கண்ணப்ப நாயனார்
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 16
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன்.
“நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் நாம் உணவு தரலாம்“ என்று கூறி கொண்டே, “சாமி உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன். நான் வரும்வரை நீங்கள் பத்திரமாக இருங்கள். போன வேகத்திலேயே வந்து விடுவேன்” என்று சிவலிங்கத்திடம் கூறியபடி பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான் திண்ணன். பொன்முகலி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள் திண்ணனும் நாணனும். அங்கு திண்ணனின் நண்பரான காடனிடம் திண்ணன் முன்பே சொல்லி வைத்தது போல சமைப்பதற்கு காடன் தீ மூட்டி வைத்திருந்தான். இதை கண்ட திண்ணன், “சமைப்பதற்கு நெருப்பு தயாராக இருக்கிறதா?” என்று கூறிக்கொண்டே அந்த நெருப்பின் அருகில் சென்றான். அங்கு வேட்டையாடி வைத்திருந்த பன்றியை பக்குவமாக அறுத்து அதை சுத்தமாக தண்ணீரில் கழுவி சமைப்பதற்காக தயார் செய்தான் திண்ணன்.
திண்ணணின் சமைக்கும் அவசரத்தை பார்த்த நாணனும், காடனும் மகிழ்ச்சியடைந்தார்கள். “நமக்காக என்னமா சமைக்கிறான். நம் பசியை புரிந்துக்கொண்டான் திண்ணன்.” என்று நாணனிடம் காடன் சொன்னான்.. திண்ணன் பன்றி இறைச்சியை பக்குவமாக நெருப்பில் வதக்கி சமைத்தான். இராமாயணத்தில் சபரி என்ற மூதாட்டி ருசி பார்த்து ருசிபார்த்து ஸ்ரீராமருக்கு சாப்பிட பழங்கள் தந்தாலே அதுபோல திண்ணன், பன்றியின் தசைபகுதியை சமைத்து தன் வாயில் போட்டு பல்லால் மட்டும் கடித்து பார்த்து ருசியாக இருப்பதை மட்டும் ஒரு இலையில் வைத்தான்.
இதை கண்ட திண்ணனின் நண்பர்கள், “இவன் என்ன சாப்பிடாமல் வாயில் வைத்து ருசி பார்த்துவிட்டு இலையில் வைக்கிறானே” என்று காடன், நாணனிடம் கேட்டான். மலைமேல் இருக்கும் குடுமிசாமியை பார்த்ததில் இருந்தே திண்ணனின் போக்கே சரியில்லை. நான் நினைக்கிறேன் திண்ணனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் நாணன்.
அவர்களின் பேச்சு திண்ணனின் காதில் விழவில்லை. அந்த அளவுக்கு தன் வேலையில் மும்முரமாக இருந்தான். அவசர அவசரமாக பன்றிகறியை சமைத்து ஒரு இலையில் வைத்துக்கொண்டான். இத்துடன் கொஞ்சம் பூக்களையும் பறித்துக்கொண்டான். ஒரு கையில் பன்றிகறி, மறு கையில் பூக்கள். பிறகு தன் வாயில் கொஞ்சம் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டு திருகாளத்தி மலையை நோக்கி நடந்தான். “அடடா. இவன் இத்தனை நேரம் சமைத்தது நமக்காக இல்லையா. மலை மீது உள்ள குடுமி சாமிக்குதானா” என்று புரிந்துக்கொண்டார்கள் நண்பர்கள்.
மலைமேல் வேகமாக ஏறினான் திண்ணன். இதையெல்லாம் பார்த்த திண்ணனின் இரண்டு நண்பர்கள், இனி நாம் இவன் பின்னால் போனால் நம்மையும் பைத்தியகாரர்களாக்கிவிடுவான். முதலில் நாம் ஊருக்கு திரும்பி சென்று, திண்ணனின் தந்தையையும் மற்றவர்களையும் அழைத்து வருவோம்.” என்று கூறி அவர்கள் ஊருக்கு திரும்பி சென்றார்கள்.
காளாத்தி மலைமேல் இருக்கும் சிவலிங்கத்தின் அருகில் வந்தான் திண்ணன். தன் வாயில் இருந்த தண்ணீரால் சிவலிங்கத்தின் மேல் குட்டி அருவியைபோல் தண்ணீரால் அபிஷேகித்தான். இடது கையில் இருந்த மலர்களால் சிவலிங்கத்திற்கு பூக்களை சமர்பித்தான். வலது கையில் இருந்த பன்றி இறைச்சியை சிவலிங்கத்தின் அருகில் வைத்து, “சாப்பிடு சாமி.. நானே பக்குவமாக சமைத்து வந்திருக்கிறேன். நீ சாப்பிடு” என்று குழந்தையிடம் “சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுவது போல கெஞ்சினார் திண்ணன்.
சிவலிங்கத்தின் அருகிலேயே அமர்ந்தான். “இனி உனக்கு காவல் நான்.” என்று கூறி, அந்த மலையிலேயே உட்கார்ந்திருந்தான். இரவுபொழுது வந்தது. காட்டில் தனியாக இருக்கிறோமோ என்று சிறிதும் பயம் இல்லாமல் தைரியமாக இருந்தான் திண்ணன். அந்த தைரியத்தை யார் கொடுத்தது.? நிசசயம் இறைவன்தான். ஆம். மன தைரியம் என்று முரடனுக்கு இருக்கும். ஆனால் மன உறுதி – மன தெளிவு என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்குதான் அமையும். அத்துடன் தன்னை சார்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும்போது மரண படுக்கையில் இருந்தவன் கூட, தன் குடும்பத்திற்காக வாழ வேண்டும் என்று எண்ணி தன் உயிரை எமனிடம் இருந்து காப்பாற்ற போராடி பிழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதுபோல்தான், தனக்கு பிடித்த சிவபெருமான் தனியாக இருக்கறார். அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் புலியும்,சிங்கமும் விஷபாம்பும் இருக்கும் மலைகாட்டில், வெறும் வில் அம்புடன் திண்ணன் மனஉறுதியுடன் தூங்காமல் இருந்தான்.
மறுநாள் விடிந்தது. வானத்தில் சூரியனை கண்டதும் குயில் கூவியது. பறவைகள் பறந்தது. விடிந்துவிட்டது, சிவபெருமானுக்கு சாப்பிட ஏதாவது தரவேண்டும். அதற்கு நாம் வேட்டைக்கு போக வேண்டும்.” என்று வில்லையும், அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்றான் திண்ணன்.
திண்ணன் சென்ற சில நிமிடத்திலேயே திருகாளாத்தி மலையில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வழக்கமாக தினசரி பூஜை செய்யும் சிவகோசாரியார். அந்த இடத்திற்கு வந்தார் சிவலிங்கத்தின் அருகில் பன்றி இறைச்சி இருப்பதை கண்டு திடுகிட்டு, கடும் கோபமாக, “யார் இந்த அபசாரம் செய்தது.?” என்று திட்டிக்கொண்டே அந்த ஆலயத்தின் ஓரத்தில் இருந்த துடைப்பத்தால் சிவலிங்கத்தின் அருகில் இருந்த பன்றிகறியை பெறுக்கி தள்ளி தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை கழுவினார்.
பிறகு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, பூக்களை அணிவித்து தீபராதனை செய்து வணங்கி சென்றார் சிவகோச்சாரியார். சிவகோச்சாரியார் புறப்பட்டு சென்ற சில மணிநேரத்தில் திண்ணன் மீண்டும் தன் வாயில் தண்ணீரை வைத்துக்கொண்டு, கையில் இறைச்சியையும், இன்னொரு கையில் பூக்களையும் கொண்டு வந்தான்.
இங்கே சிவலிங்கத்திற்கு புத்தம் புதிய மலர்கள் அணிந்திருப்பதை கண்டு கோபத்தோடு, “எவன் என் குடுமி சாமிக்கு இப்படி அலங்கோலம் செய்தது. நான் இருக்கும் வரை உன்னை நான்தான் பார்த்துக்கொள்வேன்.” என்று கூறி தன் கால்களால் சிவலிங்கத்தின் மேல் இருந்த பூக்களை எல்லாம் நீக்கினார்.
இப்படி சிவலிங்கத்தின் மேல் கால் வைப்பது தவறு என்று திண்ணனுக்கு தெரியாது. தாயின் அரவனைப்பில் இருக்கும் குழந்தை தாயை எட்டி உதைத்தால் அது தவறு என்று தாய் நினைப்பாளா? அதுபோல்தான் சிவபெருமானும் நினைத்திருப்பார் போல.
பழைய பூக்களை எடுத்துவிட்டு தன் வாயில் இருந்த தண்ணீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு, மறு கையில் இருந்த பூக்களை சிவலிங்கத்தின் மேல் அணிவித்து, இன்னொரு கையில் தயாராக சமைத்து வைத்திருந்த பன்றி கறியை சிவலிங்கத்தின் அருகில் வைத்தான். இப்படியே காலங்கள் ஒடியது.
திண்ணனுக்காக சிவகோச்சாரியாரிடம் வாதாடிய சிவபெருமான்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved