தருகிற சக்தி வேண்டாமா?. அந்த சக்திதான் ‘சக்தி’ படைத்த விக்னேஷ்வரன். விக்னங்களை தீர்க்கும் விநாயகன்.” என்றார் சிவபெருமான்.

“விநாயகன் எங்கே? அவரை மறந்தது தவறுதான். நாங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு அழைத்து வருகிறோம்.” என்றார்கள் தேவர்கள்.

“விநாயகன் இங்கேதான் இருக்கிறான். ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னதாக விநாயகரின் ஆசியை பெற்ற பிறகே எந்த செயலையும் தொடங்க வேண்டும் என்றும், அப்படி விநாயகனை வணங்கி செய்த செயல்களில் எந்த தடையிருந்தாலும் அதனை விக்னேஷ்வரன் தகர்த்தெறிவான் என்ற வரத்தையும் நானே தந்தேன். வரம் தந்த நானே அதை மறந்தேனே என்ற கோபத்தில் நம் தேரின் அச்சு முறித்ததும் அவன்தான்.” என்றார் ஈசன்.

இந்த வரத்தை கொடுத்த ஈசனே போருக்கு செல்லும் முன்னதாக கணபதியை வணங்க மறந்தார். காரணம், அவசரம் – பதட்டம்.

பதட்டத்தில் தங்களையே மறப்பார்கள் சிலர். அதனால்தான் பதறும் காரியம் சிதறும் என்றார்கள் பெரியவர்கள். இதில் ஈசனும் விதி விலக்கு இல்லை. அசுரர்களை அழிக்கவேண்டும் என்ற பதட்டத்தில் ஈசன், தன்னிடம் வரம் பெற்ற மகனையே மறந்து, போருக்கு சென்றால் எப்படி? வரம் தந்தவரே அதனை மறக்கலாமா என்ற எண்ணத்தில் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்றுதான் தன் தந்தையின்  தேர் என தெரிந்தும் அதன் அச்சை முறித்தார் விநாயகர்.

எல்லாம் தெரிந்த ஈசனின் திருவிளையாடலாகவும் இது அமைகிறது. இதனால்தான் விநாயகருக்கு, “அச்சுமுறி விநாயகர்” என்ற பெயர் ஏற்பட்டது.

அத்துடன், தேரின் அச்சு முறிந்த இடம்தான் இன்று “அச்சுறுபாக்கம்” என்று விளங்குகிறது என்கிறது ஸ்தல புராணம்.

சிவபெருமான், அந்த மூன்று அசுரர்களையும் வீழ்த்தி, தேவர்களின் ஆட்சிக்கு எந்த பங்கமும் வராமல் காத்ததால் ஈசன் இந்த ஆலயத்தில் “ஆட்சீசுவரர்” என்ற பெயர் பெற்று விளங்குகிறார்.

இங்கு வீற்றிருக்கும்  அம்பாள், உமைஆட்சீஸ்வரர்  என்று அழைக்கப்படுகிறாள்.

பரிகாரம்

அச்சறுபாக்கம் வந்து அச்சுமுறி விநாயகரை வணங்கினால் வாழ்வில் எந்த இன்னல்களும் ஏற்படாது. அத்துடன், ஆட்சிபுரீஸ்வரரையும், உமைஆட்சீஸ்வரியையும் வணங்கினால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அச்சுமுறி விநாயகருக்கு வியாழ கிழமையில் அறுகம்புல் மாலை அணிவித்து, தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி  தீபம் ஏற்றினால் தடைபடும் அனைத்து காரியங்களும் விரைவாக தடைகள் நீங்கி சுபமாக நடக்கும்.

அச்சுமுறி விநாயகரிடம் தங்கள் ஜாதகத்தை வைத்து வணங்கினால் ஜாதகத்தில்   இருக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இது, பயன் அடைந்தவர்கள் சொல்கிற அனுபவ பரிகாரம்.

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிடகட்டுரைபடிக்கவும் 

வாஸ்துகட்டுரைபடிக்கவும்

ஆன்மிகபரிகார கட்டுரைபடிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டுஇராசிபலன்கள் CLICK செய்யவும் 

சனிபெயர்ச்சிபலன்களுக்குஇங்கே CLICK செய்யவும்

சிவன்கோயி்ல்,அம்மன்கோயில்,முருகன்கோயில்,பெருமாள்கோயில்,பிறகோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவசஜோதிடகேள்விபதில்பகுதிக்குகிளிக்செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

N. JOTHI,

Advocate,

319. Law Chambers

Madras High Court,

Chennai – 104

Posted by on Sep 2 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »