பக்தர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் வெக்காளியம்மன்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, பிறகு இங்கிருந்து சிறிது தூரத்தில் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலை அடையலாம்.
அன்னை சக்திதேவி தாயாக இருந்து தன் பக்தர்களை காக்கிறாள். அதுபோலேவே, வெக்காளியம்மனாக வீற்றிருக்கும் அம்பாள், தன் நலனைவிட அவளின் பிள்ளைகளான நமது நலனே பெரியேதேன நமக்கு நல்லவழி காட்டுவதே கடமை என, தான் வாசம் செய்யும் இடத்திற்கு மேற்கூரையும் இல்லாமல் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் இருக்கிறாள்.
தனது வசிப்பிடத்திற்கு மேற்கூரை தேவையில்லை என்று பிடிவாதத்துடன் காளியம்மன் இருப்பது ஏன்? எதனால் வானம் பார்த்தவாறு வெக்காளியம்மன் இருக்கிறாள் என்பதை பற்றி தெரிந்துக்கொண்டால், அன்னையின் தியாகத்திற்கு அளவே இல்லை என்பதை அறிய முடியும்.
சாரமா முனிவர்
உறையூரை பராந்தக சோழன் என்பவர் ஆண்டு வந்தார். இவர் ஆட்சி காலத்தில் சாரமா முனிவர் என்ற ஒரு முனிவர் இருந்தார். அம்முனிவர் சிறந்த சிவபக்தர். அதனால், தாயுமானவர் சுவாமிக்கு அணிவிக்க தேவையான மலர்களை வளர்க்க ஒரு அழகிய நந்தவனத்தை உருவாக்கி இருந்தார்.
சில நாட்களாக தனது நந்தவனத்தில் மலரும் பூக்கள் காணாமல் போவதை அறிந்தார். இறைவனுக்காக அமைக்கப்பட்ட தனது நந்தவனத்தில் யார் பூக்களை திருடுவது என்பதை கண்டுபிடிக்கவேண்டும் என்று இரவு பகல் பாராமல் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு இருந்தார் முனிவர்.
“பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பதுபோல, நந்தவனத்தில் மலர்களை பறித்து திருடுபவனை ஒருநாள் கையும் களவுமாக பிடித்தார் சாரமா முனிவர்.
திருடனை பிடித்தும் அவனுக்கு தண்டனையை தர முடியவில்லை. காரணம், முனிவரின் நந்தவனத்தில் மலர்களை பறித்து திருடுபவன், அந்த மலர்களை அரசரிடம் சேர்த்துவிடுவான். இந்த விஷயம் அரசருக்கு தெரிந்துதான் நடக்கிறது என்பதை கேள்விபட்ட முனிவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அரசரை சந்தித்து முறையிட்டார் முனிவர். ஆனால் அரசரோ, சாரமா முனிவரை அலட்சியப்படுத்தினார்.
“நீ நந்தவனம் அமைத்திருக்கும் இடம் என் ஆட்சிக்கு உட்பட்ட இடம். ஆகவே அந்த இடத்தில் எது இருந்தாலும் அது எனக்கு சொந்தமானது.” என்றார் அரசர்.
“இந்த நாடே உமக்கு சொந்தம்தான். அதற்காக இடுகாட்டில் இருக்கும் எலும்புகளையும், மண்டை ஒட்டையும் உங்கள் அரண்மனையில் வைத்துக்கொள்ளவில்லையே” என்று வாதிட்டார் முனிவர்.
“நீ பேசுவது ஒரு அரசனிடம். அந்த பயம் உன்னிடம் இருக்கட்டும்” என்றார் அரசர்.
“நெருப்பு யாரிடம் பயப்பட போகிறது.? நெற்றிகண்ணில் நெருப்பை கொண்ட ஈசனின் அடியவர்கள் நாங்கள். அந்த ஈசனே குற்றம் செய்தாலும், குற்றத்தை குற்றம் என அஞ்சாமல் சொல்வோம். நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானையே எதிர்த்த நக்கீரரும் ஒரு சிவனடியார்தான். அச்சுறுதல்களுக்கு அஞசாதவர்கள் சிவபக்தர்கள்.” என்றார் முனிவர்.
இதை கேட்ட அரசர் பெரிதும் கோபம் கொண்டார்.
“நீ தினமும் கோயிலில் பூஜை செய்பவன் என்பதால் உனக்கு தண்டனை தராமல் விடுகிறேன். ஓடிவிடு” என்று அதிகார மமதையில் மரியாதை குறைவாக பேசினார் அரசர்.
தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல அரசர் தன் வாய்க்கொழுப்பால் ஏழரையை வரவழைத்துக்கொண்டார்.
அரண்மனைவிட்டு வெளியே வந்த சாரமா முனிவர், நியாய சபையில் நியாயம் கிடைக்காததால். சாரமாமுனிவர், தாயுமானவரான ஈசனிடமே முறையிட விரைந்து வந்தார். தாயுமானவரிடம் முறையிட்டு கலங்கினார்.
தன் அடியவரான ஒரு முனிவரின் கண்ணீர், ஈசனை பெரும் கோபத்துக்கு ஆளாக்கியது. சிவபெருமானின் அசரிரீ ஒலித்தது.
“சாரமா கலங்காதே. அவனுக்கு இந்த உறையூர் சொந்தம் என்கிற ஆணவத்தில் இருக்கிறான். உன்னை கண்ணீரில் நிற்க வைத்த அவன் ஆட்சியில் இனி தண்ணீர் இருக்காது. மழை கூட மண்தான்.” என்றார் ஈசன்.
ஈசனின் ஆணைப்படி உறையூரில் மண்மாரி பொழிய வைத்தது இயற்கை.
கூரை இல்லாத கோயிலில் வெக்காளியம்மன்
மண்ணே மழையாக கொட்டியதால் வீடுகளை மணல் மூடியது. இதனால் எதுவும் அறியாத அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். வீடு-வாசல்களை இழந்தார்கள். இயற்கையின் சீற்றத்தை எதிர்த்து ஒரு அரசனால் என்ன செய்துவிட முடியும்?. ஏதோ தெய்வ குற்றம் நடந்து இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துக்கொண்டார்கள். அதனால் தங்களின் தெய்வமான உறையூர்
வெக்காளியம்மனிடம் முறையிட்டார்கள் மக்கள்.
தந்தையிடமிருந்து நாம் ஏதேனும் எதிர்பார்த்தால் அதை அம்மாவிடம் சொல்லிதானே கேட்க சொல்வோம். அதைதான் செய்தார்கள் உறையூர் மக்கள். “எவனோ ஒருவன் செய்த தவறுக்கு நம் பிள்ளைகளை தொந்தரவு செய்யலாமா?” என்று காளியம்மன், தாயுமானவரிடம் எடுத்துச் சொன்னாள்.
“மண்மாரி பொழிவதால் நம் குழந்தைகளான மக்கள், வசிப்பதற்கு வீடு கூட இல்லாமல், மழையிலும் – வெயிலிலும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்கும் வரை, நான் தங்கும் இந்த இடத்திற்கு கூரை அமைத்துக்கொள்ள மாட்டேன்”. என்று ஈசனிடம் பிடிவாதமாக சொல்லிவிட்டாள் வெக்காளியம்மன்.
இதனால் சிவபெருமானின் கோபம் தணிந்தது. அமைதி அடைந்தார். மண்மாரி பொழிவதை நிறுத்தினாள் வெக்காளியம்மன்.
“உடுத்தி கொள்வதற்கு ஒரு நல்ல ஆடை கூட இல்லாமல் எத்தனையோ ஏழைகள் இந்திய கிராமங்களில் இருக்கிறார்கள். அவர்களின் நிலை மாறும்வரையில் நான் மேலாடை அணிய மாட்டேன்” என்றாரே அண்ணல் காந்தியடிகள்,
அதுபோல, பாதுகாப்பாக வசிப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாமல் பலர் துன்பத்தில் இருப்பதால், அவர்களின் நிலையும் மாற வேண்டும் என்றுதான் இன்றுவரையிலும் தன் கோயிலுக்கு கூரை அமைத்துக்கொள்ளாமல் மழையிலும் வெயிலிலும் இருக்கிறாள் காளியம்மன்.
ஆனாலும் வெக்காளியம்மனின் அருளாசியால் இன்று இந்த ஊர்மக்கள் சகலநலமுடன் இருக்கிறார்கள்.
நாம் வசதியாக இருந்தும் அம்மன் தன் வசிப்பிடத்திற்கு கூரை அமைத்தக்கொள்ளாமல் வெயிலையும் – மழையையும் பொருட்படுத்தாமல் இருக்கிறாளே என்று பக்தர்கள் கவலைப்படுகிறார்கள்.
இருந்தாலும் வெக்காளியம்மன் தனக்கு மேல் கூரை வேண்டும் என்று இதுவரை உத்தரவு தரவில்லை. அதனால் அன்றிலிருந்து இன்றுவரை அம்மனுக்கு ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் விதவிதமான அபிஷேகங்கள் செய்கிறார்கள் பக்தர்கள்.
வெக்காளியம்மனை வணங்கினால் ஆபத்துகள் அண்டாது. அம்மனுக்கு அபிஷேக பொருட்களை வழங்கினால், அம்மனின் மனம் குளிரும். இதனால் நம் வாழ்க்கையில் வசந்தம் வீசும். தன் பக்தர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை உண்டாக்குவாள் வெக்காளியம்மன்.
பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved